3 August 2013

நான் காதலுக்கு எதிரானவன் அல்ல ஆனால் என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்… சேரன் உருக்கம்

நான் காதலுக்கு எதிரானவன் அல்ல ஆனால் என் மகளுக்கு 
கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்… 
சேரன் உருக்கம்


சென்னை:
நான் காதலுக்கு எதிரானவன் அல்ல...ஆனால் எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). இவர் உதவி இயக்குனர் சந்துரு என்பவரை காதலித்து வருகிறார். இந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் எனது தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தாமினி நேற்று புகார் அளித்துள்ளார்.

இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் எடுத்த திரைப்படங்களை பார்த்தாலே இதை தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

மேலும் தான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல என்றும், தானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான் என்றும் கூறிய அவர், தாமும் தனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றும், மனைவி குடும்பத்தினர் கூட ஏழ்மை நிலையிலிருந்து மேலே வந்தவர்கள்தான் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நானும் எங்களது குழந்தைகளை ஏழை, பணக்காரன், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்று சொல்லி அதன்படியே வளர்த்துள்ளோம்.எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த பையன் ( சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள். உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு...நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன்.

இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள்.

ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே...?" எனக் கூறிய சேரன் அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் மல்க பேட்டியை முடித்துக்கொண்டார்.

சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

சேரன் மனைவி மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், சேரன் மீது அவருடைய மகள் தாமினி புகார் கொடுத்ததை தொடர்ந்து சேரன் மனைவி செல்வராணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் காரணமாக  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சேரன் மகள் காதலனுடன் ஆஜர்

இதனிடையே இயக்குனர் சேரன் மகள் தாமினியை காதலிக்கும் உதவி இயக்குனர் சந்துரு இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்துரு, "சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று அழைத்துச் சென்ற தயாரிப்பாளர் ஒருவர் என்னை கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். உன்னை சினிமாவில் வளர விட மாட்டோம் என்று மிரட்டினார். அப்போது அடியாட்களுடன் அங்கு வந்த சேரன், இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன்.

இதனை கண்டு பயந்த என் குடும்பத்தினர் காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய வந்ததையடுத்து அவர் காலேஜ் போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். இதனை அறிந்த நான் தாமினியை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன்" என்றார்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top