மண்டபம் அருகே விபத்து: மதுரை கார் டிரைவர் உள்பட 2 பேர் பலி
இராமநாதபுரம், செப். 24–
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ், மண்டபம் அருகே உள்ள வேதாளை பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது, எதிரே மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி ஒரு கார் வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக காரும்–அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய பஸ் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்களை மீட்க முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மண்டபம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை பெரும் சிரமத்துக்கிடையே மீட்டனர்.
விபத்தில் கார் டிரைவர் மற்றும் ஒரு பெண் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் காருக்குள் இருந்த 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் என்பவரும் காயமடைந்தார். அவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவர் மண்டபம் மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் தினக்கூலி பணியாளராக வேலைபார்த்து வந்தார்.
விபத்து குறித்து மண்டபம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காரில் வந்தவர்கள் பெங்களூரை சேர்ந்த சந்தானம் அவரது மனைவி சுபலட்சுமி (வயது60) என தெரியவந்தது.
இவர்கள் மதுரையிலிருந்து ரபீக்ராஜா டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த காரை வாடகைக்கு எடுத்து இராமேசுவரம் வந்துள்ளனர். இந்த காரை அழகர்கோவில் சாலையில் உள்ள காதக்கிணறை சேர்ந்த டிரைவர் தங்கப்பாண்டி ஓட்டி வந்துள்ளார்.
இந்த விபத்தில் அவரும், சுபலட்சுமியும் பலியாகி விட்டனர். சந்தானம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பஸ்சில் இருந்த கண்டக்டர் காசிநாதன் என்பவரும் விபத்தில் காயமடைந்தார். இவர் பணி முடித்து வீட்டுக்கு செல்லும்போது விபத்தில் சிக்கினார்.
0 comments