14 August 2013

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது : 18 வீரர்கள் பலி?

இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது
 18 வீரர்கள் பலி?


மும்பை: 

            மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் நேற்று நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கப்பலின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. அதில் இருந்த கடற்படை வீரர்கள் பலர் கடலில் குதித்து தப்பினர். 

3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை நிறுத்தி வைக்க மும்பை துறைமுகத்தில் தனி இடம் உள்ளது. ரோந்து பணிகளில் ஈடுபடாத நேரத்தில் போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இங்கு நிறுத்தி வைக்கப்படும்.

கடற்படையின் சிந்து ரக்ஷா என்ற நீர்மூழ்கி கப்பல், பாதி வெளியில் தெரியும் படி நேற்று இங்கு நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் இந்த நீர்மூழ்கி கப்பலில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. தெற்கு மும்பை முழுவதும் இந்த சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளில் கப்பல் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொலை தூரங்களில் இருந்தவர்களுக்கும் தெரியும் வகையில் பெரிய அளவில தீ ஜுவாலையுடன் கூடிய ஒளிபிழம்பு ஏற்பட்டது.

இந்தியா கேட் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த தீயணைப்பு துறை துணை தலைவர் ரஹன்டேலுக்கும் வெடி சத்தம் கேட்டது. கடற்படை கப்பல்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து பயங்கர தீயும் புகையும் வருவதை கண்ட அவர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். மும்பை துறைமுக தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 16 வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து நீர்மூழ்கி கப்பலில் பரவிய தீயை அணைக்க போராடினர்.

இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலை 3 மணிக்கு தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்டவுடன் நீர்மூழ்கி கப்பலில் இருந்த பல வீரர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர். சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நீர்மூழ்கி கப்பலில் 3 அதிகாரிகள் உள்பட மேலும் 18 வீரர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீரர்களை மீட்கும்வரை ஓயமாட்டோம் என கடற்படை செய்தி தொடர்பாளர் பிவிஎஸ் சதீஷ் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது. விபத்துக்குள்ளான கப்பலில் பலவிதமான போர்க் கருவிகள் இருந்தன. அவையும் தீயில் கருகி நாசமாயின.

இந்திய கடற்படைக்காக அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில் உள்ள அணு உலைகள் கடந்த வாரம் இயக்கிவைக்கப்பட்டன. இந்திய கடற்படை வரலாற்றில் இது மிகவும் முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மர்மமான முறையில் வெடித்து நாசமானது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நாசவேலை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்றும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top