14 December 2013

தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள் - 312 முக்கிய அறிவிப்புகள்: கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வெளியிட்டார்

தமிழகம் முழுவதும் நலத்திட்டங்கள் - 312 முக்கிய அறிவிப்புகள் 
கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா வெளியிட்டார் சென்னை

                 முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் 3 நாள் மாநாடு, தலைமைச் செயலகத்தில் 11-ந் தேதி தொடங்கியது.

புதிய அறிவிப்புகள்

இந்த 3 நாட்கள் மாநாட்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக கலந்து கொண்டு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாநாட்டின் நிறைவையொட்டி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக 312 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூடுதல் அதிகாரம்

சென்னை போலீஸ் துணை கமிஷனருக்கு இருக்கும் அதிகாரம் போல், குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 107, 108, 110 ஆகிய பிரிவுகளின்படி, அனைத்து நகர துணை கமிஷனர்களுக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் அளிக்கப்படும்.

திருச்சி மாவட்டம் உன்னியூர், கரூர் மாவட்டம் நேரூர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படும்.

காஞ்சீபுரம்

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடுபுதூரில் கடலறிப்பை தடுப்பதற்காக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கல்பட்டு துணை மண்டலத்தை பிரித்து வண்டலூரில் புதிய துணை மண்டலம் உருவாக்கப்படும்.

காஞ்சீபுரம் மாவட்டம் போக்குவரத்தை நிர்வகிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் பதவி, இன்ஸ்பெக்டர் பதவியாக தரம் உயர்த்தப்படும். மறைமலை நகரில் போலீஸ் குடியிருப்பு கட்டித்தரப்படும்.

கொடுங்குற்றம்

திருட்டு, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்கள் தொடர்பாக போலீஸ் நிலையாணைகளில் திருத்தங்கள் கொண்டுவரப்படும். கொள்ளையின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேலும், திருட்டின் அளவு ரூ.3 லட்சத்துக்கு மேலும் இருந்தால் அவை கொடுங்குற்றம் என்று கருதப்படும்.

நெல்லை - அம்பாசமுத்திரம் சாலை, நெல்லை - தென்காசி சாலை, நெல்லை சங்கரன்கோவில் சாலை ஆகியவற்றுக்கு பைபாஸ் சாலைகள் அமைத்துத்தரப்படும்.

மதுரை - கன்னியாகுமரி சாலையில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்துக்கு இணையாக, நெல்லை, பாளையங்கோட்டையை இணைக் கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.

திருவண்ணாமலைக்கு செல்லும் ஒன்பது முக்கிய சாலைகளில் கார் நிறுத்தும் வசதி செய்து தரப்படும்.

இணைப்பு அலுவலர்

அனைத்து மாவட்டங்களிலும், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் கிராமத்தில் உள்ளவர் களிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இருக் கும் ஒரு அதிகாரி, இணைப்பு அலுவலராக (லையசன்) அலுவலராக நியமிக்கப்படுவார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.

கூடுதல் இழப்பீடு

சென்னை போலீஸ் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தும் விதத்தில் கூடுதல் பதவிகள் அனுமதிக்கப்படும்.

வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் சம்பவங்களில், இறப்போரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும், கொடுங்காயமடைந்தோருக்கு ரூ.10 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த தொகை இனி ரூ.2 லட்சம் மற்றும் ஒரு லட்சம் என்றும் முறையே உயர்த்தப்படும்.

நீலகிரி மாவட்ட பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு உடையாக, மாணவர்களுக்கு முழு கால்சட்டையும் (பேண்ட்), “புல்” கை சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், ஓவர் கோர்ட்-ம் அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு

அரசு ஊழியர்களுக்கு மலைவாழ் படி மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 ஆக உயர்த்தப்படும். குளிர்கால படி மாதமொன்றுக்கு ரூ.500 ஆக உயர்த்தப்படும்.

சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்.) போலீசாருக்கு கடும்பணி படியாக, மாதமொன்றுக்கு ரூ.900 அனுமதிக்கப்படும்.

அம்மா உணவகம்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிளாக் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் நிலத்தடி கழிவுநீர் அகற்றும் முறை கொண்டு வரப்படும். திருவள்ளூரில் புதிய நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஏரிக்கு நீர் சப்ளை வசதிக்காக வாய்கால் ஒன்று கட்டப்படும். திருவள்ளூர், திருத்தணி பக்தர்கள் மையத்தில் நடைபாதை அமைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர், மதுரவாயல், நாற்றாம்பள்ளி, அணைக்கட்டு தாலுகாக்களுக்காக அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் தொடங்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் தாலுக்காக்களுக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.பி. மில்ஸ் அருகே கீழ்மட்ட ரெயில் பாலம் கட்டப்படும். நாமக்கல் நகராட்சிக்காக புதிய நீர் சப்ளை திட்டம் உருவாக்கப்படும். நாமக்கல் நகரில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.

புதிய கட்டிடம்

சென்னையில் புதிய 5 தாலுகா அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டித்தரப்படும். சென்னை தாசில்தார்களுக்கு 10 சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக வாகனங்கள் வழங்கபடும்.

செங்கல்பட்டு அருகே பழூரில் பாலாற்றின் குறுக்கே நீர் நெறிச் சுவர் எழுப்பப்படும். காஞ்சீபுரம் அரசு தலைமையிட ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை வார்டு (டருமா கேர்) அமைக்கப்படும்.

குண்டு துளைக்காத கார்

எஸ்.ஐ.டி. என்ற சிறப்பு போலீஸ் படையில் உள்ள 776 பேர், அடிப்படைவாதிகளின் வழக்குகள் தொடர்பான விசாரணையை பலப்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அமர்த்தப்படுவார்கள். சைபர் கிரைம் பிரிவு மேலும் பலப்படுத்தப்படும். எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு டிஜிட்டல் பைல் நிர்வாகம் ஒப்பளிக்கப்படும்.

இந்திய கடற்படை அல்லது கடலோர பாதுகாப்பு படையில் இருந்து அதிகாரி ஒருவர், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கமாண்டண்ட் ஆக நியமிக்கப்படுவார்.

மிகமுக்கிய நபர்களின் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத கார் வாங்கப்படும்.

சைதாப்பேட்டை, பூந்தமல்லி துணை சிறைகளில் 100 கைதிகளை அடைக்கும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு கமாண்டோ படைக்கு துரித செயல்பாட்டுக்கான பயிற்சி அளிப்பதற்கான துப்பாக்கிகள் வாங்கப்படும். பாதுகாப்பு தொடர்பாக அனைத்து போலீசாருக்கும் சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசாருக்கு அலுவலக கட்டிடம் தரப்படும். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் இன்ஸ்பெக்டர்களுக்கு பதிலாக 27 துணை சூப்பிரண்டுகள் பதவி ஏற்படுத்தப்படும். அந்த பிரிவுகளுக்கென்று தனி கூடுதல் ஐ.ஜி. பதவி உருவாக்கப்படும்.

தகவல் பரிமாற்றத்துக்காக போலீஸ் துறைக்கு நவீன எச்.எப். டேட்டா நெட்ஒர்க் அளிக்கப்படும். 300 வி.எச்.எப். ஸ்டாட்டிக் கருவி, 600 மொபைல், ஆயிரத்து 200 கையடக்க கருவிகள் போன்றவை தரப்படும்.

மேற்கண்டவை உள்பட 312 அறிவிப்புகளை முதல்அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top