'ஐ.எஸ்.ஐ.,யுடன் எனக்கு தொடர்பு உள்ளது'
பயங்கரவாதி துண்டா பரபரப்பு வாக்குமூலம்
புதுடில்லி:
"பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன், 1995ம் ஆண்டு முதல், எனக்கு தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 70, தெரிவித்துள்ளான்.
நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின், வெடிகுண்டு நிபுணரான, அப்துல் கரீம் துண்டா,
கடந்த வெள்ளியன்று, இந்திய - நேபாள எல்லையில், டில்லி போலீசாரால் கைது
செய்யப்பட்டான். தற்போது, டில்லி போலீஸ் காவலில் உள்ள, அவனிடம் தீவிர
விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் போது, துண்டா கூறியதாவது:

ஐ.எஸ்.ஐ., அமைப்பின் ஆதரவுடனே, லஷ்கர்-இ-தொய்பா
உட்பட, பல பயங்கரவாத அமைப்புகள், குண்டு வெடிப்புகள் உட்பட, பல சதி
செயல்களை அரங்கேற்றுகின்றன.
லஷ்கர் -இ- தொய்பா அமைப்பில், தற்போதுள்ள
பயங்கரவாதிகளில், பெரும்பாலானவர்கள் பஞ்சாபிகள்.
அவர்களுக்கு, மாதந்தோறும், 3,000 முதல் 4,000 ரூபாய் வரை
வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில், நான் நடத்திய மதரசாக்களில், பல
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை இந்தியாவுக்கு
அனுப்பியுள்ளேன்.
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட, போலி ரூபாய் நோட்டுக்கள், இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. இதற்கும், ஐ.எஸ்.ஐ., அமைப்பே காரணம். இந்த வேலைகளுக்கு, இக்பால் கானா என்பவரை, ஐ.எஸ்.ஐ., பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு துண்டா கூறியதாக, டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
துண்டாவின் போலீஸ் காவல், இன்றுடன் முடிவடைவதால், அவன் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளான். அப்போது, போலீஸ் காவலை மேலும் நீட்டிக்கும்படி, டில்லி போலீசார் கோரவுள்ளனர்.
இதற்கிடையில், துண்டாவின் வாக்குமூலம் தொடர்பாக, வெளியான தகவலை, ஹமீர் குல் மறுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டியில், ""துண்டாவை
நான் ஒரு போதும் சந்தித்ததில்லை. 1989ம் ஆண்டே, ஐ.எஸ்.ஐ.,
அமைப்பிலிருந்து, நான் ஓய்வு பெற்று விட்டேன். பின் எப்படி, நான், 1995ல்
துண்டாவை சந்திக்க முடியும். தாவூத் இப்ராகிமையும் எனக்குத் தெரியாது,'' என, தெரிவித்துள்ளார்.
0 comments