10 October 2013

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!



நெல்லை: தூத்துக்குடி அருகே இன்று காலையில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரி முதல்வராக நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தைச் சேர்ந்த சுரேஷ் (55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பாளையங்கோட்டை ரகுமத்நகரில் தங்கியிருந்து கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சுரேஷ் தனது காரில் கல்லூரிக்கு சென்றார். காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் காரை நிறுத்திய அவர், காரை விட்டு கீழே இறங்கினார். அப்போது கார்ஷெட்டில் மறைந்திருந்த 3 பேர் கும்பல் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சுரேசை சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறி கீழே விழுந்தார். எனினும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து அவரை வெட்டியது. உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. உடனடியாக சுரேசை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி. துரை, டிஎஸ்பி நாராயணன் மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தப்பியோடிய 3 பேரும் கல்லூரி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து முறப்பநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அதே கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் டேனியஸ் (22), ஏரோநாட்டிக்கல் 4ம் ஆண்டு படிக்கும் நாசரேத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவரின் மகன் பிச்சைகண்ணன் (21), பி.இ. சிவில் 3ம் ஆண்டு படிக்கும் நாகப்பட்டனம் கீழமேலூரை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரபாகரன் (21) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மூவரும்தான் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த சில தினங்களுக்கு டேனியஸ் உள்ளிட்ட 3 மாணவர்களும் கல்லூரி பஸ்சில் வரும்போது இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சுரேசிடம் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த முதல்வர் சுரேஷ், அந்த 3 மாணவர்களையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும், இடம் பிடிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ததோடு, அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு சுரேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியஸ் உள்ளிட்ட 3 பேரும் சுரேசை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top