7 October 2013

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் 2013 : மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்
மும்பை இந்தியன்ஸ் அணி 2வது முறையாக சாம்பியன்




10 அணிகளுக்கு இடையேயான 5வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று இரவு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். சச்சின் டெண்டுல்கரும், ஸ்மித்தும் களமிறங்கினர். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் தனது 20 ஓவர் போட்டி பயணத்தையும் முடித்து கொள்வதாக அறிவித்திருந்தார். இது அவரது கடைசி போட்டி என்பதால் அவர் பேட்டிங் செய்யும் போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். 

டெண்டுல்கர் 15 ரன்களுக்கு வாட்சன் பந்தில் அவுட்டானார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்றாலும் கிரிக்கெட்டில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டி ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் அதிரடியாக ஆடி 39 பந்தில் 44 ரன் எடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் அணிக்கு கணிசமாக தங்களது பங்களிப்பை கொடுத்தனர். ராயுடு 29 ரன், ரோகித்சர்மா 33 ரன், போலார்டு 15 ரன், மேக்ஸ்வெல் 37 ரன் எடுத்தனர். தினேஷ்கார்த்திக் 15 ரன்னும், ஹர்பஜன்சிங் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. பின்னர் 203 ரன் என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பெரேராவும், ரகானேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பெரேரா 8 ரன்னுக்கு ஆட்டமிழக்க ரகானேவுக்கு ஜோடியாக சாம்சன் களமிறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. ஒவ்வொரு ஓவரிலும் சராசரி 10 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக சாம்சன் 60 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 33 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகளும், 4 சிக்சரும் விளாசினார். அதிரடியாக ஆடிய ரகானேவும் 47 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து வெளியேறினார். இருவரும் அவுட்டானதால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹர்பஜன்சிங் தனது மாயாஜால பந்துவீச்சால் ராஜஸ்தான் அணியை திணறடித்தார். வாட்சன் 8, பின்னி 10, யாக்னிக் 6, கூப்பர் 4, டிராவிட் 1, பல்க்னர் 2, சுக்லா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 18.5 ஓவரில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களே எடுத்தது.


 இதையடுத்து மும்பை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மும்பை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.15 கோடியும், 2வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.8 கோடியும் வழங்கப்பட்டது.

கேப்டன்ஸ் கார்னர்

டிராவிட்:
ராஜஸ்தான் அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ரகானேவும், சாம்சனும் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினர். அணியில் கூட்டு முயற்சி இருந்தது. தாம்பேவும் சிறப்பாக பந்து வீசினார். கடைசிவரை போட்டி பலமாக இருந்தது. ஆனால் இந்த நாள் மும்பைக்கு பொருத்தமாகி விட்டது என்றார்.

ரோகித்சர்மா: போட்டி த்ரில்லாக இருந்தது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்றாலும் மேக்ஸ்வெல் கடைசி நேரத்தில் வேகமாக ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தி கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சினும், டிராவிட்டும் அளித்த பங்களிப்பிற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஹீரோகார்னர்

4 விக்கெட் கைப்பற்றிய ஹர்பஜன்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கூறியது: நான் அமெரிக்காவுக்கு சென்றதால் இந்த தொடருக்கு முன்பாக நான் சரியாக பயிற்சி எடுக்கவில்லை. என்றாலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினேன். ஒரே ஆண்டில் 2 கோப்பைகளை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் இந்த போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டை கைப்பற்றியதை சிறந்ததாக கருதுகிறேன் என்றார்.

விடைபெற்றனர் ஜாம்பவான்கள்


ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெற்ற சச்சின் சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் தனது 20 ஓவர் ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்திருந்தார். இதே நிலையை டிராவிட்டும் எடுத்திருந்தார். 16 ஆண்டுகளாக இருவரும் இந்திய அணியில் பல சாதனைகளை படைத்தாலும் நேற்று இறுதி போட்டியில் இருவரும் எதிரும், புதிருமாக களமிறங்கினர். இதுவே இருவருக்கும் கடைசி களமாக அமைந்தது. இந்த தொடரில் இருவருமே பெரிய ரன்களை குவிக்கவில்லை. என்றாலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர். டெண்டுல்கர் மொத்தம் 70 ரன்களே (15, 5, 0, 35, 15 ரன்) எடுத்தார். டிராவிட் 48 ரன்கள் (1, 31, 0, 10, 5, 1 ரன்) மட்டுமே எடுத்தார். ஆனால் அவருடைய கேப்டன்ஷிப் பாராட்டும்படி இருந்தது.

டிராவிட் கூறியது: சச்சின் என்னைவிட 2 மாதத்திற்கு இளையவர். ஆனால் கிரிக்கெட்டில் என்னைவிட 7 ஆண்டுகள் சீனியர். நான் இந்திய அணியில் இடம்பெற்று 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது சச்சின் தான் கேப்டனாக இருந்தார். இளம் வயதில் சென்ற இடத்தில் எல்லாம் அதிரடியாக ஆடி ரசிகர்களை கவர்ந்த சச்சினின் ஆட்டம் தான் பலருக்கு தூண்டுதலாக இருந்தது. அதில் ஒருவன் தான் நான். அவருடன் டிரஸ்சிங் ரூமை பகிர்ந்து கொள்ளும்போது மனதிற்கு உந்துதலாக இருக்கும் என்றார். 

டிராவிட் குறித்து சச்சின் கூறியதாவது: டிராவிட் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். எந்த நாளிலும் என்னுடைய அணியில் அவர் 3வது இடத்தில் இறங்குவார். மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறும் நிலை ஏற்பட்டாலும் டிராவிட் மட்டும் நிலைத்து நின்று ஆடுவார். அவர் சவாலை விரும்பக்கூடியவர். என்னுடைய கடினமான நேரத்தில் நான் ராகுலையே சார்ந்து இருந்தேன் என்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top