10 September 2013

பணத்துக்கு ஆசைப்பட்டு கொன்றதாக வாக்குமூலம் மதுரவாயல் இரட்டை கொலையில் 2 பேர் கைது

பணத்துக்கு ஆசைப்பட்டு கொன்றதாக வாக்குமூலம் மதுரவாயல் இரட்டை கொலையில் 2 பேர் கைதுசென்னை :
மதுரவாயல் பகுதியில் தாய் மற்றும் மகளை கொலை செய்து விட்டு நகைககளை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல் கார்த்திகேயன் நகர், நாகேந்திரன் தெருவில் வசிப்பவர் சாமிக்கண்ணு (51). இவரது மனைவி விமலாதேவி (43). இவர்களது மகள் பவித்ரா (23), மகன் சுகுமார் (21). கால் சென்டர் ஊழியர்கள். சாமிக்கண்ணு மதுரவாயல் பகுதியில் மேட்டுக்குப்பம் சாலையில் பவித்ரா என்ற ஓட்டல் நடத்துகிறார்.

கடந்த 5ம் தேதி காலை வீட்டில் விமலாதேவியும், பவித்ராவும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மனைவி மற்றும் மகள் அணிந்திருந்திருந்த நகை, பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் கூறினார். கொலையாளிகளை விரைவாக பிடிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி இணை கமிஷனர் சண்முகவேல் மேற்பார்வையில், அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், ‘விமலாதேவி எப்போதும் தனது வீட்டின் முன்பக்க இரும்பு கதவை பூட்டு போட்டு மூடியே வைத்திருப்பார். அதையடுத்து மரத்தால் செய்யப்பட்ட கதவை தாழ்ப்பாள் போட்டு மூடி வைத்திருப்பார். யாராவது காலிங் பெல் அடித்தோ, இரும்பு கேட்டை தட்டியோ அழைத்தால், தெரிந்தவர்கள் என்றால் மட்டுமே இரும்பு கதவு பூட்டை திறந்து உள்ளே வர அனுமதி அளிப்பார். இல்லையென்றால் அப்படியே பேசி விட்டு திருப்பி அனுப்பி வைத்து விடுவார்’ என்று தெரியவந்தது. இதனால் இந்த கொலையை சாமிக்கண்ணு குடும்பத்துக்கு தெரிந்தவர்கள்தான் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.

இதையடுத்து போலீசார், சாமிக்கண்ணு மற்றும் விமலாதேவிக்கு தெரிந்தவர்கள், வீட்டுக்கு அடிக்கடி வருபவர்கள் என்ற பட்டியலை தயார் செய்தனர். அதன்படி பால் போடுபவர், குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய வருபவர்கள், கட்டுமான பணி, மின்சார ஒயரிங், பெயின்டிங் வேலை செய்தவர்கள், ஓட்டல் ஊழியர்கள், ஓட்டல் வேலையை விட்டு வெளியே சென்றவர்கள், அடிக்கடி வரும் உறவினர்கள், வெளியே செல்லும்போது அழைக்கும் வாடகை கார் டிரைவர்கள் என ஒரு பட்டியல் தயார் செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மதுரவாயல் கார்த்திகேயன் நகர் மற்றும் அருகில் உள்ள மற்ற நகர்களில் இருந்து வரும் வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நபர்கள், சாமிக்கண்ணு வீட்டுக்கு கொலை நடந்த அன்று வந்து சென்றவர்கள் பற்றியும் தனிப்படையினர் விசாரித்து வந்தனர். அப்போதுதான் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி கார்த்திகேயன் நகரில் நடமாடி கொண்டிருந்தது தெருவில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேமராவில் தெரிந்த அடையாளத்தை வைத்து சென்னை, எம்எம்டிஏ பகுதியில் வசித்து வரும் கார் டிரைவர் ரமேஷ் (24) மற்றும் அவனது நண்பன் சதீஷ் (23) ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தாங்கள் இருவரும்தான் நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டில் தனியாக இருந்த விமலாதேவி மற்றும் அவரது மகள் பவித்ராவை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்தோம் என்பதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, இரட்டை கொலையில் ஈடுபட்ட ரமேஷ், சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தக்கறை படிந்த உடைகள், ஒயர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளை போன நகைகளை மீட்டனர். 
 
இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கார் டிரைவர் ரமேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு மாதம் முன்பு சாமிக்கண்ணு குடும்பத்தினர் குல தெய்வ கோயிலுக்கு சிவகங்கை சென்றுவர எனது வாடகை காரில் அழைத்துச் சென்றேன். காரில் பயணித்தபோது, அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்தேன். அப்போது சாமிக்கண்ணுவின் மகள் பவித்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்காக கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் சாமி கும்பிட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். தற்போது நான் வாங்கிய காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் பணக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போதுதான் சாமிக்கண்ணு வீட்டிற்கு சென்று, மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்துள்ள நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டேன்.

 என்னை போன்று பண கஷ்டத்தில் இருந்த நண்பர் சதீஷிடமும் இதுபற்றி கூறினேன். அவனும் என் திட்டத்திற்கு சம்மதித்தான். அதன்படி திட்டமிட்டு, 5ம் தேதி காலை 10 மணிக்கு மதுரவாயல் கார்த்திகேயன் நகருக்கு சென்றோம். நான் காலிங் பெல்லை அடித்தேன். விமலாதேவிக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால், கதவை லேசாக திறந்து என்னிடம் பேச்சு கொடுத்தார். உடனே நான், உங்கள் மகன் சுகுமார் கார் ஒன்று வாங்கி வாடகைக்கு விடும் எண்ணத்தில் உள்ளார்.

அதனால்தான் எனது நண்பர் சதீஷை அழைத்து வந்தேன். அவரிடம் ஒரு கார் இருக்கிறது. அதுபற்றி பேச வேண்டும் என்றேன். இதை நம்பிய விமலாதேவி வீட்டு கதவை திறந்து எங்களை உள்ளே அழைத்தார். பின்னர் எங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வருகிறேன் என்று சமையல் அறைக்கு செல்ல முயன்றார். இந்த நேரத்தில் பின் பக்கமாக சென்ற நான் விமலாதேவியின் வாயை பொத்தி அப்படியே கீழே தரையில் தள்ளி கழுத்தை காலால் மிதித்து அமுக்கினேன்.

சதீஷ், கையில் இருந்த வயரால் கழுத்தை இறுக்கியதோடு, தன்னிடம் இருந்த கத்தியைக் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்தான். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தாலிசெயின், கையில் அணிந்திருந்த வளையல்களையும் எடுத்துக் கொண்டோம்.

பின்னர் படுக்கை அறைக்கு சென்றோம். அங்கு விமலாதேவியின் மகள் பவித்ரா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பாமல், அப்படியே தூங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே கழுத்தை ஒயரால் சுற்றி இறுக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் துடிக்க துடிக்க கொலை செய்தோம். அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்துகொண்டபின், அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்தோம்.

பின்னர் பீரோவை திறந்து பணம், நகை வைத்திருந்த பாதுகாப்பு பெட்டியை திறக்க முயற்சி செய்தோம். முடியாததால் அப்படியே விட்டுவிட்டு, பீரோவுக்கு வெளியே கிடந்த கொஞ்சம் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து, இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றோம். ஆனால் அந்த பகுதியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் எங்களை போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். கொலையாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.

கொலை செய்தது எப்படி என நடித்து காட்டினர்

மதுரவாயலில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகிய இருவரையும் எப்படி கொலை செய்தோம் என்று கொலையாளிகள் போலீசாருக்கு நடித்து காட்டினர். அதன்படி நேற்று மதியம் 12.45 மணிக்கு கொலையாளிகள் ரமேஷ், சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் உள்ள சாமிக்கண்ணு வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது, ஹாலில் வைத்து விமலாதேவியை எப்படி கொலை செய்தோம் என்றும்,

பின்னர் படுக்கை அறையில் இருந்த பவித்ராவை தூங்கிக் கொண்டிருந்தபோதே எப்படி கொலை செய்தோம் என்றும் நடித்து காட்டினர். இந்த காட்சிகளை போலீசார் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்த்துக் கொண்டிருந்தார்.

பொதுமக்கள் ஆவேசம் கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்

மதுரவாயலில் நேற்று கொலையாளிகள் இருவரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் அழைத்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் அங்கு திரண்டனர். கொலை நடந்த வீட்டுக்கு அருகே போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இரண்டு கொலையாளிகளையும் போலீசார் அழைத்து வந்ததை பார்த்த பொதுமக்கள் ஆவேசத்துடன் குரல் எழுப்பினர். கொலையாளிகள் 2 பேரையும் உடனே தூக்கில் போட வேண்டும் என்றும், 2 பேரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்றும் பொதுமக்கள் கோஷமிட்டனர். அவர்களை மிகவும் சிரமப்பட்டு போலீசார் சமாதானப்படுத்தினர்.

போலீஸ் காவலில் விசாரிக்க திட்டம்

தனியாக இருந்த இரண்டு பெண்களையும் கொலையாளிகள் கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. கொள்ளை போன நகைகள் மட்டும் சுமார் 40 முதல் 50 பவுன் என்று கூறப்பட்டது. ஆனால் கைது செய்யப்பட்ட கொலையாளிகளிடம் இருந்து வெறும் ஏழரை பவுன் நகை மட்டுமே தற்போது மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

 மீதமுள்ள நகைகள் விரைவில் மீட்டு விடுவோம் என்று கூறினர். மேலும் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகள் 2 பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. காரணம், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது ஏற்கனவே எழும்பூர், மதுரவாயல் மற்றும் சில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவன், புரட்சி மாணவர் இயக்கத்தில் இருந்ததாகவும், அப்போது மதுரவாயல் போலீஸ் நிலையத்தினை தாக்கிய வழக்கும் அவர் மீது உள்ளது. இதனால் இவனுக்கு வேறு கும்பலுடன் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்பது குறித்தும் போலீசார் சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top