17 June 2013

பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்தது

பா.ஜனதா -  ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்தது

17 ஆண்டு கால உறவு முறிந்தது; பீகாரில் பா.ஜனதா மந்திரிகள் 11 பேர் 

அதிரடியாக நீக்கம்




பாட்னா:

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, அகாலிதளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருந்தன.

நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு முன்நிறுத்த பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. இதற்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நரேந்திர மோடியை கட்சியின் பிரசார குழு தலைவராக சமீபத்தில் பாரதீய ஜனதா நியமித்தது.



இதனால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதாதளம் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, கூட்டணியை காப்பாற்றும் முயற்சியாக ஐக்கிய ஜனதா தலைவர் சரத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோருடன் பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் இல்லை. உறவில் விரிசல் அதிகரித்ததன் காரணமாக, 17 ஆண்டுகளாக இருந்து வந்த பாரதீய ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி உடைந்தது.

ஐக்கிய ஜனதாதளம் விலகல்


பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் இல்லத்தில் ஐக்கிய ஜனதாதள நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை கூட்டம் முடிந்தும் சரத் யாதவும், நிதிஷ்குமாரும் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர். பேட்டியின் போது சரத் யாதவ் கூறியதாவது:-

வேறு வழி இல்லை

எங்களுடைய அடிப்படை கொள்கைகளில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே விளைவுகளை பற்றி கவலைப்படாமல் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுகிறது. வெளியில் இருந்து சில குறுக்கீடுகள் இருந்ததால்தான், கூட்டணியில் இருந்து நாங்கள் விலக நேரிட்டது. இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. கூட்டணி உடைந்ததற்கு ஐக்கிய ஜனதாதளம் பொறுப்பு ஆகாது.
நட்புறவின் அடிப்படையில்தான் கூட்டணி. பாரதீய ஜனதா பொதுச் செயலாளர்களில் ஒருவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தங்கள் கட்சியின் செயல்திட்டத்தில் இருப்பதாக லக்னோவில் நிருபர்களிடம் கூறி உள்ளார். வாஜ்பாய், அத்வானி காலத்தைப் போல் இப்போது இல்லை. எனவேதான் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். நரேந்திர மோடியை பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமித்தது, அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம். என்றாலும் அவருக்கு அந்த பதவி வழங்கிய விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு சரத் யாதவ் கூறினார்.

11 மந்திரிகள் நீக்கம்

கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியதை தொடர்ந்து, துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி உள்ளிட்ட 11 பாரதீய ஜனதா மந்திரிகளையும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதிரடியாக நீக்கினார். மாநில கவர்னர் டி.ஒய்.பட்டீலை சந்தித்து அவர்களை பதவியில் இருந்து நீக்குமாறு பரிந்துரை செய்தார். அதை ஏற்று சுஷில்குமார் மோடி உள்ளிட்ட 11 மந்திரிகளையும் கவர்னர் நீக்கினார்.

கவர்னரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாரதீய ஜனதா கூட்டணியில் நீடிக்கவே ஐக்கிய ஜனதா தளம் விரும்பியதாகவும், பீகாருக்கு வெளியே உள்ள சில பாரதீய ஜனதா தலைவர்களின் குறுக்கீடுகள்தான் கூட்டணி உடைய காரணம் என்றும் தெரிவித்தார்.  
முன்னதாக நேற்று காலை நிதிஷ்குமார் இல்லத்தில் பீகார் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்&மந்திரி சுஷில்குமார் மோடி உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 11 மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.

அரசுக்கு ஆபத்து இல்லை

பீகாரில் கடந்த 8 ஆண்டுகளாக ஐக்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகினாலும், நிதிஷ்குமார் அரசுக்கு ஆபத்து ஏற்படாது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 118 உறுப்பினர்களும், பாரதீய ஜனதாவுக்கு 91 உறுப்பினர்களும் உள்ளனர். பாரதீய ஜனதா ஆதரவு இல்லாமல் ஆட்சியில் நீடிக்க ஐக்கிய ஜனதாதளத்துக்கு இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. 6 சுயேச்சை உறுப்பினர்கள் நிதிஷ்குமார் அரசை ஆதரிக்க முன்வந்து இருப்பதால், ஆட்சி கவிழாது. எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளத்துக்கு 22 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

அரசுக்கு ஆபத்து இல்லை என்ற போதிலும், வருகிற 19-ந் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முதல்-மந்திரி நிதிஷ்குமார் தீர்மானித்து உள்ளார். மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, நிதிஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக 19-ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னர் டி.ஒய்.பட்டீல் உத்தரவிட்டு உள்ளார்.

சரத் யாதவ் ராஜினாமா

சரத் யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளராகவும் இருந்து வந்தார். கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகுவதற்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top