சோக்காலி - திரை விமர்சனம்
மீடியாவில் பணியாற்றும் சைதன்யா, விளம்பரப் பட நடிகராகவும் இருக்கிறார். எந்தப் பொறுப்பும் இல்லாமல், எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற சோக்காலி. அதுவும் தனக்கு இருக்கும் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி, பெண்களை தன் வலையில் வீழ்த்துபவர். ஜவுளிக்கடை விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக பரமத்தி வேலூர் செல்லும் அவர், தன்னை செல்போனிலேயே காதலிக்கும் சுவாசிகாவை அந்த ஊரில் சந்திக்கிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி விட்டு, சென்னைக்கு சென்று விடுகிறார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அவரைப் பார்ப்பதற்காக சென்னை வரும் சுவாசிகா, அங்கு சைதன்யா தன்னைப்போல் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருப்பதை அறிகிறார். அதேநேரத்தில், தனது தங்கையை நாசப்படுத்திய சைதன்யாவைப் பழிவாங்க, பெண் தொழிலதிபர் சோனா தகுந்த நேரம் பார்த்து காத்திருக்கிறார். இறுதியில் சைதன்யா திருந்தினாரா? சுவாசிகாவும், சோனாவும் அவரைப் பழிவாங்கினார்களா என்பது கதை.
நெகட்டிவ் ஹீரோ கேரக்டருக்கு சைதன்யா பொருந்தவில்லை. அவர் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம், அவரை கெட்டவராக ஏற்க மறுக்கிறது. என்றாலும், கொஞ்சம் நடித்து சமாளிக்கிறார். சுவாசிகா தன் குடும்பப்பாங்கான முகத்தில் சோகம் காட்டுவதால், நடிப்பிலும் தேறிவிடுகிறார். காதலன் முகத்தை டி.வியில் மட்டும் பார்த்துவிட்டு, செல்போனிலேயே காதல் வளர்த்து, விளம்பர வெளிச்சத்தில் இருப்பவர்களை அப்பாவித்தனமாக விரும்பும் இளம்பெண்களை பிரதிபலிக்கிறார். கடைசியில் கர்ப்பத்தையும், சோகத்தையும் சேர்த்துச் சுமந்து மனதில் நிறைகிறார். சுவாசிகாவை ஒருதலையாகக் காதலிக்கும் கிராமத்து ஜெயராம் பரவாயில்லை.
ஒரு அறைக்குள் வைத்து, கஞ்சா கருப்புவை காமெடி செய்ய வைத்திருக்கிறார்கள். சிரிப்பு வரவில்லை. சிட்டிபாபு, அல்வா வாசு, முத்துக்காளை, கிரேன் மனோகர் ஆங்காங்கே வந்து கிச்சுகிச்சு மூட்டிவிட்டுச் செல்கின்றனர். சோனா நீச்சல் உடையில் வந்து, முழு அழகையும் காட்டி நடித்திருக்கிறார்.
மோகனின் ஒளிப்பதிவு பரவாயில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்களில் பழைய வாசனை அடிக்கிறது. ‘வாராவதி ஓரம்’, மனதில் தங்குகிறது. கமர்ஷியல் படமாக உருவாக்க கிளாமர், சண்டை, காமெடியை திணித்து இருக்கிறார்கள். ‘நீ விரும்புகின்ற ஆணை விட, உன்னை விரும்புகின்ற ஆணை நேசி’ என்று பெண்களுக்கு மெசேஜ் சொல்வதற்காகவும், புகழ்பெற்றவர்கள் சிலருக்கு தனிப்பட்ட இன்னொரு முகம் உண்டு. அதனால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் தரும் வகையில் படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சரணா. நேர்த்தி இல்லாத திரைக்கதை, அமெச்சூர்த்தனமான காட்சிகளால், சொல்ல வந்த மெசேஜை, சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்.













0 comments