சாம்பியன்ஸ் டிராபி
தென் ஆப்ரிக்கா Vs பாகிஸ்தான்
67 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க வெற்றி
பர்மிங்காம்:
தென் ஆப்ரிக்க அணியுடனான சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 67 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு ஆட்டம்), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக இங்ராம், அம்லா களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 53 ரன் சேர்த்தது.
இங்ராம் 20 ரன் எடுத்து ஹபீஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். இதைத் தொடர்ந்து அம்லாவுடன் டு பிளெஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்தனர். டுபிளெஸ்சிஸ் 28 ரன் எடுத்து இர்பான் வேகத்தில் மாலிக் வசம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய அம்லா அரை சதம் அடித்தார்.
அவர் 81 ரன் எடுத்து (97 பந்து, 9 பவுண்டரி) அஜ்மல் சுழலில் ஹபீஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓரளவுக்கு தாக்குப்பிடித்த கேப்டன் டிவில்லியர்ஸ் 31 ரன், டுமினி 24 ரன் எடுத்து மிஸ்பா உல் ஹக்கின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் தென் ஆப்ரிக்க அணியின் ரன் வேகம் தடைப்பட்டது.
கடைசி கட்டத்தில் மெக்லாரன் 4, டேவிட் மில்லர் 19, மோரிஸ் 1, பாங்கிசோ (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.
ராபின் பீட்டர்சன் 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது இர்பான், முகமது ஹபீஸ், ஜுனைத் கான், சயீத் அஜ்மல், சோயிப் மாலிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க வீரர்கள் 4 பேர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்ரிக்கா 67 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது
0 comments