இராமேசுவரத்தில் ஆட்டோ–வேன் டிரைவர்கள்
5–வது நாளாக வேலை நிறுத்தம்
இராமேசுவரம், ஆக. 29:–
இராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும் ஆட்டோ, வேன், கார்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்கு ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.நேற்று காலை 200–க்கும் மேற்பட்ட ஆட்டோ, வேன் டிரைவர்கள் தாலுகா அலுவலகம் சென்று ரேசன் கார்டு, லைசென்சு ஆகியவற்றை ஒப்படைக்க ஊர்வலமாக சென்றனர். பஸ் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை–இராமேசுவரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண் இளங்கோ, எம்.ஜி.ஆர். கழக நகர செயலாளர் கோபால் மற்றும் வடிவேல், ராஜேந்திரன், முனீஸ்வரன், பாபு உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று 5–வது நாளாக ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கோவிலுக்கு சென்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆட்டோ டிரைவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












0 comments