10 December 2013

' எல்லாத்துக்கும் காரணம் தலைமைதான் '- மனம் திறந்து பேசினார் பன்ருட்டி ராமச்சந்திரன்

தே.மு. தி.கவில் இருந்து விலகல் 
' எல்லாத்துக்கும் காரணம் தலைமைதான் '
மனம் திறந்து பேசினார் பன்ருட்டி



 சென்னை: 

           தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி துவங்குவதற்கு அச்சாணியாக இருந்தவரும்,விஜயகாந்தின் தலைமை ஆலோசகராக இருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தனது எம்.எல்.ஏ., மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் இந்த கட்சியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தமது உடல் நலம் காரணம் என்று அவர் கூறியிருந்தாலும், இவர் விலகியதற்கு திரைமறைவில் பல்வேறு காரணங்கள் இக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அச்சாணியாக இருந்தவர் பண்ருட்டி: கடந்த 2005ல் விஜயகாந்த் இந்த கட்சியை துவக்கினார். இவர் அரசியலில் களம் புகுந்தது முதல் இவருக்கு முழு அரசியல் ஆலோசகராக இருந்து வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். கட்சிக்கு பெயர் வைப்பது முதல் சின்னம் வரை இவரது யோசனையின்படியே நடந்தது. இந்த கட்சியில் இவருக்கு அவைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

இவரது கட்சியில் விஜயகாந்த் ஒருவரே எம்,எல்.ஏ.,வாக இருந்தார். இதனையடுத்து 2009 ல் நடந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டும் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து 2011 ல் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டது இந்த கட்சி. இதில் தே.மு.திக.,29 தொகுதிகளை கைப்பற்றியது. ஆலந்தூர் தொகுதியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்வு செய்யப்படார். தி.மு.,கவை விட கூடுதல் தொகுதிகள் பெற்றதால் இந்த கட்சிக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைத்தது.

இந்நிலையில் இந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல்வர் ஜெ., சந்தித்தனர். இதற்கு தொகுதி வளர்ச்சிக்காகத்தான் சந்தித்தோம் என்றனர். இதனையடுத்து வரிசையாக பல எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக வெளியே தனியாக செயல்பட்டு வந்தனர்.

 

இந்நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ., மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ; தனது உடல் நிலை காரணமாக எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இவரது கடிதம் விதிமுறைகளின் படி இருந்ததால் ராஜினாமா கடிதம் ஏற்று கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இவரது விலகல் கட்சியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருத்தத்துடன் பிரிகிறேன்:  

பண்ருட்டி : கட்சி தலைவர் விஜயகாந்திற்கும் ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். 'அதில், வயது மூப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலையில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். மேலும், கட்சி பொறுப்புக்களில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். கடந்த ஆண்டுகளில் தாங்கள் என்மீது கொண்டிருந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேரும் போது மகிழ்ச்சியும், பிரியும் போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. இதில் தமக்கும் விதிவிலக்கல்ல. அதுதான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறி உள்ளார்.

மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. கருத்து :

 
ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்து எடுத்து வரும் முடிவுகள் தனக்கு பிடிக்காததால் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் அதிருப்தி வேட்பாளரான மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், 'ராமச்சந்திரன் நிதானமாக முடிவெடுத்துள்ளார். அவருக்கு உரிய மரியாதையை அக்கட்சியி்ல் கொடுக்கவில்லை. அரசியல் நாகரீகம் கருதி, அவர் வயதை குறிப்பிட்டு வெளியேறி உள்ளார்,' என, தெரிவித்துள்ளார்.

இது திடீர் முடிவு அல்ல; பேட்டி : பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:

இது திடீர் முடிவு அல்ல , திட்டமிட்டது. மற்ற துறையில் ஓய்வு வயது இருக்கிறது. அரசியலில் சாகும் வரை ஒழ்வு கிடையாது என சிலர் நினைக்கின்றனர், டாக்டர்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் நான் ஓய்வை அறிவித்தேன். இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். விஜயகாந்திடம் உடம்பு சரியில்லை என்று சொன்னேன். ராஜினாமா குறித்து சொல்லவில்லை. சொன்னால் அங்கிருந்து நிர்பந்தம் வரும்.

* 7 பேர் விலகியதை அடுத்து நீங்கள் விலகியதால் பாதிப்பு இருக்குமா ?

இது என்னுடைய கட்சி என்று விஜயகாந்தே சொல்லியிருக்கிறார். இதனால் நான் விலகியதால் கட்சிக்கு பாதிப்பு இருக்காது. மக்களுக்கும் பாதிப்பு இருக்காது. மக்கள் வேறு எம்.எல்.ஏ.,வை தேர்வு செய்வர்.

* தே.மு.தி.க., கட்சியின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா?

எனக்கு திருப்தி என்பது முக்கியமல்ல. மக்களுக்குத்தான் திருப்தி அளிக்க வேண்டும். போலியாக இருந்து ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட பிறருக்கு வழி விடுவது நல்லது.

* அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

உடல் நலத்தை ஆரோக்கியமாக , மனதை நிம்மதியாக வைக்கப்போகிறேன்.

* டில்லியில் கட்சி போட்டியிட்டது குறித்து ?

நான் வேண்டாம் என்று தான் சொன்னேன் ஆனால் விஜயகாந்த் தலைவர் என்ற முறையில் அவர் முடிவு எடுத்துள்ளார்,

* வேறு கட்சியில் எதுவும் சேருவீர்களா ?

எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் எனக்கில்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் எனக்கு தலைவர்.

* விஜயகாந்த்துக்கு அறிவுரை என்ன ?

அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய அறிவாளி அல்ல. அவருக்கே எல்லாம் தெரியும்.

*கட்சி தொண்டர்களுக்கு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா ?

கட்சியில் இருந்தே போய் விட்டேன், தொண்டர்களுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

* மாற்று அணியாக தே.மு.தி.க., செயல்பட்டதா? கட்சி குறித்து உங்கள் பதில் என்ன?

ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. தற்போது மக்கள் நம்பிக்கை குறைந்து விட்டது.

* இதற்கு யார் காரணம்?

எல்லாத்துக்கும் காரணம் தலைமைதான். தலைமை என்றால் நிருபர்களுக்கு தெரியாதா ?

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top