டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு
4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது
4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது
டெல்லி விரைவு நீதிமன்றம்
புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் நீதிபதி யோகேஷ் கண்ணா உத்தரவிட்டுள்ளார். குற்றத்தின் கொடூரத்தை கருத்தில் கொண்டு குற்றவாளிகளுக்கு 14 பிரிவுகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி யோகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சமூக நல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வரவேற்பு அளித்துள்ளன.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
இந்நிலையில் டெல்லி விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அரசியல் புகுந்துவிட்டதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் எ.பி.சிங் கூறியுள்ளார்.
14 பிரிவுகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை
கொலை, பாலியல் பலாத்காரம், கொள்ளை, இயற்கைக்கு மாறான முறையில் சித்திரவதை உள்ளிட்ட 14 பிரிவுகளில் குற்றவாளிகளுக்கு இந்த தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் விட்டு அழுத குற்றவாளிகள்
நீதிபதி யோகேஷ் கண்ணா தீர்ப்பு வழங்கிய பின்னர், குற்றவாளிகள் முகேஷ், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் சிங் தாகூர் ஆகிய 4 பேரும் தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.
விரைவு நீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் வரவேற்பு
டெல்லி விரைவு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இந்த தீர்ப்பு பாடமாக அமையும் என்று சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சி
4 குற்றவாளிகளுக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பதை மாணவியின் தாயார் வரவேற்றுள்ளார். மேலும், இந்த தீர்ப்பு மூலம் தன் மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனைக்கு மாணவியின் தந்தையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வழக்கு விவரம்
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து, டெல்லியில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில் வழக்கின் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் டெல்லி திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் நீதிபதி யோகேஷ் கண்ணா உத்தரவிட்டுள்ளார்.
0 comments