சினிமா ஆசை காட்டி பெண்களை மயக்கினேன்:
கைதான டைரக்டர் வாக்குமூலம்
மேல்புறம், நவ. 11:
குமரி மாவட்டம் திங்கள் சந்தையை அடுத்த நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ் ரவி (வயது 43). இவர் வாச்சாத்தி, பனி மலர்கள் போன்ற தமிழ் படங்களை இயக்கி உள்ளார். இவருக்கும் தக்கலையை அடுத்த சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது அனிதாவின் பெற்றோர் நகை மற்றும் பணம் வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்த பின்பு ஜஸ்டஸ் ரவி சென்னைக்கு சென்று விட்டார். எப்போதாவது ஒரு முறைதான் ஊருக்கு வருவார். இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
குழந்தையை பார்க்க வராமலும், குடும்பச் செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்ததால் ஜஸ்டஸ் ரவி மீது அனிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் ஜஸ்டஸ் ரவியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தார்.
அப்போது அவருக்கும் பூதப்பாண்டியை அடுத்த சுருளோடு பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
அதிர்ந்து போன அனிதா இதுபற்றி ஷிபாவை சந்தித்து பேசினார். அப்போது அவரும் திருமணத்திற்கு பிறகு ஜஸ்டஸ் ரவி வீட்டுக்கு வருவதில்லை என்று தெரிவித்தார்.
எனவே ஜஸ்டஸ் ரவியின் 2 மனைவிகளும் சேர்ந்து அவரை பற்றி விசாரித்தனர். இதில், ஜஸ்டஸ் ரவி ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த 3 பெண்களை திருமணம் செய்திருப்பதும், இப்போது சென்னையில் இன்னொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதும் தெரிய வந்தது.
எனவே அவர்கள் ஜஸ்டஸ் ரவியின் மோசடி பற்றி குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். மேலும் அவரை பிடித்து கொடுக்கவும் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி சென்னையில் இருந்த ஜஸ்டஸ் ரவியை நைசாக பேசி ஊருக்கு அழைத்தனர். அவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
அங்கு அனிதா காருடன் சென்று அவரை ஊருக்கு அழைத்து வந்தார். களியக்கா விளை எல்லையில் ஏற்கனவே போலீசாரிடம் தெரிவித்த தகவலின் பேரில் போலீசார் காரை தடுத்து நிறுத்தி ஜஸ்டஸ் ரவியை கைது செய்தனர்.
கைதான ஜஸ்டஸ் ரவியிடம் போலீசார் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:–
தக்கலை பகுதியில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். 10–வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். டிராவல்ஸ் நிறுவனத்திற்கு வரும் அழகான பெண்களிடம் அவர்கள் சினிமாவில் நடிக்க சென்றால் பணம் கொட்டும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவேன்.
இதில், மயங்கிய பெண்களை அடிக்கடி சந்தித்து அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். இதில் சில பெண்கள் என்னுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள்.
மேலும் பணத்திற்காக சில பெண்களை திருமணம் செய்துள்ளேன். அவர்களில் அனிதா, ஷிபா ஆகியோரும் அடங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் ஜஸ்டஸ் ரவி மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் ஜஸ்டஸ் ரவிக்கு உதவி புரிந்த அவரது உறவினர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் ஜஸ்டஸ் ரவியை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். கைதான டைரக்டர் ஜஸ்டஸ் ரவியின் 2–வது மனைவி அனிதா நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜஸ்டஸ் ரவி என்னை திருமணம் செய்த பிறகு சென்னைக்கு சென்று விட்டார். அங்கிருந்து எப்போதாவது ஒருமுறைதான் ஊருக்கு வருவார். வந்தாலும் அவரது செல்போனில் எப்போதும் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பார்.
ஒருமுறை அவரது செல்போனில் ரிங்டோன் கேட்டதும் அதை நான் எடுத்து பேசினேன். எதிர்முனையில் இன்னொரு பெண் ஆவேசமாக பேசினார். என்னை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று விட்டு அதற்கான பணத்தை தராதது ஏன்? என்று கேட்டார்.
அதற்கு நான் பேசுவது ஜஸ்டஸ் ரவி அல்ல, அவரது மனைவி என்று கூறினேன். உடனே அவர், ஜஸ்டஸ் ரவிக்கு திருமணமாகி விட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அப்போதுதான் ஜஸ்டஸ் ரவி சென்னையில் பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. அவர் பல பெண்களை ஏமாற்றி உள்ளார். சுருளோடு ஷிபாவும் இப்படிதான் ஏமாந்து இருக்கிறார். அவரை சந்தித்து பேசிய பின்பே ஜஸ்டஸ் ரவியை போலீசில் பிடித்து கொடுக்க முடிவு செய்தோம்.
ஜஸ்டஸ் ரவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுக்க முன் வர வேண்டும். நேற்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, திமிராகவே பதில் கூறினார்.
எனவே உயர் அதிகாரிகள் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தினால் ஜஸ்டஸ் ரவியின் பின்னணியும் அவர், எத்தனை பெண்களை ஏமாற்றியதும் தெரிய வரும். அதற்கு போலீசார்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.













0 comments