6 November 2013

செவ்வாய் கிரகத்துக்கு 300 நாள் பயணம் தொடங்கியது பூமியை சுற்றுகிறது மங்கல்யான்

செவ்வாய் கிரகத்துக்கு 300 நாள் பயணம் தொடங்கியது பூமியை சுற்றுகிறது மங்கல்யான்



சென்னை : 

               செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா நேற்று ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது. தொடர்ந்து 300 நாட்களில் 48.5 கோடி மைல் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த ஆண்டு செப்டம்பரில் சென்றடையும்.

பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட் மூலம் மங்கல்யானை தமிழக எல்லையில் உள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவுவதற்கான கவுன்ட் டவுன் கடந்த 3ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்கியது. அதனையடுத்து 56 மணி நேர கவுன்ட் டவுனுக்கு பிறகு நேற்று பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக மங்கல்யானை சுமந்துக் கொண்டு பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதனை பார்த்த விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பினர்.

ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதை வேடிக்கை பார்த்த மக்களும் உற்சாகமாக கை தட்டி ஆர்ப்பரித்தனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர்.கஸ்தூரிரங்கன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ராக்கெட் புறப்பட்ட நேரத்தில் இருந்து சரியாக 43.46 நிமிடங்களில் புவிவட்ட பாதையில் மங்கல்யான் செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதாவது பூமியின் நீள்வட்டப்பாதையில் இருந்து குறைந்தபட்சம் 250 கிமீ தொலைவிலும், அதிகபட்சம் 23500 கிமீ தொலைவிலும் இந்த செயற்கைகோள் சுற்றி வரும்.

மங்கல்யானை சுமந்து சென்ற ராக்கெட் மற்ற ராக்கெட்களை போல் அல்லாமல் சாய்வு பரிமாணத்தில் செலுத்தப்பட்டது. அதனால் புறப்பட்ட 25 நிமிடங்களுக்கு ரேடாரால் கண்காணிக்க முடியாது. எனவே டெலிரிசீவர் மூலம் கண்காணிக்கும் வகையில் தென் பசிபிக் கடலில் நாளந்தா, யமுனா என்ற 2 கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த டெலிரிசீவர் மூலம் கண்காணிக்கப்பட்டு இஸ்ரோ மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.

முதல் 25 நிமிடங்களுக்கு வழக்கமான திசை மாற்றலுக்குப் பிறகு இஸ்ரோ மையமே ராக்கெட்டை நேரிடையாக கண்காணிக்க ஆரம்பித்தது. அதன்பிறகுதான் மங்கல்யான் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மங்கல்யான் திட்ட இயக்குனர் எஸ்.அருணன், சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ராமகிருஷ்ணன், பிஎஸ்எல்வி,சி25 திட்ட இயக்குனர் குன்னி கிருஷ்ணன், இயக்குனர்கள் டாக்டர்.சிவகுமார், பிரசாத், கிரண்குமார், ராமதத்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பேசினர்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினார். வெற்றிகரமாக மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட் டுள்ளது. அடுத்து டிச.1ம் தேதி இரவு தொடங்கி செவ்வாயை நோக்கி முதல் கட்டமாக 2 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்யும். இப்படி படிப்படியாக 30 கோடி கிமீ பயணம் செய்து 2014 செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் வெளி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு மங்கல்யான் தனது ஆய்வு பணிகளை தொடங் கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இடைவிடாத ஒருங்கிணைந்த உழைப்பு, அரசின் ஒத்துழைப்பு மூலம் இதனை செய்துள்ளோம். பயணம் இப்போது தொடங்கியுள்ளது.

செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளதா என்பதை உலகளவில் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சிக்காக முதன் முதலாக 1960ம் ஆண்டு ''கோர்பல்,4'' என்ற செயற்கை கோளை ரஷ்யா  செவ்வாய் கோளுக்கு அனுப்பியது. ஆனால் அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செவ்வாய் கோளுக்கு செயற்கைகோள்களை அனுப்பின. அந்த செயற்கைகோள்கள் மூலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளது, செம்மண் இருக்கிறது என்று பல்வேறு முடிவுகள் உலகுக்கு அறிவிக்கப்பட்டன.  

செவ்வாய் கோளுக்கு முதன்முறையாக மங்கல்யான் என்ற விண்கலத்தை ஏவுவதற்கான முயற்சியை இந்தியா மேற்கொண்டது. இதற்காக இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) 18 மாதங்களில் செயற்கைகோளையும் அதை ஏவுவதற்கான பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட்டையும் 450 கோடி ரூபாய் செலவில் தயாரித்தது. மங்கல்யான் விண்கலம் செவ்வாயில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பல நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவிகள் மூலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மீத்தேன் வாயுவின் அளவு என்ன, மேற்பரப்பின் குளிர்ச்சித் தன்மை, கனிம வளம் உள்ளதா, செவ்வாயின் பரப்பளவு மற்றும் தன்மை என்ன, பருவநிலை எப்படி உள்ளது என்பது உட்பட மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.

மங்கல்யான் வெற்றி  ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி : செவ்வாய் கிரத்தை ஆராய மங்கல்யான் செயற்கை கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘செவ்வாய் கிரகம் பற்றி ஆராய இந்தியாவின் முதல் முயற்சியான மங்கல்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல். நமது விண்வெளி திட்டத்தில் முத்திரை பதித்துள்ள இந்த நாள், இந்திய விஞ்ஞானிகளுக்கு விண்வெளித் துறையில் மேலும் பல சாதனைகள் புரிய ஊக்கமளிக்கட்டும். இந்த பணியில் ஈடுபட்ட தங்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மங்கல்யான் வெற்றிக்காக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த வரலாற்று சாதனைக்காக வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். பின்னர் அவர் வெளியிட்ட செய்தியில், ‘‘செவ்வாய்கிரக ஆராய்ச்சியில் முதல் வெற்றியான மங்கல்யான் செயற்கைகோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள். ராக்கெட் தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் திறமைக்கு இது சான்றாக அமைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மங்கல்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித்துறையில் இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நமது திறமை மிக்க விஞ்ஞானிகளின் இந்த சாதனை ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘‘மங்கல்யான் வெற்றி மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது நமது விண்வெளி சாதனையில் மைல்கல்’’ என்றார்.

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் வெளியிட்ட செய்தியில், ‘‘செவ்வாய்க்கு 48.5 கோடி மைல் தூர பயணத்தை மங்கல் யான் செயற்கைக் கோள் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. செவ்வாய் சுற்றுவட்ட பாதையில் மங்கல்யான் செயற்கைக்கோளை செலுத்தும் சவாலான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

* பிஎஸ்எல்வி ராக்கெட் செய்ய 110 கோடியும், செயற்கைகோளான மங்கல்யான் விண்கலம் தயாரிக்க 150 கோடியும், ராக்கெட், விண்கலம் இணைக்க, கொண்டுச்செல்ல, கையாள, நிலைநிறுத்த, ஏவிடவும் 90 கோடியும் செலவிடப்பட்டது.
* 2008ல் சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திராயன்,1க்கு பிறகு மங்கல்யான் உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
* மங்கல்யான் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கோளை நீள் வட்டப்பாதையில் சுற்றி ஆய்வுகள் செய்யும். அப்போது நீள் வட்டப்பாதையில் விண்கலம் சுற்றும்போது செவ்வாயில் இருந்து  குறைந்தபட்ச தொலைவு 377கிமீ, அதிகபட்ச தூரம் 80000கிமீ.

‘எங்களை முறியடிக்கும் முயற்சியா?’ இல்லை என்கிறது சீனா

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா நாடுகள் ஈடுபட்டுள்ளன. சீனா விண்கலம் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்போது இந்தியா அனுப்பியுள்ள விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதால், அது விண்வெளி ஆய்வில் சீனாவை முறியடிப்பதாக அமையும் என கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ கூறியதாவது:

 விண்வெளியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நாட்டுக்கும் இதில் உரிமை உள்ளது. இருப்பினும், விண்வெளியை பயன்படுத்தும் விஷயத்தில் அமைதியும், நிலையான இடைவிடாத வளர்ச்சியும் உடையதாக அமைய சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரசியல் ரீதியாக நட்புறவு கொண்டிருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். சீன பத்திரிகை ஒன்றில், ‘விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவை முறியடிக்கும் விதத்தில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமை நிலையில் இருக்கும்போது, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன் அனுப்ப கோடிக்கணக்கில் இந்தியா செலவிடுகிறது‘ என்று விமர்சித்திருந்தது.  இதுகுறித்து ஹாங் லீ கூறுகையில், ‘விண்வெளி மையம் அமைப்பதிலும், ஆட்களை விண்கலத்தில் அனுப்புவதிலும் சீனா ஏற்கனவே இந்தியாவை விட முன்னணியில் உள்ளது‘ என்றார்.

சாதனை படைக்குமா முதல் முயற்சி: செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
இந்தியாவின் மங்கல்யான் பயணம் வெற்றிபெறும் பட்சத்தில், செவ்வாய் கிரகத்தை அடைந்து சாதனை படைக்கும் நான்காவது நாடாக இந்தியா திகழும். அதுமட்டுமல்ல, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் முதல் முயற்சியில் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருப்பினும் 40 முயற்சிகளில் 23 முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. இதில் 1999ம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய விண்கலமும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனா அனுப்பிய விண்கலமும் அடங்கும்.

மங்கல்யான் பெயர் காரணம்


செவ்வாய் கோளை  மங்கலகாரன் என்று நமது நாட்டில் அழைக்கப்படுகிறது. அதிலிருந்து மங்கல் என்ற சொல் எடுக்கப்பட்டது. எனவே மங்கல் என்றால் செவ்வாய், யான் என்றால் பயணம் என்று அர்த்தம். எனவே செவ்வாய்க்கு அனுப்பும் செயற்கைகோளுக்கு மங்கல்யான் என்று பெயர் சூட்டினார்களாம்.
தெலங்கானா போராட்டம்

ஏவுதளத்தில் உள்ள அரங்கில் இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆந்திரா மாநிலத்தை இரண்டாக  பிரிக்கக் கூடாது என்று கூறி ஆந்திராவை சேர்ந்த  பத்திரிகையாளர்கள் அரங்குக்கு வெளியே முழக்கமிட்டனர்.

பார்த்ததால் பரவசம்

* தமிழக எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் மங்கல்யான் ஏவப்படுவதை பார்க்க அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.

* விண்வெளி ஆராய்ச்சி மைய பணியாளர் குடியிருப்புகளில் முதல்நாளே அனுமதி வாங்கி மாடிக்கு சென்று ராக்கெட் செல்வதை பரவசத்துடன் பார்வையிட்டனர்.

* ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகள், சிற்றூர்களிலும் பலர் நீண்ட நேரம் காத்திருந்து ராக்கெட் ஏவப்படுவதை பார்த்து மகிழ்ந்தனர்.

* இப்படி அருகில் இருந்து பார்க்க முடியாதவர்களும் தொலைவில் இருந்து ராக்கெட் புகை கக்கி செல்வதை பார்க்க முடியும் என்பதால் நெல்லூர், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், சித்தூர் மாவட்டங்களிலும் இருந்து பலரும் மாடியிலும், தெருவிலும், திறந்தவெளி திடலிலும் நின்று மங்கல்யானை உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

* இப்படியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கோடிக்கணக்கானவர்கள் தங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே தொலைக்காட்சியில் மங்கல்யானை சுமந்துக் கொண்டு ராக்கெட் செல்வதை பார்த்து ரசித்தனர். கிரிக்கெட் போட்டியை விட அதிகமானவர்கள் ராக்கெட்டை பார்த்து ரசித்தனர்.

செவ்வாய் கிரகத்துக்கான முதல் பயணம்

நோக்கம்


உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் மீத்தேன் உள்ளதா என்ற ஆய்வு திட்டம், நிர்வாகம் மற்றும் கோள்களுக்கு இடையேயான செயல்பாடுகள் பற்றி ஆய்வு
விண்வெளியில் நெடுந்தூர தொலை தொடர்பு, நேவிகேஷன் பற்றிய ஆய்வு விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வு

விண்கலத்தின் விவரம்
தயாரிப்பு: இஸ்ரோ
ராக்கெட் எடை:1,350 கிலோ
விண்கலத்தின் எடை:  15 கிலோ
ராக்கெட்: பி.எஸ்.எல்.வி சி,25
மின்சக்தி:  சூரிய மின்சக்தி தகடுகள்

சுற்றுவட்டபாதையின் வரையறை

குறிப்பேடு முறை:  மைய தொலைவு
மிக அருகில்:   377 கி.மீ
தொலைவில்: 80,000 கி.மீ
சாய்வு கோணம்: 17.864 டிகிரி
பயண காலம்: 300 நாட்கள்
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top