திருப்போரூர் அருகே கல்லூரி பேராசிரியை கழுத்தை நெரித்து கொலை
திருப்போரூர், அக். 18:
திருப்போரூரை அடுத்த தையூரில் கேளம்பாக்கம் சாலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபாய் (59) கல்லூரி பேராசிரியர்.
இவருடைய கணவர் ஜெயக்குமார் இறந்து விட்டார். மகன் ஜிப்ட்சனுடன் கடந்த ஜனவரி மாதம் தான் எப்சிபாய் இங்கு குடி வந்தார்.
மறைமலைநகரில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜிப்ட்சன், காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில்தான் வீடு திரும்புவார்.
இதனால் எப்சிபாய் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். நேற்று காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜிப்ட்சன் இரவு 8 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது எப்சிபாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டார். ஜிப்ட்சனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தனியாக இருந்த எப்சிபாயை கொள்ளையர்கள் திட்டம் போட்டு வீடு புகுந்து கழுத்தை நெரித்து, தலையை சுவற்றில் மோதி கொலை செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
எப்சிபாய் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை, பீரோவில் இருந்த ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஜிப்ட்சன் வேலைக்கு புறப்பட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே எப்சிபாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் பட்டப்பகலில் மிகவும் துணிச்சலுடன் கொள்ளையர்கள் கொடூரமாக எப்சிபாயை கொன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். துப்பு துலக்குவதற்காக வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கொலை நடந்த 6–வது மாடியில் இருந்து 7–வது மாடி வரை ஓடிச்சென்று நின்று விட்டது.
அப்பகுதியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 100 பேர் நேற்று இரவு 11 மணி அளவில் நுழைவு வாயிலில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கியுள்ளோம். ஆனால் இங்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. தினமும் புதிது புதிதாக ஆட்கள் வருகிறார்கள் என்று புகார் கூறினார்கள். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
0 comments