6 September 2013

பொன்மாலை பொழுது - திரை விமர்சனம்

பொன்மாலை பொழுது - திரை விமர்சனம் 


 
ஹீரோ ஆதவ் கண்ணதாசனும், ஹீரோயின் காயத்ரியும் பிளஸ்,2 படிக்கிறார்கள். இவர்கள்  உள்ளிட்ட ஒரு நண்பர்கள் குழு, வாரத்தில் 5 நாள் படிப்பு, மீதி 2 நாள் கும்மாளம் என்று வாழ்பவர்கள். ஆதவுக்கும், காயத்ரிக்கும் முதலில் இருப்பது நட்பு. அதை தவறாகப் புரிந்து கொள்ளும் காயத்ரியின் தந்தை அருள்தாஸ் ஆதவை செருப்பால் அடித்துவிட, அந்த அனுதாபமே காயத்ரிக்கு அவர்மீது காதலை கொண்டு வருகிறது. காதலுக்கு எதிராக வன்முறை வழியில் காயத்ரி குடும்பமும் காதலை ஆதரிக்காவிட்டாலும் பிரச்னையை தீர்க்க அகிம்சை வழியில் ஆதவ் குடும்பமும் நிற்கிறது. இறுதியில் எது வெற்றி பெற்றது என்பது கதை.


கவியரசர் கண்ணதாசன் குடும்பத்து வரவான ஆதவ், பள்ளி மாணவன் வேடத்தில் பொருந்தியிருக்கிறார். காதல் படுத்தும்பாட்டில் அவர் படும் துன்பங்கள் யதார்த்தம். ‘எங்க திரும்பினாலும் அவள் முகம்தான் தெரியுதுப்பா. அவ இல்லாட்டி செத்துருவேன்’ என்று கதறுகிற காட்சி ஒன்றே சாட்சி. காயத்ரி முந்தைய படங்களை விட அழகாக இருக்கிறார். தன் காதலுக்குத் தாயிடம் விளக்கம் சொல்லும் இடத்தில் வியக்க வைக்கிறார்.



 
பொறுப்பான தந்தையாக கிஷோர். மகனின் எல்லா விஷயங்களும் தெரிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அரவணைத்துக் கொள்ளும்போது, இப்படியொரு அப்பா நமக்கு வாய்க்கவில்லையே என்று ஏங்க வைக்கிறார். காதல் விவகாரத்தில் மகன் போலீஸ் ஸ்டேஷன் வரை போய்வந்த பிறகும், உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறபோது அவர்  காட்டும் பாவனைகள் அருமை.


கிஷோரின் மனைவியாக வரும் அனுபமாவின் நடிப்பு, யதார்த்தமான பிரதிபலிப்பு. பின்னணி இசை காட்சிக்கு மெருகூட்டினாலும் ஒரே மாதிரியான காட்சி மீண்டும் மீண்டும் வரும்போது பின்னணி இசையும் ரிபீட் ஆவது ரசிக்கும் படியாக இல்லை. பாடல்கள் பரவாயில்லை. அதை ராஜவேல் ஒளிவீரன் காட்சிபடுத்தியிருக்கும் விதம் ரிச்.



பள்ளி பருவத்து காதல் பக்குவமில்லாதது என்கிற மெசேஜுடன் சமீபத்தில் சில படங்கள் வந்து விட்டதாலும், காஸ்ட்லியான பள்ளி மாணவர்களின் பீர், பிகர், ஈசியார் காட்சிகளும் அதிகம் பார்த்து விட்டதாலும் காட்சிகள் எதுவும் பெரிதாக ஈர்க்கவில்லை.

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காயத்ரியின் அப்பா, ஆதவை செருப்பால் அடித்து துன்புறுத்திவிட்டு மகளை கண்டிக்காமல் விடுவதில் லாஜிக் இல்லை. ஒரு காட்சி தவிர மற்ற காட்சியில் மகளை கோபமாகக் கூட அவர் பேசுவதில்லை. மது அருந்துவது தவறு என்று படம் எடுப்பவர்கள் படம் முழுக்க மது அருந்தும் காட்சிகளை வைப்பதைப் போல, பள்ளிப்பருவத்தில் காதலிப்பது தவறு என்று சொல்ல வந்தவர்கள், பள்ளி மாணவர்கள் காதலிக்க படம் முழுக்க கற்றுத் தந்திருக்கிறார்கள்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top