அரியானாவில் ஓடிப்போன காதல் ஜோடி கவுரவக் கொலை
 ஊர்மக்கள் முன்னிலையில் நடந்த கொடுமை
ரோட்டாக்:
அரியானா மாநிலம் ரோட்டாக் அருகே உள்ள கர்னாவதி கிராமத்தைச் சேர்ந்த நிதி பாரக் (20) என்ற பெண் தர்மேந்தர் பாரக் (23) என்ற வாலிபரைக் காதலித்துள்ளார். ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.
பெற்றோர் விசாரித்ததில் டெல்லியில் அவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஊருக்கு வரும்படி அழைத்த பெண்ணின் பெற்றோர், எந்த தொந்தரவும் கொடுக்காமல் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதை நம்பிய நிதியும், தர்மேந்தரும் நேற்று ஊருக்கு வந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் அவர்களை நிதியின் குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், நிதியை ஊர் மக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அவரது காதலனின் கை, கால்களை உடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் தலையை துண்டித்து கொன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கர்னாவதி கிராமத்திற்கு வந்தபோது பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்துக்கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் நிதியின் உடலையும், தர்மேந்தரின் உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தந்தை, மாமன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கவுரவக் கொலை அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 














 
 
 
 
 
0 comments