31 August 2013

3 ஆண்டு தண்டனை தருவதைவிட இப்போதே விடுதலை செய்துவிடலாம்: டெல்லி மாணவி தாயார் ஆவேசம்

 3 ஆண்டு தண்டனை தருவதைவிட இப்போதே விடுதலை செய்துவிடலாம்: டெல்லி மாணவி தாயார் ஆவேசம்புதுடெல்லி, ஆக.31:-


புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பிடிபட்ட 5 குற்றவாளிகள் ஒருவனுக்கு இன்று சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளில் உள்ள பெண்களின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கின் பின்னணியை சற்று பின்நோக்கிப் பார்ப்போம்.

டிசம்பர் 16:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். இரவு 9.30 மணிக்கு வெளியில் வந்த அவர்களுக்கு வீடு திரும்ப ஆட்டோ கிடைக்கவில்லை. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் அவர்கள் ஏறினார்கள்.

இரவு 10 மணி:- பஸ்சில் டிரைவர் ராம்சிங்கும் அவனது கூட்டாளிகள் 5 பேர் இருந்தனர். அவர்கள் மாணவியை கிண்டல் செய்தனர். அதை மாணவியின் நண்பர் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் கை-கலப்பு, மோதல் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பழைய இரும்பு கம்பிகளை எடுத்து சாப்ட்வேர் என்ஜினீயரை சரமாரியாக தாக்கினார்கள். இதை மாணவி தடுத்தார். மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து மாணவி அவர்களை கடுமையாக திட்டினார். பஸ்சை நிறுத்தும்படி கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள், மாணவியை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்கினார்கள். ஒருவன் மாணவி வயிற்றில் கம்பியால் குத்தினான். இதில் மாணவி சுருண்டு விழுந்தார். போதையில் இருந்த வாலிபர்கள் ஈவு இரக்கமின்றி மாணவியை கற்பழித்தனர்.

சுமார் 30 நிமிடம் அந்த பஸ் டெல்லி சாலையில் ஓடிய நிலையில், மாணவி சின்னா பின்னமாக்கப்பட்டார். காம இச்சையை தீர்த்துக் கொண்ட 6 பேரும் 10.35 மணியளவில் ஓடும் பஸ்சில் இருந்து மாணவியையும், அவரது நண்பரையும் சாலையோரத்தில் தள்ளிவிட்டு சென்றனர்.

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

டிசம்பர் 17:- டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அன்று காலை பரபரப்புடன் இணையத்தளங்களில் வெளியானது. மாணவிக்கு மயக்க நிலையில் செயற்கை சுவாசத்துடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதன் மூலம் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது. டெல்லி போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினார்கள்.

டிசம்பர் 18:- மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளில் முக்கியமானவரான ராம்சிங்கை போலீசார் கைது செய்தனர். அவன் ஓட்டி வந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய உரிமம் இல்லாமல் அந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ராம்சிங் கொடுத்த தகவலின் பேரில் அவனது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய 3 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்ற 2 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விரைந்தனர்.

டிசம்பர் 19:- சப்தர்ஜங் மருத்துவமனையில் மாணவி உடல்நிலை மிக, மிக கவலைக்கிடமாக மாறியது. துருபிடித்த இரும்பு கம்பியால் தாக்கியதில் மாணவி குடல் கிழிந்து அழுகி விட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் டாக்டர்கள் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து மாணவி சிறுகுடலை அகற்றினார்கள். அன்றே அடுத்தடுத்து மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

டிசம்பர் 20:- மாணவி கற்பழித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடெங்கும் மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்தது. குற்றவாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி இந்தியா கேட் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மாணவ-மாணவிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இது இந்தியாவில் இதுவரை மக்களிடம் ஏற்படாத எழுச்சியாக கருதப்பட்டது. இதனால் உலகின் பல நாடுகளிலும் இது பற்றிய செய்திகள் முதன்மை இடம் பெற்றன.

டிசம்பர் 21:- மாணவியை கற்பழித்த 5-வது குற்றவாளி அக்ஷய் தாக்குர் உத்தர பிரதேச மாநிலத்தில் பிடிபட்டான். 6-வது குற்றவாளியும் கைதானான். அவன் மைனர் என்பதால் அவன் பெயரை போலீசார் வெளியிடவில்லை.

இதற்கிடையே, சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த சிகிச்சையால் மாணவி மயக்கம் தெளிந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் விலக்கப்பட்டது. அவரிடம் டெல்லி மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் வாங்கினார்.

அப்போது அந்த மருத்துவ மாணவி, நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். குற்றவாளிகளை தப்பவிட்டு விடாதீர்கள் என்றார். இதனால் டெல்லியில் விடிய, விடிய போராட்டம் நடந்தது.

டிசம்பர் 22:- மாணவி உருக்கமாக கேட்டு கொண்டது மக்களிடம் கொந்தளிப்பை அதிகரித்தது. மேலும் மாணவி துணிச்சலாக, நல்ல மன தைரியத்துடன் இருப்பதாக சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் பாராட்டினார்கள். இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் தர்ணாவை தீவிரபடுத்தினார்கள்.

அன்றிரவு அவர்கள் சோனியா வீட்டுக்கு ஊர்வலமாக சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த சோனியாவும், ராகுலும் குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம். உரிய தண்டனை பெற்று கொடுப்போம் என்றனர். எத்தனை நாட்களுக்குள் தண்டனை பெற்று கொடுப்பீர்கள் என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். அதற்கு சோனியா பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர்.

டிசம்பர் 23:- அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லி இந்தியா கேட் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால் போலீசார் திணறினார்கள். இதையடுத்து இந்தியா கேட் பகுதியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடியடி நடத்தியும், தண்ணீர் பீச்சியடித்தும் கலைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீண்டும் இந்தியா கேட் பகுதியில் திரள முடியாதபடி அந்த பகுதி சீல் வைக்கப்பட்டது.

மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து மாணவி கற்பழிப்பு தொடர்பாக பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் போலீஸ் தடியடிக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தடியடி நடத்த உத்தரவிட்ட டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் மீது டெல்லி மாநில முதல்-மந்திரி ஷீலா தீட்சித் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை கூறினார்.

டிசம்பர் 24:- இந்தியா கேட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் திரளாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லியில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 10 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே மாணவி உடல்நிலை சற்று தேறியது. இந்த நிலையில் மாணவியிடம் 21-ந்தேதி வாக்குமூலம் பெற்றபோது போலீசார் குறுக்கீடுகள் இருந்ததாக புகார்கள் எழுந்தன. எனவே அன்று மாணவியிடம் மீண்டும் 2-வது தடவையாக வாக்குமூலம் பெறப்பட்டது.

அதே சமயத்தில் டெல்லி திகார் ஜெயிலில் கற்பழிப்பு குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாணவியின் நண்பர் அணிவகுப்பை பார்த்து உண்மையான குற்றவாளிகளை மிகச்சரியாக அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் 7 கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 25:- மாணவி நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மேலும் 2 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

டிசம்பர் 26:- மருத்துவ மாணவி உடல் நிலை மிகவும் மோசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி டாக்டர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அதன்பிறகு மாணவியை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மாணவி பெற்றோர், சகோதரர்களுக்கு மத்திய அரசு உடனடியாக பாஸ்போர்ட், விசா வழங்கியது.

சிறப்பு ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாணவி டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்துக்கு மட்டும் கட்டணமாக 60 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கியது. மாணவியுடன் 2 டெல்லி டாக்டர்களும் சிங்கப்பூர் சென்றனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ராகவன் தலைமையில் அதிகாரிகள் குழு மாணவி சிகிச்சைக்கான எல்லா உதவிகளையும் செய்தது.

டிசம்பர் 27: அதிகாலை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மாணவி சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு நவீன சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது மாணவி தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மாணவி உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதாக சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவித்தனர்.

டிசம்பர் 28: மாணவி கொண்டு வரப்படும் போது மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானது. மாணவி உடல் உள்உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல்இழக்க தொடங்கின. மாணவி குடல், நுரையீரலில் கிருமி தொற்றுகள் அதிகம் ஏற்பட்டது. மாணவி உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.

டிசம்பர் 29: அன்று அதிகாலை 2.15 மணிக்கு மாணவி மரணம் அடைந்தார். மாணவி மரணத்தை தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள 10 மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன.

சிங்கப்பூரில் மரணமடைந்த மாணவியின் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. மாணவி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

இந்த வழக்கில், பஸ்சின் டிரைவர், 17 வயது நபர் உள்பட 5 பேரை போலீசார் குற்றவாளிகளாக சேர்த்தனர். பஸ்சில் நிகழ்ந்த சம்பவங்கள், அதன் பின்னர் டெல்லி ஆஸ்பத்திரியில் மாணவி அளித்த வாக்குமூலம், உடன் சென்ற நண்பர் அளித்த வாக்குமூலம், டெல்லி மற்றும் சிங்கப்பூர் ஆஸ்பத்திரிகளிள் மருத்துவ அறிக்கை, மாணவியின் மரணத்துக்கு பின் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் போன்றவை ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையாக சாகெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

30 பேர்களை சாட்சிகளாக கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வாத பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை 11-ம் தேதியே தீர்ப்பு வழங்கப்படும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால், தீர்ப்பு தேதி தள்ளிக்கொண்டே போனது.

இரண்டாவது முறையாக சிறுவன் மீதான வழக்கின் தீர்ப்பை ஆகஸ்டு 5–ந்தேதிக்கு நீதிபதி கீதாஞ்சலி கோயல் தள்ளி வைத்தார். ஆகஸ்டு 5–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பினை மீண்டும் ஆகஸ்டு 19-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பினை வரும் 31-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி மீண்டும் அறிவித்தார். தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கோர்ட் வாசலில் ஏராளமான ஊடக நிருபர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

நாடே பரபரப்பாக எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணி அளவில் வழங்கப்பட்டது.

போலீசார் தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என்று கூறிய நீதிபதி, தண்டனையை சிறப்பு காப்பகத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி மாணவியின் தாயார், 'குற்றம் செய்தவனின் வயது என்ன? என்பதை கருத்தில் கொள்ளாமல் அவன் செய்த குற்றத்தின் தன்மை என்ன? என்பதை சீராய்ந்து மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மாலை வழங்கப்பட்ட தீர்ப்பு பற்றி அறிந்த டெல்லி மாணவியின் தாயார், 'இவ்வளவு பெரிய கொடுமையை செய்த குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை வழங்குவதை விட பேசாமல் அவனை விடுதலை செய்து விடலாம்' என்று வேதனையுடன் தெரிவித்தார்.  


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top