31 July 2013

எனக்கு எந்த நோயும் இல்லை நான் உயிரோடுதான் இருக்கிறேன் நடிகை கனகா பரபரப்பு பேட்டி

எனக்கு எந்த நோயும் இல்லை நான் உயிரோடுதான் இருக்கிறேன் 
நடிகை கனகா பரபரப்பு பேட்டி


சென்னை : 

             புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை கனகா, கேரளாவில் ஆலப்புழாவிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்ற வதந்தி நேற்று பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
பத்திரிகைகள் மற்றும் டி.வி சேனல்களில் கனகா குறித்து ரசிகர்கள் விசாரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் மீடியாவை தொடர்புகொண்ட கனகாவின் தந்தை தேவதாஸ், ‘சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் கனகா உயிருடன்தான் இருக்கிறார். அவருக்கு மனநிலை பாதித்துள்ளதாக தெரிகிறது என்று சொன்னார்.

மறைந்த நடிகை தேவிகாவை மணந்த தேவதாஸ், குடும்ப பிரச்னை காரணமாக அவரை ஏற்கனவே பிரிந்து விட்டார். கனகாவுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், நேற்று மாலை கனகாவின் வீட்டுக்கு வந்த அவர், மீடியாவிடம் கனகா உயிருடன் இருக்கும்  விஷயத்தை சொன்னார். பிறகு அனைவரையும் வீட்டுக்குள் சென்று, கனகாவை பேட்டி எடுக்க சொல்லி வற்புறுத்தினார்.

இந்நிலையில் தன் வீட்டை பூட்டு போட்டு பூட்டிய கனகா, யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வெளியே பொதுமக்கள் கூடியதால், போலீசார் அங்கு வந்தனர். அவர்களாலும் கனகாவின் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து பத்திரிகையாளர்களும், போட்டோகிராபர்களும் கனகாவின் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது ஏறி வீட்டுக்குள் குதித்தனர். கனகா வெளியே வந்து, உயிருடன் இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கனகா பேட்டி கொடுக்க சம்மதித்தார். பிறகு வீட்டு வாசலில் நின்ற அவர், சிரித்தபடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நீங்க செத்துட்டதா செய்தி வந்துச்சே?  

                           (சிறிது நேரம் விடாமல் சிரிக்கிறார்) நான் செத்துப் போனதா வந்த செய்தியை நானே பாத்தேன். அதைப் பாத்து சிரிச்சேன். உண்மைய சொல்லணும்னா மகிழ்ச்சியா இருந்துச்சு. ஏன்னா, ரசிகர்கள் இன்னும் என்னை நினைவில் வச்சிருக்காங்களே அதனாலதான்.
 

இறந்து போனதா வந்த வதந்தி அதிர்ச்சியா இல்லையா?

                     ஒவ்வொரு மனுசனுக்கும் பிறப்பும், இறப்பும் சமம். அம்மா வயித்துல இருந்து பிறக்கிறோம். அப்புறம் இந்த மண்ணுக்குள்ள புதைகிறோம், நெருப்பில் சிதைகிறோம். யாருக்கும் எந்த வியாதியும் வரலாம், போகலாம்.

 இதில பயப்படுறதுக்கு என்ன இருக்கு?

ஆலப்புழாவில் கேன்சர் ஆஸ்பிட்டல்ல இருந்ததாவும் செய்தி பரவுச்சே?

ஆலப்புழாவில் என் பிரெண்ட்ஸ் இருக்கலாம். அவங்கள பாக்க நான் போயிருக்கலாம். அதில் என்ன தப்பு? ஆனா கேன்சர் சிகிச்சைக்கு போனேன்னு செய்தி வருது. கனகா யாரு... பெரிய ஸ்டார் இல்லையா? உடனே பெரிய நியூஸா போட்டுட்டாங்க. இன்னமும் நான் ஹாட் நடிகைகள் லிஸ்ட்டிலதான் இருக்கேன்றது சந்தோஷமா இருக்கு.

கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கீங்களா?

                     எனக்கு கேன்சருன்னு செய்தி வந்த பிறகுதான் உண்மையிலேயே அது எனக்கு இருக்கான்னு டெஸ்ட் பண்ணனும் போல இருக்கு. அதோட டயாபடீஸ் இருக்கா,  பி.பி. இருக்கா, மூளையில் கட்டி ஏதாவது இருக்கான்னு டெஸ்ட் பண்ணனும் (சிரிக்கிறார்). எனக்கு புற்றுநோய் இருக்குன்னு யார் சொன்னது. சொன்ன ஒரு ஆள என்கிட்ட காமிங்க. யாரோ, எதுவோ சொன்னாங்கன்னு என்கிட்ட கூட கேக்காம செய்தி போட்டுட்டாங்க. இதனால பத்திரிகையாளர்கள் மீது  வருத்தமா இருக்கேன்.

ஏன் குடும்பத்த விட்டு பிரிஞ்சு தனியா இருக்கீங்க?

இப்போ அதுவா கேள்வி? நான் உயிரோட இருக்கேனா, இல்லையான்றதுதானே முக்கியமான கேள்வி. தனிமை, தனிமைன்னு சொல்றீங்களே. எது தனிமை. ஈஞ்சம்பாக்கம், ஈ.சி.ஆர் ரோடுன்னு எல்லாரும் காட்டுக்குள்ள வசிக்கும்போது, சென்னையின் பிஸி ஏரியாவான ராஜா அண்ணாமலைபுரத்தில், பக்கத்தில் நிறைய பிளாட்டுகள் இருக்குற இடத்துல குடியிருக்கேன். தனி பங்களாவுல வசிக்கிறேன். நான் பணக்காரி. அதனாலதான் இந்த மாதிரி ஏரியாவுல தனி வீட்டுல இருக்கேன். இதுல என்ன தனிமை இருக்கு. இங்க எல்லாருமா கல்யாணம் செஞ்சுக்கிறாங்க. குழந்தை பெத்துக்கிறாங்க?

திரும்பவும் சினிமாவில் நடிப்பீங்களா?

மறுபடியும் நடிக்கிறது பத்தி யோசிக்கல. காலம், நேரம் வந்தா பாக்கலாம். நல்ல வாய்ப்பு வந்தா நடிப்பேன்.

உங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் என்னதான் சண்டை?

அப்பாவா... அவர் யாருன்னே தெரியாது. எனக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்ல.

நீங்க உயிரோட இருக்குற செய்திய உங்க அப்பாதான் எல்லாருக்கும் சொன்னார்.

அதுக்கு என்ன? அப்படி சொன்னதுக்காக அவருக்கு நான் மானியம் தரணுமா?

உங்களுக்கு மனநிலை பாதித்துள்ளதாகவும் சொல்கிறார்களே?

                      நான் பைத்தியம்தான். மனம் ஒரு குரங்கு. என்னை ஒரு மனநோயாளி என்று எழுதிவிட்டு, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கான்னு கேட்கிறீங்களே, நியாயமா இது? மலையாளப் படத்தில் நடித்தபோது, ஷூட்டிங்கிற்காக ஆலப்புழா போயிட்டு வந்திருக்கேன். எனக்கு மலையாளத்தில் தெளிவா பேச வராது. என்னை பத்தி வதந்தியை யார் பரப்பினதுனு தெரியாது. நான் இப்போ நடிக்கிறது இல்ல. நடிச்சிருந்தா இந்த செய்தியால ஷுட்டிங் பாதிச்சிருக்கும்.

இப்போ அப்படி இல்ல. அதனாலதான் இந்த வதந்திய பெரிசா எடுத்துக்கல. எனக்கு உலகம் பூரா ரசிகர்கள் இருக்காங்க. ஆனா எனக்கு நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. சொந்தக்காரர்களும் இல்லை. அதனால இந்த புரளியை யார் கிளப்பியிருப்பாங்கன்னு எனக்கு கவலை இல்ல. இவ்வாறு கனகா கூறினார். பிறகு அவர் தன் வீட்டு வராண்டாவில் நடந்து சென்றும், சிரித்தபடியும் போஸ் கொடுத்தார். கடைசிவரை அவர் தன் தந்தை தேவதாஸ் இருக்கும் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top