நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் சிக்குகிறார்:
ராஜஸ்தான் அணிக்கு சிக்கல்
புதுடெல்லி, ஜூன் 6:
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ராவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது தொழில் கூட்டாளியும் நண்பருமான உமேஷ் கோயங்கா மூலம் சூதாட்டத்தில் பணத்தை வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் அவர் வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்கும் வகையில், அவரது பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேசமயம் உமேஷ் கோயங்காவிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபற்றி ராஜ் குந்த்ராவின் மனைவியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ஷில்பா ஷெட்டி கூறுகையில், ‘என் கணவர் ராஜ் குந்த்ரா எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவரது பெயரை கோயங்கா தவறுதலாக பயன்படுத்தியிருக்கிறார்’ என்றார்.
கணவர் தவறு செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்த ஷில்பா ஷெட்டியின் முகத்திரையையும் இப்போது டெல்லி காவல்துறை கிழித்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் ஒரு போட்டியில் ஷில்பா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக உமேஷ் கோயங்கா போலீசில் தெரிவித்துள்ளார். மேலும், ராஜ் குந்த்ரா கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டிய தகவலையும் காவல்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டு பற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், “நான் வெளிப்படையாக பந்தயம் கட்டினேன் என்று கூறுவது முட்டாள்தனம். இதுவரை எந்த போட்டியிலும் நான் பந்தயம் கட்டியதில்லை. உண்மைதான் நீடிக்கும்.” என்றார்.
இதற்கிடையே உரிமையாளர்கள் 2 பேர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல். அமைப்பில் நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
0 comments