தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை
வட்டிக்கு கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலையில்பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மீட்டர் வட்டி, நாள் வட்டி, நிமிட வட்டி என பலவித வட்டிகளை வாங்குகிறார்கள் சிலர்.
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு சில இடங்களில் கந்துவட்டி கொடுமை அதிகரித்துள்ளது.
குறிப்பாக மதுரையில் கடந்த 5 மாதங்களில் மட்டுமே 65 கந்துவட்டி வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் அரசு அதிகாரிகளும் அடங்கி இருக்கிறார்கள்.
மதுரை மாவட்ட காவல்துறையிலேயே 18 காவல்துறையினர் கந்துவட்டி கொடுப்பதாக புகார்கள் கிடைத்த நிலையில் இதுகுறித்து விசாரித்து அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருவதாக மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சி அளிக்கும் இந்த புகார்களின் தொடர்ச்சியாக, மற்ற தென் மாவட்டங்களிலும் கந்து வட்டி கொடுமை தலைதூக்கி இருக்கிறது.நெல்லையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 17 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதேநேரத்தில் திண்டுக்கல்லில் ஒரே ஒரு வழக்கு பதிவாகி உள்ளது.வங்கிகளிலோ, கூட்டுறவு அமைப்புகளிலோ கடன் கிடைக்காமல் போகும்போது தனி நபர்களிடம் வட்டிக்கு...... மிக அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிக்குள்ளாகிறார்கள்.
இப்படி கந்துவட்டி வலையில் சிக்கி இன்னல்களுக்கு ஆளான முருகன் என்பவரின் கதை கலக்கமானது.

இவர் அரசாங்க கட்டுமான ஒப்பந்ததாரராக மாற உத்தேசித்த போது பிரச்னை உருவெடுத்தது. இதற்காக கண்ணன் என்பவரிடம் 1999 ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கியிருக்கிறார் முருகன்.
இந்த 16 லட்சத்துக்கு இவர் வட்டியாக கட்டியது மட்டுமே ஒன்றரைக் கோடி ரூபாய்.
இது போதாதென்று, கடந்த 11 ஆண்டுகளாக வட்டியை வந்து வசூல் செய்யும் போதெல்லாம் கந்துவட்டி கொடுத்தவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தொந்தரவு அளித்ததாகவும் கூறுகிறார் முருகன்.
கந்துவட்டிக்கொடுமை குறித்து முருகன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் கண்ணன், மின்னற்கொடி, கல்யாணசுந்தரம் உட்பட 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடன் எத்தனை வகைப்படும்?
கடன் பெற்றவர்களிடம் இருந்து எவ்வளவு அதிகமாக பணத்தை பறிக்க முடியுமோ, அந்தளவுக்கு பணம் பறிக்கும் கந்து வட்டி போலவே இன்னும் ஏராளமான வட்டி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
நாள் வட்டி
காலையில் கடனாகப் பெறும் 900 ரூபாயை 100 ரூபாய் வட்டியுடன் 1000 ரூபாயாக மாலையில் திருப்பிக் கொடுப்பது நாள் வட்டி எனப்படும்.
ராக்கெட் வட்டி
1000 ரூபாய் கடன் வாங்கி, தினமும் 100 ரூபாய் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாயை திருப்பிச் செலுத்துவது ராக்கெட் வட்டியாகும்.
வார வட்டி
கடன் தொகையில் 15 சதவிகிதத்தை முன்கூட்டியே பிடித்தம் செய்துகொண்டு கொடுப்பது வார வட்டி. கடன் பெற்றவர், வாரம் ஒருமுறை ஆயிரம் ரூபாய் வீதம் கடனை முழுவதுமாகச் செலுத்த வேண்டும்.
கம்ப்யூட்டர் வட்டி
வாங்கிய 8 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக ஒரு வாரத்துக்குள் திரும்பச் செலுத்துவது கம்ப்யூட்டர் வட்டியாகும்.
மீட்டர் வட்டி
நடுத்தர மக்கள் அதிகம் வாங்குவது மீட்டர் வட்டி. ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால், 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். கடன் பெற்றவர், வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம், 10 வாரங்கள் செலுத்த வேண்டும். தவறினால், வட்டி கூடிக் கொண்டே போகும்.
ரன் வட்டி
மணிக்கணக்கில் தரப்படும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. காலை 6 மணிக்கு பணம் வாங்கினால், 4 மணி நேரத்தில் 15 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பி தந்து விட வேண்டும். தவறினால், வாடகைக்கார் வெயிட்டிங்கின் போது மீட்டர் ஏறுவதைப்போல மணிக்கு மணி வட்டி ஏறிக்கொண்டே போகும்.
ஹவர் வட்டி
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வட்டியை கணக்கிட்டு வசூலிக்கும் வட்டிக்கு பெயர் ஹவர் வட்டி.
மாத வட்டி
சொத்து பத்திரங்களை வைத்து ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்டு வாங்கும் மாதவட்டி எனும் நீண்டகால வட்டியும் உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மொத்த கடன் தொகையையும் செலுத்தாவிட்டால் சொத்துகளை இழக்கும் அபாயம் இதில் உண்டு.
0 comments