17 June 2013

மாநிலங்களவை தேர்தலில் திடீர் பரபரப்பு : தேமுதிகவும் களத்தில் குதித்தது

மாநிலங்களவை தேர்தலில் திடீர் பரபரப்பு 

 தேமுதிகவும் களத்தில் குதித்தது




சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவும் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 6 இடங்களுக்கு 8 பேர் போட்டியிடுவதால் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல், இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைகிறது. 

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள 

மைத்ரேயன், இளவரசன் (அதிமுக), 

திருச்சி சிவா, கனிமொழி (திமுக), 

ஞானதேசிகன் (காங்கிரஸ்), 

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) 

ஆகிய 6 பேரின் பதவி அடுத்த மாதம் 24-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் முடிகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. மனுவை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும். 27-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் ஆகிய 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 6 இடங்களுக்கு 6 பேர் மட்டும் மனு தாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கட்சியின் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடுவதாகவும் அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டி.ராஜா இன்று காலை சட்டசபை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தேமுதிகவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவால் மாநிலங்களவை தேர்தலில்  திடீர் திருப்பமாக வாக்குப்பதிவு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுக சார்பில் 4 பேர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 5-வது வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு மேலும் 19 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும், பார்வர்டு பிளாக் உறுப்பினர் ஒருவரும் ஆதரித்தாலும் 11 ஓட்டு ஆதரவு தேவைப்படுகிறது.

திமுகவுக்கு 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற மேலும் 11 ஓட்டுகள் தேவை. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆதரித்தாலும் டி.ராஜாவுக்கு தற்போதைக்கு 18 ஓட்டுகள்தான் உள்ளன. அதேபோல அதிருப்தியாளர்கள் போக மீதம் 22 எம்எல்ஏக்கள் மட்டுமே தேமுதிகவிடம் உள்ளது. இவர்களைத் தவிர காங்கிரஸ் -5, பாமக -3, மமக-2, புதிய தமிழகம்-2 உறுப்பினர்கள் உள்ளனர்.  இந்த கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனவே, தற்போதுள்ள நிலையில் அதிமுகவின் ஒரு வேட்பாளரும் திமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக வேட்பாளர்களும் மற்ற கட்சிகளின் ஆதரவை நம்பியே உள்ளனர். இதுவரை இல்லாத வகையில் 6 இடங்களுக்கு 8 பேர் போட்டியிடுவதால் மாநிலங்களவை தேர்தல் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 1996-க்கு பிறகு மாநிலங்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

இந்திய கம்யூ, தலைவர்கள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு


மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளரும் வேட்பாளருமான டி.ராஜா, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன், குணசேகரன் எம்எல்ஏ, மகேந்திரன் ஆகியோர் இன்று காலை கோட்டையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை சந்தித்து பேசிய பிறகே டி.ராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக ஏற்கனவே அறிவித்த வேட்பாளர்களில் ஒருவரை வாபஸ் பெற்றுக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top