11 December 2013

சிங்கப்பூரில் நடந்த கலவரம் : Exclusive Report இனி தமிழர்களுக்கு விசா கிடைக்குமா?

சிங்கப்பூரில் நடந்த கலவரம் : Exclusive Report
 இனி தமிழர்களுக்கு விசா கிடைக்குமா?

 

"சிங்கப்பூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தால், அங்கு வாழும் தமிழர்கள், எவ்வித பாதிப்புக்கும் ஆளாகவில்லை. வழக்கமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மலேயர்கள், சீனர்களுடன், எப்போதும் போல், தோழமையுடன் பணியாற்றி வருகின்றனர்''என, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள, "லிட்டில் இந்தியா' என்ற, மார்க்கெட் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, கலவரம் மூண்டது. நாற்பது ஆண்டுகளில், இது போன்ற கலவரம் நடந்ததில்லை என சொல்லும் அளவுக்கு, பஸ், போலீஸ் வாகனங்கள், தீ வைத்து கொளுத்தப்பட்டன; போலீசார் பலரும், காயமடைந்தனர். இக்கலவரத்தில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஈடுபட்டதால், அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

அரசுக்கு எதிரான போராட்டத்தில், தமிழர்கள் ஈடுபடுவதாகவும், பிற இன மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்றும், பல கருத்துக்கள் எழுந்தன. இதனால், "சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது; எதிர்காலத்தில், சிங்கப்பூர் செல்ல, தமிழர்களுக்கு விசா கிடைப்பது கடினம்' என்றெல்லாம் வதந்தி பரவத் துவங்கியுள்ளது.சிங்கப்பூரில் நடந்த கலவரம் குறித்து, அங்கு வாழும் தமிழர்கள் கூறியதாவது:

ராஜாராமன்:

          சிங்கப்பூருக்கு வேலைக்காக நான் வந்தேன். இங்கு வாழும் தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். சிங்கப்பூரில், "லிட்டில் இந்தியா' என்ற மார்க்கெட் பகுதி உள்ளது. வார இறுதி நாட்களில், தமிழர்கள், 60 ஆயிரம் பேர் வரை இங்கு கூடுவர். பொருட்களை வாங்கிச் செல்வதோடு, நண்பர்கள், உறவினர்களுடன் சந்தோஷமாக இருப்பர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தைச் சேர்ந்த, சக்திவேல் குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, இரவு, 9:30 மணியளவில், "லிட்டில் இந்தியா'வில் இருந்து, தான் தங்கும் விடுதிக்கு செல்ல, பஸ் ஏறியுள்ளார். பஸ் நடத்துனராக இருந்த பெண், "பஸ் திரும்பி நிற்கும்; புறப்படுவற்கு இன்னும் நேரமுள்ளது; பஸ் நின்றவுடன் ஏறுங்கள்' என, சக்திவேலிடம் கூறியுள்ளார். இந்நிலையில், பஸ் பின்னோக்கி சென்றபோது, பின் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிரிழந்தார். 

இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் ஓட்டுனர், நடத்துனருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், ஓட்டுனரையும், நடத்துனரையும் அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர். 

இதனால் ஏற்பட்ட கோபத்திலும், நண்பர் இறந்து விட்டார் என்ற ஆதங்கத்திலும், அங்கிருந்தவர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம், விபத்தினால் ஏற்பட்ட ஒன்று. 

இதில், உணர்ச்சிவசப்பட்டவர்கள், மோதலில் ஈடுபட்டனர்.கலவரத்தை கட்டுப்படுத்த, சிறப்பு போலீஸ் படை வந்ததும், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இரவு, 11:30 மணி வரை நடந்த இந்த மோதல், அப்போதைக்கு பதற்றத்தை ஏற்படுத்தினாலும், சில மணி நேரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது. வார விடுமுறை முடிந்து, வழக்கம் போல் அனைவரும் பணிக்கு திரும்பி விட்டனர். மோதலில் ஈடுப்பட்டவர்கள் என, 24 தமிழர் உட்பட, 27 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள், அனைவரிடமும் இணக்கமாக பழகக் கூடியவர்கள். இதனால், திடீர் மோதல், ஒரு விபத்து சம்பவம் போல் தான் பார்க்கப்படுகிறது.

ராஜாராமன் மனைவி காந்தி: சிங்கப்பூரில், மலேயர், சீனர்கள் கணிசமாக உள்ளனர்.சிங்கப்பூரில் பிறந்து வாழும் தமிழர்கள், வேலைக்காக சிங்கப்பூருக்கு வந்துள்ள தமிழர்கள் என, தமிழர் மக்கள் தொகையும், குறிப்பிடும்படி உள்ளது. "லிட்டில் இந்தியா' மார்க்கெட் பகுதியில், பஸ் விபத்தால், ஆதங்கப்பட்ட தமிழர்கள் சிலர், மோதலில் ஈடுபட்டனர். 

மற்ற தமிழர்கள், அங்கிருந்த பெண்கள், சிறுவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். கடைகளுக்கு வெளியே இருந்த பொருட்களை, கடைக்குள் வைத்து, கடைக்காரர், கடையை மூட உதவினர். போலீசாரும், வன்முறை ஏற்பட்டு விட்டது என பதற்றமாகி, கூட்டத்தை கலைக்க, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசுதல் போன்றவற்றை செய்யவில்லை. கூட்டத்தினர் கலைந்து செல்லவே அறிவுறுத்தினர். சம்பவம் முடிந்து, அன்றாட பணிகளுக்கு மக்கள் திரும்பி விட்டனர். இச்சம்பவத்தால், தொடர்மோதல் எதுவும் நடக்கவில்லை.

ராமு என்ற ராமச்சந்திரன்:

                      நான், மண் பரிசோதகராக பணிபுரிகிறேன். என் சொந்த ஊர், சிவகங்கை. 10 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் உள்ளேன். ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் ஈடுபட்டவர்களை, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். 400க்கும் மேற்பட்டவர்கள், மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகம் இருப்பதால், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, தமிழர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சோதனை செய்யப்படுகிறது. 

போலீஸ் சந்தேகிக்கும் நபர்கள் இல்லை என்றதும், அவர்களை வேலைக்கு அனுப்பி விட்டனர். சிங்கப்பூர் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இதை, அந்நாட்டு பிரதமரே தெரிவித்துள்ளார். எனவே, தமிழர்களை துன்புறுத்துவேதோ, விரோத போக்கை கடைப்பிடிப்பதோ இல்லை. "நடந்தது ஒரு விபத்து; அதன்மூலம் ஒரு வன்முறை ஏற்பட்டு விட்டதே...' என, மக்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறது. மற்றபடி, தமிழர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. இவ்வாறு, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் கூறினர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top