8 November 2013

வேகமாய் வருது ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ? பூமியை தாக்குமோ?

வேகமாய் வருது ஐரோப்பிய செயற்கைக்கோள் 
கடலில் விழுமோ? பூமியை தாக்குமோ?


 லண்டன் : 

              காலாவதி ஆகி, காயலான் கடை பொருளாகி விட்ட ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடலில் விழ வைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானிகள் அச்சத்தால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் கூட்டாக செயற்கைக்கோள் விடுவது வழக்கம். 2007ல் கோசே என்ற பெயரில் ஒரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் செயலாக்கம் இப்போது போதுமான எரிபொருள் இல்லாததால் முடங்கி விட்டது. விண்ணில் இன்ஜின் இல்லாத விமானம் போல தடுமாறி, விண்வெளி சுற்றுப்பாதையில் தடுமாறியபடி உள்ளது.  

88 நிமிடத்துக்கு ஒரு முறை புவிவட்டப்பாதையை சுற்றியபடி, அதே சமயம் நிமிடத்துக்கு 2.5 மைல் கீழே சரிந்தபடி உள்ளது. இப்போதும் அது 113 மைல் தூரத்தில் மேலே தடுமாறி வருகிறது. ஒவ்வொரு 88 நிமிடத்துக்கும் புவி வட்டப்பாதையை சுற்றி வருவதால் அது கடலிலும் சரி, பூமி பகுதிகளிலும் சரி வலம் வந்தபடி உள்ளது. அதனால் அதன் பாகங்கள் 45, 50 ராட்சத துண்டுகளாக சிதறி விழும் அபாயம் உள்ளது.

அப்படி விழும் போது, அவை, கடலில் விழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதன் இன்ஜின் இயக்கம் அறவே இல்லாமல் இருந்தாலும், அதை ஓரளவு இயக்க முயற்சித்து, கடல் பகுதியில் வலம் வரும் போது இன்னும் வேகமாக விழ வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

அவர்கள் கூறுகையில், ‘இந்த செயற்கைக்கோளின் நூறு டன்னுக்கு மேல் எடை கொண்ட பாகங்கள் பூமியில் விழும் அபாயம் உள்ளது.  அது எங்கு, எப்போது விழும், எப்படி சேதம் ஏற்படுத்தும் என்பது மதிப்பிட முடியாது’ என்று கூறினர். 2 ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் நாசா விண்வெளி கழகம், புவிஈர்ப்பு பகுதி ஆய்வு செயற்கைக்கோள் காலாவதி ஆனபோது, அதை செயலிழக்க செய்தது. அப்போது துல்லியமாக பசிபிக் கடலில் அதன் பாகங்களை விழ செய்து வெற்றி கண்டது.

கடந்த 2011ம் ஆண்டு, செவ்வாயை ஆராய அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம் போபஸ்கிரன்ட், பாதி வழியில் நிலை தடுமாறி பசிபிக் கடலில் விழுந்தது. இதுபோல, ஐரோப்பிய செயற்கைக்கோளையும் கடலில் விழச்செய்ய முடியுமா என்று பல விஞ்ஞானிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர். இது பூமியில் விழுந்தாலும் பெரிய  அளவில் சேதம் உண்டாக்காது என்பது தான் இவர்கள தரும் நம்பிக்கை.

விண்கல்லும் விழ தயார்

ஒரு பக்கம் செயற்கைக்கோள் துண்டுகள் என்றால், இன்னொரு பக்கம் விண்கல் விழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ரஷ்ய நகரான செல்யபின்ஸ்க் என்ற பகுதியில் நூறு மைல் பரப்புக்கு கட்டடங்களில் அதிர்வை ஏற்படுத்தியது ஒரு விண்கல். இது விழுந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டட ஜன்னல் கண்ணாடிகள் சிதறின. ராட்சத பாறை போன்ற எரிகல் பாகங்கள் ஆங்காங்கு சிதறி ஆயிரம் பேர் காயமடைந்தனர்.

அப்பாடா, 200 ஆண்டுக்கு ஒரு முறை தானே இப்படி நடக்கும் என்று ஆறுதல் பட்டால், பத்தாண்டுக்கு ஒரு முறை இப்படி ராட்சத விண்கல் விழும் அபாயம் இருக்கிறது  என்று நாசா உட்பட விஞ்ஞானிகள் அமைப்பு அபாய சங்கு ஊதுகிறது.

ரஷ்யாவில் பிப்ரவரில் விழுந்த விண்கல் 60 அடி நீளம் , அகலம் கொண்டது. மணிக்கு 40 ஆயிரம் மைல் வேகத்தில் வந்த இந்த விண்கல்லில் இருந்து 5 லட்சம் டன் டிஎன்டி என்ற வெடிபொருள் அளவுக்கு வெளிப்பட்டது. பெரும் சேதம் ஏற்பட்டது. இதுபோல, பூமிக்கு அருகே விழ தயார் நிலையில் உள்ள 95 சதவீத விண்கல்கள் பெரும்பாலும் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்டதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விண்கல்கள் விழுந்தால் ஒரு நகரத்தையே அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாம்.

எக்ஸ்ட்ரா தகவல்

ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த சைபீரியாவின் ஆற்றில் 1908ல் முதன் முதலில் 200 அடி நீளம், அகலம் கொண்ட எரிகல் விழுந்தது. அந்த ஆற்றையே தீப்பிழம்பாக்கி 10 லட்சம்  மரங்களை பொசுக்கியது எரிகல்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top