27 November 2013

சங்கரராமன் கொலை வழக்கு: சங்கராச்சாரியார்கள் உள்பட அனைவரும் விடுதலை- புதுவை கோர்ட்டு தீர்ப்பு

சங்கரராமன் கொலை வழக்கு: 
சங்கராச்சாரியார்கள் உள்பட அனைவரும் விடுதலை 
புதுவை கோர்ட்டு தீர்ப்பு



புதுச்சேரி, நவ.27:

                காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 3.9.2004–ல் கோவில் அலுவலகத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியர்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணின் அப்ரூவராக மாறினார்.

சங்கரமடத்தில் நிதி முறைகேடுகளும், தவறுகளும் நடப்பதாக சங்கராச்சாரியாருக்கு சங்கரராமன் அடிக்கடி எச்சரிக்கை கடிதம் எழுதியதாகவும் இதனால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது. கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் தொடங்கி நடந்து வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறாது என கூறி சங்கராச்சாரியர் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த வழக்கு 26.10.2005–ல் புதுவை முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கில் போலீசார் 1873 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

மேலும் 712 ஆவணங்களையும் 370 பேரையும் சாட்சியாகவும் வழக்கில் சேர்த்தனர். 370 சாட்சிகளில் 187 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. இதில் அப்ரூவர் ரவிசுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா, மகன் உமா மைத்ரேயி உள்பட 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதனிடையே வழக்கின் விசாரணை அதிகாரி காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் 16.11.2010–ல் இறந்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டார்.

புதிய நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்தது. சங்கரராமன் மகன் வழக்கின் விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு ஆவணங்களை தர கோரியும் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கு விசாரணையில் அவ்வப்போது தடை ஏற்பட்டது. இந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கதிரவன் சென்னையில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இருப்பினும் தற்போது முழுமையான விசாரணை முடிவடைந்தது.

இதனையடுத்து கடந்த 12–ந் தேதி நீதிபதி முருகன் வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்படும் என அறிவித்தனர். மேலும் இன்றைய தினம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதன்படி இன்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். தில் பாண்டியன், சில்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆஜராகவில்லை. 10.30 மணிக்கு நீதிபதி முருகன் வழக்கை எடுத்தார். அனைவரும் அவர் முன்பு ஆஜரானார்கள். அதன்பிறகு அனைவரையும் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு மற்ற வழக்கு பற்றி விசாரித்தார்.

பின்னர் 10.55 மணிக்கு மீண்டும் வழக்கை எடுத்த நீதிபதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனவே அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top