25 October 2013

தோல் நோய்க்கு அளித்த தவறான சிகிச்சையால் பெண் சாவு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி அபராதம்

தோல் நோய்க்கு அளித்த தவறான சிகிச்சையால் பெண் சாவு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி அபராதம்


புதுடெல்லி : 

             தவறான சிகிச்சையால் இறந்த பெண்ணின் கணவருக்கு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் 3 டாக்டர்கள் சேர்ந்து ரூ. 5.96 கோடி நஷ்டஈடு வழங்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் எய்ட்ஸ் ஆராய்ச்சியாளராக பணியாற்றுபவர் டாக்டர் குணால் சகா. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி அனுராதா. குழந்தைகள் மனநல  நிபுணர். நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

 கடந்த 1998ம் ஆண்டு ஏப்ரல் கோடை விடுமுறையில் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு அனுராதாவும், குணாலும் வந்தனர். அப்போது, அனுராதாவுக்கு தோலில் தடிப்புகள் ஏற்பட்டன. அதற்கு £க்டர் சுகுமார் முகர்ஜி என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என சுகுமார் கூறியுள்ளார். அடுத்த மாதம் மீண்டும் தோலில் தடிப்புகள் ஏற்பட்டது. ‘டெபோமெட்ரால்’ என்ற ஊசி மருந்தை ஒரு நாளைக்கு இருமுறை எடுத்துக் கொள்ளும்படி சுகுமார் பரிந்துரை செய்துள்ளார். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பின் அனுராதாவின் உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. இதையடுத்து,

சுகுமார் மேற்பார்வையில் கொல்கத்தாவில் உள்ள பிரபல ‘அட்வான்ஸ்டு மெடிகேர் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ (ஏஎம்ஆர்ஐ) மருத்துவமனையில் அனுராதா  அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில், அனுராதாவுக்கு ‘டாக்சிக் எபிடெர்மல் நெக்ரோலிஸிஸ் (டென்) என்ற அரிய வகை தோல் நோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 1998ம் ஆண்டு மே 28ம் தேதி சிகிச்சை பலனின்றி அனுராதா இறந்தார்.

சாதரணமாக ஏற்பட்ட தோல் நோய் மனைவியின் உயிரை 2 மாதத்தில் பறித்து விட்டதே என ஆத்திரமடைந்த குணால், மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா என மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அனுராதவுக்கு  ‘டெபோமெட்ரால்’ என்ற மருந்தை டாக்டர் சுகுமார் கொடுத்தது தவறு என மருத்துவ நிபுணர்கள் கூறினர். மேலும், அனுராதாவுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டதும் அவரது மரணத்துக்கு காரணம் என கண்டறிப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மற்ற இரு டாக்டர்களான பலராம் பிரசாத்தும், வைத்தியநாத் ஹால்டரும் தவறான சிகிச்சை அளித்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கும், டாக்டர்களுக்கும் பாடம் கற்பிக்க குணால் முடிவு செய்தார். அனுராதாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவமனைகள் மற்றும் 3 டாக்டர்களிடமும் ரூ. 77 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். தவறான சிகிச்சை மற்றும் கவனக்குறைவு காரணமாக அனுராதா இறந்ததை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம், குணாலுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் முடிவு செய்ய கடந்த 2009ம் ஆண்டு உத்தரவிட்டது.

குணாலுக்கு ரூ.1.73 கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிட்டது.

இழப்பீடை உயர்த்தி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் குணால் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சி.கே.பிரசாத், கோபால கவுடா ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நேற்று அளித்த தீர்ப்பில், குணாலுக்கு கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையும், தவறான சிகிச்சை அளித்த 3 டாக்டர்களும் சேர்ந்து ரூ.5.96 கோடி இழப்பீடு தொகையை 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

மொத்த இழப்பீடு தொகையில் டாக்டர் சுகுமார், டாக்டர் பலராம் பிரசாத் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் எனவும், டாக்டர் வைத்தியநாத் ஹால்டர் ரூ.5 லட்சம் அளிக்க வேண்டும் எனவும், மீதி தொகையை மருத்துவமனை நிர்வாகம் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு’

தீர்ப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள டாக்டர் குணால் கூறுகையில், ‘‘இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அப்பாவி நோயாளிகளுக்கு, கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும் இந்த தீர்ப்பு பாடமாக அமையும். இந்தியாவில் மனித உயிரின் மதிப்பை இந்த தீர்ப்பு உயர்த்தும்’’ என்றார்.

மிகப் பெரிய நஷ்டஈடு இந்தியாவில் முதல்முறை

சிறிய நோய்களுக்காக மருத்துவமனை, டாக்டர்களிடம் செல்லும் நோயாளிகள், தவறான சிகிச்சையால் இறக்கும் சம்பவங்கள் இந்தியாவில் அதிகளவில் நடக்கின்றன. இதனால் ஆத்திரமடையும் உறவினர்களும், குடும்பத்தினரும் டாக்டர்கள், மருத்துவமனைகளை தாக்குகின்றனர். ஆனால், நஷ்டஈடு கோரி நீதிமன்றங்களை நாடுவோர் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. இதுபோன்ற வழக்கில்   பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5.96 கோடி நஷ்டஈடு வழங்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. இதற்காக, டாக்டர் குணால் 15 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

வளர்ந்த நாடான அமெரிக்காவிலும், மருத்துவமனைகளில் அளிக்கப்படும் தவறான சிகிச்சையால் ஆண்டுதோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியாகின்றனர்
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top