15 October 2013

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு: பாண்டிபஜார் நடைபாதை கடைகள் 6 நாட்களில் இடமாற்றம்

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
 பாண்டிபஜார் நடைபாதை கடைகள் 6 நாட்களில் இடமாற்றம்


சென்னை, அக்.15:


சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாண்டி பஜார்-உஸ்மான் சாலையில் 500-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ரெடிமேட் ஆடைகள், செருப்புகள், அலங்கார பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பூ-மாலைகள், பழங்கள் உள்பட வீட்டு உபயோகத்துக்கான பல்வேறுவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏழை-பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்புமக்களும், இப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகளும் பாண்டிபஜார்-உஸ்மான் சாலை நடைபாதை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச்செல்வது வழக்கம்.

இப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளினால் தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றும் கூறி கடந்த 2001-ம் ஆண்டு ‘டிராபிக்’ ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

பெரிய வர்த்தக நிறுவனங்களும் தங்கள் கடைகளை மறைத்து நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கு தொடுத்தனர். வழக்கைதொடர்ந்து ஒய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கு தனியாக வணிக வளாகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பாண்டிபஜாரில் வணிக வளாகம் கட்டிக்கொடுக்க அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் கமிட்டி பரிந்துரை செய்தது.

அதன்படி, முந்தைய தி.மு.க. ஆட்சியில், மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ.4 கோடி 30 லட்சம் செலவில் பாண்டி பஜார் லட்சுமி காந்தா தெரு அருகில் கீழ்தளத்துடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

பாண்டிபஜார் நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், நடைபாதை வியாபாரிகள் வணிக வளாகத்தை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 20-ந்தேதிக்குள் பாண்டிபஜார்-உஸ்மான் சாலை வியாபாரிகள் இடங்களை காலி செய்துவிட்டு, சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள், வணிக வளாகத்திற்கு கடைகளை மாற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சென்னை மாநகர சில்லரை-நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கருணாநிதி கூறும்போது, ‘உஸ்மான் சாலையில் 210 நடைபாதை கடைகளும், பாண்டிபஜார் பகுதியில் 398 நடைபாதை கடைகளும் இயங்கி வருகின்றன.

புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் 628 கடைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், வியாபாரம் மும்முரமாக இருக்கும். எனவே நடைபாதை கடைகளை காலி செய்வதற்கு ஜனவரி மாதம் இறுதி வரை காலக்கெடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தோம்.

பலமுறை காலக்கெடு நீடிக்கப்பட்டு விட்டதால், இனியும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. அக்டோபர் 20-ந்தேதிக்குள் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்புபடி, நடைபாதை கடைகளை வணிக வளாகத்துக்கு கொண்டு செல்வோம்,’ என்றார்.

லிப்ட் வசதி, கழிப்பறை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டிருந்தாலும், வியாபாரிகளுக்கு 5-க்கு 5 அடி என்ற குறுகிய அளவிலேயே கடைகள் அமைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வந்து செல்வதற்கான பாதையும் குறுகிய அளவில் உள்ளது.

இதுகுறித்து பாண்டி பஜார் வணிக வளாகம் அருகே 50 வருடங்களுக்கு மேலாக காய்கறி கடை நடத்தி வரும் கமலா என்ற மூதாட்டி கூறுகையில், ‘பாண்டிபஜார் காய்கறி அங்காடியாக செயல்பட்ட இடத்தில் தான் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகள் மிகவும் சிறியதாக இருக்கிறது.

ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தப்பிக்க வழி இல்லாத சூழலில் வணிக வளாகம் இருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டையே பெரும்பாலான வியாபாரிகளும் கூறுகின்றனர்.

சுமார் 25 ஆண்டுகளாக பாண்டிபஜார்-உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதையிலேயே வியாபாரம் செய்துவிட்டதால், இந்த இடத்தை விட்டு பிரிய மனம் இல்லாமல் இருக்கிறோம் என்றும் ஒரு சில வியாபாரிகள் கூறினர். நடைபாதை கடைகளை அகற்றுவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வணிக வளாகத்தில் 100-க்கும் குறைவான கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top