திமுக மாவட்ட செயலாளர் மீது பாலியல் வழக்கு பதிவு
நெல்லை: நெல்லை டவுனை சேர்ந்த திமுக பிரமுகர் நாலடியார் மகள் தமிழரசி (28). இவர் நெல்லை சரக டிஐஜி சுமித் சரணனிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘3 வாரங்களுக்கு முன்பு நானும் எனது தந்தையும் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனை சந்தித்தோம். கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள்தான் உயர்ந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அவர் சரி என்றார். இரு வாரத்திற்கு முன்பு குற்றாலத்திலுள்ள ஒரு கெஸ்ட் அவுசில் வந்து தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். நானும், எனது தந்தையும் அங்கு சென்றோம். எங்களிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் எனது தந்தையை அடுத்த அறையில் இருக்குமாறு கூறினார்.அவரது அறையில் தனியாக இருந்த என்னிடம் தனது ஆசைகளை நிறைவேற்றினால் கட்சியில் பொறுப்பு அளித்து பெரிய இடத்திற்கு கொண்டு வருவதாக கூறினார்.
நான் மறுத்து அவரை திட்டினேன். இதை யாரிடமாவது கூறினால் நடப்பதே வேறு என்று மிரட்டினார். நானும் தந்தையும் வெளியே வந்து விட்டோம். இது தொடர்பாக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை எஸ்பி (பொறுப்பு) துரைக்கு டிஐஜி உத்தரவிட்டார்.தென்காசி ஏஎஸ்பி அரவிந்த், குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் விசாரணை நடத்தி, கருப்பசாமிபாண்டியன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், 294பி (ஆபாசமாக பேசுவது), 354 (பெண்ணை இழிவுபடுத்தி பேசுவது) 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
0 comments