31 August 2013

தங்கமீன்கள் - திரை விமர்சனம்

தங்கமீன்கள் - திரை விமர்சனம் 





நடிகர் : ராம்
நடிகை : பத்மபிரியா
இயக்குனர் : ராம்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு : அர்பிந்துசாரா


அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள அன்பை எதார்த்தமாகவும் அதே நேரத்தில் கவித்துவமாகவும் சொன்ன முதல் தமிழ் சினிமா. வழக்கமான சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியே வந்திருக்கிறது.

ராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏத்த அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை. மனிதர்கள் இறந்த பின்பு தங்க மீன்கள் ஆகிவிடுவார்கள் என்ற கதையைக்கூட அப்படியே நம்புபவள்.

செல்லம்மாவோடு எந்நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த ஊரில் வருமானமே வராத பாத்திரம் செய்யும் பட்டறையில் வேலை செய்கிறார் ராம். சம்பாதிக்காமல் தனக்கு பாரமாக இருக்கும் ராமை அவமானபடுத்தி உதாசினப்படுத்தி கொண்டே இருக்கிறார் நல்லாசிரியர் விருது பெற்ற ராமின் தந்தை ‘பூ’ராம்.


 
ஆஸ்திரேலியாவில் இருக்கும் ராமின் சகோதரியின் சிபாரிசால் அந்த ஊரின் மிகப்பெரிய தனியார் பள்ளியில் செல்லம்மாவை படிக்க வைக்கிறார். அவளின் மந்தமான படிப்பாலும், பீஸ் கட்ட முடியாமல் போனதாலும் செல்லம்மாள் ஆசிரியையால் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.

இதனால் ஆசிரியைக்கும் ராமிற்கும் வாக்குவாதம் வர, பள்ளி நிர்வாகத்தால் கடுமையாக அவமானபடுத்தபடுகிறார் ராம். பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக ராமின் தந்தை ராமை அடித்து விடுகிறார். (இதனால் தனிக்குடித்தனம் போக மனைவியை அழைக்க அவர் தயங்க) கோபத்தில் யாரிடமும் சொல்லாமல் கேரளா போய் விடுகிறார்.

மகளுக்கு இருக்கும் ஒரே ஆசையான ஹட்ச் விளம்பரத்தில் வரும் நாய் குட்டியை வாங்கி பிறந்த நாள் பரிசாக கொண்டு போக நினைக்கிறார். ஆனால் தகுதிக்கு மீறி அவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாததால் கஷ்டப்படுகிறார்.

கேரளாவின் ஒரு பழமையான பாரம்பரிய இசை கருவியை வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கு கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.25,000 பணம் கிடைக்கும் என்று தெரியவர அதை தேட தொடங்குகிறார்.

இன்னொரு பக்கம் பிறந்த நாளில் நாய் குட்டி அப்பா வாங்கி வரவில்லை என்றால் தங்கமீன்கள் ஆகிவிடவேண்டும் என்று செல்லம்மா முடிவெடுக்கிறாள். கேரளாவின் மலையுச்சியில் பழங்குடி மனிதரிடம் இருக்கும் இசை கருவியை வாங்க போகும் ராமின் பயணமும் தங்க மீன்களாக மாற தற்கொலையின் விளிம்பில் நிற்கும் செல்லம்மாவின் பயணமும் ஓரிடத்தில் இணைகிறது. அதன் பின்பான முடிவை அழகான ரொம்ப எளிமையான கவிதையாக சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஒவ்வொரு இடத்திலும் ‘ராம் ராம்’ என்று சொல்லி கொண்டே போகலாம். அவருடைய உழைப்பு அபாரம். முதலில் குழந்தையின் காலில் பட்ட தீ காயத்தைக்கூட காட்சியாக காட்டாத அளவுக்கு மென்மையாக படம் எடுத்ததற்காகவே இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். ராம், ஒரு இயக்குனராக நிறைய இடங்களில் அடையாளமாகிறார்.

ராமிற்கும் அவர் முதலாளிக்கும் உரையாடல், பின்பு பள்ளியில் வாக்குவாதம், செடி இலைகள், கதவு பூட்டு அதன் அதிர்வுகள், கூண்டுக்குள் கிடக்கும் நாயின் பரிதாப முகங்கள், ரயில் சத்தங்கள் வைத்தே நிறைய இடங்களில் கதை சொல்லிருக்கிறார். முக்கியமாக பத்ம பிரியாவை அவருடைய வீட்டில் இரவு சந்திக்கிற காட்சி எழுத்தாளர் வண்ணதாசன் சிறுகதையை திரையில் பார்ப்பதுபோல் அத்தனை ரசனை.

இறுதியாக செல்லம்மா பள்ளியில் வாசிக்கும் கட்டுரையின் வழியாக இயக்குனர் ராம் தங்க மீன்களுக்கு தரும் விளக்கம் அதற்கு அவர் வைத்திருக்கும் காட்சி சமுக அக்கறையை பிரசாரம் இல்லாமல் பதிவு செய்ய உதாரணம்.

            செல்லம்மாவாக சாதனா. சாதனாவின் நடிப்பு, படம் முடிந்த பின்னும் செல்லம்மா நினைவு கூடவே வரும். இப்படி ஒரு மகள் இல்லையே என்று நினைக்க வைத்து விடுவாள்.

அப்பாவுக்கு பாரமாக தெரியும் மகனின் தந்தை இப்படித்தான் இருப்பார் என்று நாம் நம்பும் அளவுக்கு இருக்கிறது பூ ராமின் நடிப்பு. மனதில் மகன் மேல் அன்பு இருந்தாலும் ஒரு காட்சியில்கூட வெளிப்படுத்தாமல் இறுக்கமான முகத்தையும் மகனிடம் வார்த்தையை விடும் நேரங்களிலும் இயல்பாக நடித்திருக்கிறார். அவன் கொஞ்சம் கெட்டவனா திரும்பி வரட்டும் என்று சொல்லி கலங்கும்போது நம்மையும் கலங்க வைத்து விடும் அவருடைய குரல்.

ஓரிரு காட்சிகள் வந்தாலும் பத்மபிரியா ஒரு நல்ல டீச்சருக்கான நடிப்பை எளிதாக செய்திருக்கிறார். ராமின் மனைவியாக வரும் பெண் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் நிறைய காட்சிகளை நடிப்பாலே சமாளித்திருக்கிறார். ராமின் அம்மாவாக வரும் நடிகை ரோகினி கிடைத்த இடத்தில் அவர் இருப்பதை உணர்த்தியிருக்கிறார்.

ராமின் சகோதிரியாக வரும் பெண், ராமின் பட்டறை முதலாளி, மலையாள முஸ்லிம் பெரியவர், ராமோடு வேலை செய்யும் நண்பர், இன்னும் நிறைய பாத்திரங்கள் இருக்கிறது. அதில் செல்லம்மா அளவுக்கு நினைவு வருவது செல்லம்மாவின் கொடுமைக்கார டீச்சர். நாம் ஒரு மாணவராய் இருந்தால் நமக்கே பயம் வந்து விடும். அப்படி ஒரு வில்லத்தனம். கொஞ்ச நேரமே வந்தாலும் செல்லம்மாவின் தோழியாக வரும் பூரி நித்யா கலகலப்பை உண்டு பண்ணுகிறார்.

இசை யுவன் சங்கர் ராஜா, பெரிய இடைவெளிக்கு அப்புறம் அவருடைய பாடல் கேட்க பிடிக்கிறது. பின்னணி இசையில் நிறைய இடங்களில் அப்பாவின் ஞானம். சில இசை கண்ணில் பொங்கி நிற்கும் கண்ணீரை கிழே விழ வைத்து விடுகிறது. அதே நேரத்தில் மௌனமும் ஒரு இசைதான் என்பதை அப்பாவிடம் இருந்து ஏற்றுக்கொண்டால் நலம்.

ராம் தன் பட்டறை முதலாளியிடம் ஆதங்கத்தை கொட்டும் வேளையில், கொச்சி கடற்கரையில் போனில் ராமிற்கும் அவர் மனைவிக்கும் நிகழும் மௌனம், இசை கருவியை வாங்க பழங்குடி ஆளின் காலில் விழுந்த பிறகு நிகழும் அமைதி இதை எல்லாம் இசை வைத்து நிரப்பி அதன் தாக்கத்தை குறைத்து விடுகிறார்.

நாம் கவனம் பெற இவ்வளவு விஷயங்கள் இருக்கும் போது படத்தின் ஒளிப்பதிவு நம் கவனம் பெறுவது பெரிய சவால். அர்பிந்துசாரா தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் திறமையான ஒளிபதிவாளர். சில காட்சிகள் உலக சினிமா அளவிற்கு இருக்கிறது.

குறிப்பாக மனைவியோடு இரவில் சைக்கிளில் பயணம் செய்து ரயில்வே பாலத்தில் இருந்து பேசும் காட்சி. செல்லம்மா இரவில் ஊஞ்சல் ஆடும் காட்சி கேரளாவின் பசுமை மலை. இரவில் தெரியும் கொச்சி ஹார்பர், ராம் தங்கியிருக்கும் அறையை படம் பிடித்த விதம் கதையோடு சேர்ந்து பயணப்பட்டிருக்கிறார்.

செல்லம்மா தன் அனுபவத்தை ஒரு கதையாக தன் தோழி பூரி நித்யாவிடம் சொல்லும் காட்சியில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் கலக்கல். படத்திற்கு இன்னொரு பலம் ராமின் வசனம். ராமின் அதீத பலமே அதுதான் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் கவிதையும் தத்துவமும் நிறைந்தாலும் எளிதாக முணுமுணுக்கவும் முடியும். அதுதான் இந்த படத்திலும்.

என்னதான் மென்மையான படமாக இருந்தாலும் கத்தி அழவேண்டிய காட்சிகள் இந்த அளவுக்கு தேவையா? குறிப்பாக பெண் குழந்தைகள் சிறு வயதிலே சடங்கு ஆவதை பற்றி அச்சம் ஏற்படும்போது அதில் என்னதான் ராமின் சமூக அக்கறை தெரிந்தாலும், ஒரு பெண் குழந்தையின் அம்மா, மகளின் கேள்விகளை எளிதாக கடந்து விடும் பக்குவம் பெற்றிருப்பாள். ஆனால் அதற்கு இந்த அளவுக்கு அழுகை தேவையா?

அந்த சின்ன கிராமத்தில் தந்தை காரிலும் மகன் சைக்கிளிலும் ஒரே வீட்டிலும் இருந்து வருவது அந்நியமாகவே இருக்கிறது. பசுமையான இடம் மட்டுமே நாகர்கோவில் என்று சொல்லுகிறது. வேறு எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது அன்னியமாக இருக்கிறது.


ராம், தனிக்குடித்தனம் வா என்று அழும்போதுகூட அவர் மனைவி அவருக்கு பதில் அளிக்காமல் கதவை பூட்டி கொண்டு திறக்காமல் இருப்பது நாடகத்தனமாகவே இருக்கிறது. ரோகினியின் கதாபாத்திரத்தில் ஒரு முழுமை இல்லை. ஆனாலும் படம் முடிக்கிற பொழுது மனதில் ஒரு நிறைவு.

உங்களை புதுப்பிக்கும் தருணம் இந்த ‘தங்க மீன்கள்’ ஏற்படுத்தி தருவதாலே திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top