22 August 2013

காதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் சேரனுடன் செல்ல மகள் தாமினி சம்மதம்

காதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் சேரனுடன் செல்ல மகள் தாமினி சம்மதம்


சென்னை : 
              நடிகர் சேரன் மகள் தாமினி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடந்த முறை காதலனுடன் செல்வேன் என்று கூறிய தாமினி, பெற்றோருடன் செல்வதாக கூறினார். நடிகர் சேரன் மகள் தாமினிக்கும் சந்துரு என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.  

ஆரம்பத்தில் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவித்த சேரன் பின்னர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் சந்துருவிடமிருந்து தன்னை பிரிக்க சேரன் முயற்சி செய்கிறார் என்று அவரது மகள் தாமினி, மாநகர போலீசில் புகார் தெரிவித்தார். 

இதுகுறித்து பதிலளித்த சேரன், சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு உண்டு. காதலுக்கு நான் எதிரியல்ல. ஆனால் சந்துரு நல்லவன் இல்லை என்பதால் எதிர்க்கிறேன் என்றார்.

இந்நிலையில் சேரன் புகாரை தொடர்ந்து சில நாட்கள் வரை காப்பகத்தில் தாமினி தங்க வைக்கப்பட்டார். இதனிடையே தாமினியை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரி காதலன் சந்துருவின் தாய் ஈஸ்வரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் விசாரித்து தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். 

அதன்படி தாமினி கடந்த 5 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் ரகசியமாக விசாரித்தனர். அப்போது அவர், Ôகாதலனுடன் செல்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன். நான் மேஜர். எனக்கு 20 வயதாகிவிட்டதுÕ என்றார்.

இதைதொடர்ந்து சேரன், அவரது மனைவி, நீதிபதிகள் முன்பு ஆஜராகி “ மகளுக்கு எதுவும் தெரியாது. காதலன் நல்லவன் இல்லை. எனவே மகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்“ என்று கூறி கதறி அழுதனர். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். அதுவரை மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வீட்டில் தாமினி தங்கியிருக்க உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கு

6 ம் தேதி அதே நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அறையில் 3 மணி நேரம் ரகசிய விசாரணை நடந்தது. முதலில் நீதிபதிகள் தாமினியை அழைத்து ஒரு மணி நேரம் விசாரித்தனர். பின்னர் சேரன், அவரது மனைவியை அழைத்து ஒரு மணி நேரம் விசாரித்தனர். இரு தரப்பு வக்கீல்களிடமும் விசாரணை நடத்தினர். 

இறுதியில் வழக்கை 2 வாரம் தள்ளிவைப்பது என்றும், அதுவரை  தாமினி அவர் படித்த வேளாங்கண்ணி பள்ளி தாளாளர் கே.கே.பி.பிள்ளை வீட்டில் தங்கியிருக்க வேண்டும். வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றைக்கு தாமினியை நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி அதே நீதிபதிகள் முன் இந்த வழக்கு நேற்று  விசாரணை க்கு வந்தது. நடிகர் சேரன், அவரது மனைவி, பள்ளி தாளாளர் கே.கே. பி.பிள்ளை, தாமினி ஆஜராகினர். தாமினியிடம் நீதிபதிகள் தனபாலன், சி.டி.செல்வம் விசாரித் தனர்.  அப்போது அவர் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார்.

 நீதிபதிகள் : (சந்துரு வக்கீல் சங்கரசுப்புவை பார்த்து) தாமினிக்கு வயது 20. அவர் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி பெற்றோருடன் அனுப்புகிறோம்.

சங்கரசுப்பு:  காதலனுடன் செல்ல விரும்புவதாக முதலில் போலீசில் தாமினி தெரிவித்தார். நீதிமன்றத்தில் முதல் முறை ஆஜராகும்போதும், 2வது முறை ஆஜராகும் போதும் தாமினி காதலனுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். தற்போது பல்டி அடித்து கூறுகிறார். இதை ஏற்க கூடாது. பள்ளி தாளாளர் வீட்டில் இருக்கும்போது தாமினியை பெற்றோர் சந்தித்து காதலனை பற்றி தவறாக கூறி அவரது மனதை மாற்றியுள்ளனர். தாமினி மனநிலையை மனநல டாக்டர்கள் மூலம் சோதனை நடத்தி நீதிமன்றம் அறிக்கை பெற வேண்டும். இந்த வழக்கில் தனியாக மனு தாக்கல் செய்ய உள்ளேன். அதற்கு அனுமதிக்க வேண்டும்.

நீதிபதிகள்: பள்ளி தாளாளர் வீட்டில் தாமினி 2 வாரம் தங்கியிருந்தார். அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள். சேரன் தாமினியை தொல்லை செய்திருந்தால் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கலாமே. அப்போது எல்லாம் அமைதியாக இருந்து விட்டு தற்போது எதிர்ப்பது ஏன்? தாமினிக்கும் காதலனுக்கும் இடையே திருமணம் நடக்கவில்லை. அப்படி இருக்கும்போது தாமினி விருப்பத்துக்கு எதிராக நீதிமன்றம் செயல்பட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். சந்துரு வக்கீல், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

சங்கரசுப்பு:  மாற்றி மாற்றி பேசுவதால் தாமினியை மனநல மருத்துவரிடம் சோதிக்க வேண்டும். கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்போகிறேன். எனவே இதில் இறுதி உத்தரவு பிறப்பிக்க கூடாது.  சேரன் வக்கீல் என்.ஆர்.இளங்கோ: சந்துருவுக்கும் தாமினிக்கும் திருமணமே நடக்கவில்லை. எனவே இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது இல்லை. காதலனின் தாய் தனது மனுவில் தாமினியின் மாமியார் என்று கூறியுள்ளார். இது தவறானது. இந்த காரணத்திற்காக இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சங்கரசுப்பு: புதிய மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.

நீதிபதிகள் : மதியம் வழக்கை தள்ளிவைக்கிறோம். புதிய மனுவை சந்துரு தாய் தரப்பில் தாக்கல் செய்யலாம்.

இதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு 
வழக்கு விசாரணைக்கு வந்தது.


சங்கரசுப்பு: தாமினிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரி புதிய மனுவை தாக்கல் செய்துள்ளேன். இதை ஏற்று உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

நீதிபதிகள்: சேரன் மகள் கூறியதை ஏற்கிறோம். பெற்றோருடன் செல்ல தாமினியை அனுமதிக்கிறோம். சங்கரசுப்பு தாக்கல் செய்த புதிய மனுவை தள்ளுபடி செய்கிறோம். தாமினி மேஜர் எனவே அவர் விருப்பப்படி செல்ல அனுமதி வழங்கி உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.

 நீதிமன்றத்தில் தரையில் விழுந்து சேரன் நன்றி


உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது. சேரன் அவரது மனைவி, மகள் மற்றும் சினிமா துறையினருடன் நீதிமன்றத்திற்கு நேற்று காலை வந்தார். நீதிமன்றத்திற்கு வந்ததில் இருந்து தாமினி சிரித்த முகத்துடன் காணப்பட்டார். இயக்குனர் அமீர் உள்பட பல்வேறு இயக்குனர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் நீதிமன்றத்தில் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கில் தீர்ப்பு கூறிய பிறகு சேரன், மகளுடன் நீதிமன்றத்துக்கு வெளியே வந்தார்.  

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சேரன் கூறியதாவது:

பெற்றோர் என்ற முறையில் எனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. எனது மகள் தனது நிலையை தற்போது தான் புரிந்து கொண்டார். காதலன் பற்றிய தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டார். காதலனுடன் செல்ல மாட்டேன் என்று மகள்  கூறியது என்னை போன்ற பெற்றோருக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஒரு மாதமாக மகளை இழந்து தவித்தேன். இதற்கு ஏராளமான பெற்றோர் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.

இதனால் அவர்களுக்கு தற்போது நன்றி கூறி கொள்கிறேன். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு பேட்டி அளித்தார். பின்னர் அவர் நீதிமன்றத்திற்கு எதிராக கீழே தரையில் விழுந்து நீதிமன்றத்துக்கு நன்றி என்று தெரிவித்தார். பின்னர் டி.வி. கேமரா முன்பு விழுந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கும்பிட்டார்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top