14 August 2013

ஐந்து ஐந்து ஐந்து - திரை விமர்சனம்

ஐந்து ஐந்து ஐந்து - திரை விமர்சனம்               ஒரு விபத்தில் சிக்கும் பரத்துக்கு தலையில் பலத்த காயம். மூளை பாதிப்பால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வார். அப்படித்தான், லியானா என்ற பெண்ணை தான் காதலித்ததாகவும் தன்னுடன் விபத்தில் அவள் இறந்து விட்டதாகவும் நினைக்கிறார்.

                நிஜமாகவே உனக்கு காதலி  இல்லை. அது உன் கற்பனை என்று டாக்டரும் அண்ணனும் சொல்கிறார்கள். அதை நம்பி தன் கற்பனை காதலியை மறக்க நினைக்கும்போதுதான், அவர் நினைத்தது நிஜம் என்று தெரியவருகிறது. அப்படியானால் காதலி எங்கே? சொந்த அண்ணனே எதற்கு பொய் சொன்னான்? என்கிற கேள்விக்கு விடை தேடி புறப்படும்போது, அதிரவைக்கும் உண்மைகளைச் சந்திக்கிறார் பரத். அது என்ன என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சிறிய இடைவெளிக்கு பிறகு பரத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். சிக்ஸ்பேக் உடம்பு, மொட்டைத் தலை, பரட்டைத் தலை, ஐ.டி இளைஞன் தோற்றம் என கடுமையாகத் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடித்திருக்கிறார். 

மூளை பாதிக்கப்பட்டு தனக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் தவிக்கிற தவிப்பு, தன்னைச் சுற்றி நடக்கும் புதிர்களுக்கு விடை தேடும் துடிப்பு, அத்தனைக்கும் காரணமானவன் கண்முன் நிற்கும்போது வரும் வெறி என பரத் பெரும் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார். 


தன் காதலியை கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் தான் அடித்த அடியாளை கட்டிப்பிடித்து கொஞ்சும் அந்த காட்சி நெகிழ்ச்சி.

அழகாக இருக்கிறார் மிருத்திகா. குழந்தை போல் சிரிப்பதும், பளிச்சென எதையும் நம்புவதும் அப்படியொரு யதார்த்தம் நடிப்பில். ‘அவன் சொல்லிட்டான். நான் சொல்ல முடியாம உங்க முன்னாடி பர்மிஷன் கேட்டு நிக்குறேன்’ என்று வளர்ப்பு தாயிடம் சொல்லும்போதும், ‘அவனை என்னை மறக்க வை. நான் உனக்கு மனைவியாகுறேன்’ என்று தன் நம்பிக்கையை வில்லன் முன் கொட்டும்போதும் வேறுபட்ட உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சந்தானம் காமெடியனாக இல்லாமல் பரத்தின் பொறுப்பான அண்ணனாக, நடித்திருக்கவும் செய்திருக்கிறார். பரத்தின் இன்னொரு காதலியாக வரும் எரிக்காவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. வில்லன் சுரேஷ் பெர்ரி, கடைசி 15 நிமிடம் வந்தாலும் மிரட்டி விடுகிறார். மிருத்திகாவின் ஆன்டி, லட்சுமியும் சரியான தேர்வு. 

சைமனின் இசை பின்னணியில் பிரமாதப்படுத்தியிருக்கிறது. பாடல்களில் மெலடி. அதை படமாக்கி இருக்கும் விதத்திலும் தனித்தனி கலர் கொடுத்து கதை சொல்ல உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரவணன்.

ஒரே மாதிரியான செல்போன் காதல் காட்சிகளை பார்த்து சலித்திருக்கும் வேளையில், அதே செல்போனை வைத்து காதலை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பரத் தன்னிடம் பெரிய சக்தி இருப்பதாகச் சொல்ல, அதை நிரூபிக்க வேண்டிய தருணங்களில் எல்லாம் அது யதேச்சையாக நடப்பதும், மிருத்திகாவின் ஆன்ட்டி பரத்தின் பவரை சோதிக்க நடத்தும் சோதனையில் பரத் ஜெயிக்கும் பரபரப்பான நிமிடங்களும் ஆரவார அழகு. வில்லனைத் தேடும் பரத்தின் வேட்டை வழக்கமானதுதான் என்றாலும் படமாக்கி இருக்கும் விதத்தில் பரபர வேகம்.

பாடல்கள் காட்சிகள் அழகாக இருந்தாலும் அது திடீர் திடீரென வந்து கதையின் வேகத்தை குறைக்கிறது. அதுவும் அந்த இழவு பாடல் எதற்கு? உண்மையில் மனநலம் பாதிக்கப்படாத பரத்,  இல்லாத சிகரெட்டை தான் குடித்ததாகச் சொல்வது எப்படி? குஜராத் மாநில குக்கிராமத்து இளைஞன் மல்டிமில்லினராவது லாஜிக் இல்லாத மேஜிக் என்றாலும் சுவாரஸ்யம் தருகிறது படம்.


Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top