6 July 2013

சிங்கம் 2 - திரை விமர்சனம்

சிங்கம் 2 -  திரை விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம், அஞ்சலி, நாசர், விஜயகுமார், ரகுமான், டேனி  
ஒளிப்பதிவு : ப்ரியன்  
இசை: தேவி ஸ்ரீபிரசாத்  
தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ் 
இயக்கம்: ஹரி 
எப்போதுமே பெரிய வெற்றியைப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது பெரிய சவாலான விஷயம். சிங்கம் படத்தை எடுத்த ஹரி - சூர்யா கூட்டணிக்கு சிங்கம் 2 அப்படி ஒரு சவால்தான்.

முதல் பகுதியில் போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல நாடகமாடிவிட்டு, என்சிசி மாஸ்டர் வேடத்தில் தூத்துக்குடியில் தங்கி சமூக விரோதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணித்து வருகிறார் சூர்யா. அப்போதுதான் தெரிகிறது கடத்தப்படுவது ஆயுதங்கள் அல்ல, பெருமளவு போதைப் பொருள்கள் என்ற உண்மையும், அதில் உள்ளூர் தாதாக்கள் இருவருடன் வெளிநாட்டு கடத்தல்காரன் டேனியின் பங்கும் இருப்பது. ஆனால் உள்ளூர் போலீசில் ஏகப்பட்ட கருப்பாடுகள். அதைச் சமாளிக்க யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ பலமிக்க போலீசாக தன்னை மாற்றிக் கொண்டு களமிறங்கும் சூர்யா, அந்த கடத்தல் கும்பலை தென்னாப்பிரிக்கா வரை விரட்டிச் சென்று எப்படிப் பிடிக்கிறார் என்பதுதான் சிங்கம் 2.

இடையில் அவருக்காக காத்திருக்கும் காதலி அனுஷ்கா, அவரை விழுந்து விழுந்து காதலிக்கும் பள்ளி மாணவி ஹன்சிகா... படத்தின் கதை என்னமோ சாதாரண ஆக்ஷன் மசாலாதான். ஆனால் சூர்யாவின் அசாதாரண நடிப்புதான் இந்தப் படசத்தின் ப்ளஸ். அதே நேரம் எதற்கெடுத்தாலும் அவரை சிங்கம் மாதிரி உறும வைத்திருப்பதும், ஒரு மாநில போலீசே துரைசிங்கம் என்ற ஒற்றை அதிகாரிதான் என்பது போல சித்தரித்திருப்பதும் கொஞ்சமல்ல... ரொம்ப ரொம்ப ஓவர். 
அதுவும் தென்னாப்பிரிக்காவுக்குள் போன பிறகு, அந்த நாட்டுப் போலீசுக்கே தெரியாத ரூட்டிலெல்லாம் சர்சர்ரென்று பாய்ந்து வில்லனை வீழ்த்துவது சிரிப்பு போலீசாக்கிவிட்டது ('இதான் இந்தியன் போலீஸ் மாஜிக்' என்று தென்னாப்பிரிக்க போலீஸ் வியப்பது போல வசனம் வேறு !). படத்துக்கு தலைப்பு சிங்கம் என்று வைத்துவிட்டதாலோ என்னமோ, சண்டைக் காட்சிகளிலெல்லாம் சூர்யா பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார். சிங்கம் நகங்களால் கிழிப்பது போல கிராபிக்ஸ் வைத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு சதவீதம் ஓவராகிப் போயிருந்தால் கூட, ரசிகர்கள் சீரியஸ் காட்சிகளிலெல்லாம் சிரித்து வைத்திருப்பார்கள்.

ஹீரோ சூர்யாவின் உழைப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. மனிதர் இதுவரை இல்லாத அளவு அழகு - கம்பீரமாகக் காட்சி தருகிறார். சில காட்சிகள் மிகை என்றாலும் கூட அவரது நடிப்பால் அதை நம்ப வைத்திருக்கிறார். ஊரையே கலாய்க்கும் சந்தானத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் பக்கி பக்கி என வறுத்தெடுக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் சூர்யா. அவரது உடல் மொழி, அபார முயற்சி காரணமாக, நீள நீளமான சண்டைக் காட்சிகளைக் கூட ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் பார்த்து கைத்தட்டுகிறார்கள். என்சிசி உடையிலிருந்து போலீஸ் யூனிபார்முக்கு அவர் மாறும் காட்சியும், டேனியைப் புரட்டி எடுக்கும் காட்சிகளிலும் முறுக்கேற்றுகிறார், பார்ப்பவர்களையும். இதற்கு முன் இல்லாத அளவு நடனக் காட்சிகள்... டபுள் உற்சாகத்துடன் கலக்கலாக ஆடியிருக்கிறார் சூர்யா.

இரண்டு ஹீரோயின்களில் அனுஷ்காதான் சூர்யாவுக்கு ஜோடி. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாகத்துக்கு அடிபோட்டிருக்கிறார்கள் போல. சிங்கம் டான்ஸ் பாட்டுக்கு அனுஷ்கா ஆட, பார்ப்பவரின் மனசும் கூடவே அல்லாடுகிறது.

ஹன்சிகாவை ப்ளஸ்டூ மாணவியாகக் காட்டுவதெல்லாம் டூ டூ மச். அவர் சூர்யா மீது வைக்கும் காதலில் அழுத்தமில்லாவிட்டாலும், அந்தப் பாத்திரத்தின் முடிவு ரசிகர்களிடம் அனுதாபத்தை தேடிக் கொள்கிறது. இன்ஸ்பெக்டர் எரிமலையாக வரும் விவேக்கும், சூசையாக வரும் சந்தானமும் சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சிக்கிறார்கள். இருவரில் சந்தானத்துக்கு வாய்ப்பு அதிகமும் கூட. விவேக்கும் குறை வைக்கவில்லை. 



சர்வதேச போதை மருந்து கடத்தல்காரன் டேனியாக வரும் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி மிரட்டலாக அறிமுகமாகிறார். ஆனால் ரொம்ப சவசவவென முடிகிறது அவரது க்ளைமாக்ஸ்.

மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி, ரகுமான், வசீம் கான், விஜயகுமார்... எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வசனங்களை ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ப்ரியன் ஒளிப்பதிவில் உப்பளங்களும், கப்பல் சண்டைக் காட்சிகளும், அந்த ஏரியல் ஷாட்களும் படத்துக்கு புதிய நிறத்தைத் தருகின்றன. 
 
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உன் கண்ணுக்குள்ள.. பாட்டு மட்டும் ஆட வைக்கிறது. அதுவும் சிங்கம் படத்தில் இடம்பெற்ற காதல் வந்தாலே சாயல்தான். மற்றவை சொல்லும்படி இல்லை. 
படம் 2.46 நிமிடம் ஓடுகிறது. இடைவேளையே இவ்வளவு நீளமா என்ற ஆயாசம் வருவது உண்மைதான். எடுத்த காட்சிகள் எதையுமே வெட்ட ஹரிக்கு மனசில்லை போலும். ஆனாலும் ஆக்ஷன், ரொமான்ஸ், சிரிப்பு, நல்ல லொகேஷன்கள் என பொழுதுபோக்குக்கு குறை வைக்கவில்லை ஹரி என்பதால், படத்தை ரசிக்க நீளம் ஒரு தடையாக இருக்காது! 
சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் சூர்யாவுக்காக இந்தப் படத்தை பார்க்கலாம்!




Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top