தற்கொலை செய்வதற்கு முன்பு
இளவரசன் அளித்த உருக்கமான பேட்டி
திவ்யா கதறல்
சென்னை, ஜூலை. 5:
காதல் திருமணம் செய்து பரபரப்பு ஏற்படுத்திய தர்மபுரி இளவரசன், நேற்று தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா மீது ஆழ்ந்த பிரியம் வைத்திருந்த இளவரசன் என்றாவது ஒரு நாள் திவ்யா திரும்பி வந்து விடுவார் என்றே எல்லோரிடமும் கூறியபடி இருந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கான எந்த ஒரு சலனமும் நேற்று முன்தினம் வரை அவரிடம் காணப்படவில்லை.
இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று திவ்யா கோர்ட்டில் திட்டவட்டமாக கூறிய தினத்தன்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இளவரசன் பேட்டியளித்தார். அதுதான் இளவரசன் அளித்த கடைசி பேட்டியாகும். அந்த பேட்டியில் இளவரசன் கூறி இருந்ததாவது:-
நான் திவ்யாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டபோது நான் தர்மபுரி கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தேன். எங்களது காதல் திருமணத்தை தொடர்ந்து சாதி கலவரமும், அரசியல் ரீதியிலான பிரச்சினைகளும் ஏற்பட்டன. என்றாலும் நானும் திவ்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தோம். ஆனால் பிரச்சினை மிகப்பெரிதாக வெடித்து விட்டதால் என்னால் கல்லூரிக்கு செல்ல முடிய வில்லை. இடையில் விடுபட்ட எனது பட்டப்படிப்பை தொடர நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன். எனது பட்டப்படிப்பை நான் நிறைவு செய்து விட்டால், திவ்யா மிகவும் மகிழ்ச்சி அடைவாள்.
திவ்யாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் அவள் சொந்தமாக முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறாள். அவளது குடும்பத்தினர், அவளது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வக்கீல்கள் அவள் தானாக முடிவு எடுப்பதை தடுத்து வருகிறார்கள். என்றாலும் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். திவ்யா இப்போது என்னுடன் வராமல் இருக்கலாம். விரைவில் அவள் என்னிடம் திரும்பி வருவாள். ஓராண்டுக்குள் அவள் என்னிடம் திரும்பி வந்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படிக்கும் போதே நான் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். எல்லா தேர்வுகளிலும் நான் பாசாகி விட்டேன்.
அப்பாயிண்மெண்ட் லெட்டருக்காக காத்திருக்கிறேன். வழக்கு காரணமாக வேலை கிடைப்பதில் தாமதமாகி விட்டது. இந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுவதற்குள் என் பட்டப்படிப்பை முடித்து விடுவேன். எனது வேலைக்கு பட்டப்படிப்பு மேலும் உதவியாக இருக்கும். அதன் பிறகு நானும் திவ்யாவும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம்.
இவ்வாறு இளவரசன் கூறி இருந்தார்.
புதன்கிழமையன்று இப்படி தெளிவாகவும், நம்பிக்கையுடனும் மனம் திறந்து பேட்டியளித்திருந்த இளவரசன் மறுநாளே ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது பரிதாபமாக உள்ளது.
இளவரசன் மரணம்: திவ்யா கதறல்
இளவரசனுடன் செல்ல மாட்டேன் என்று நேற்று முன்தினம் கூறிய திவ்யா நேற்று இளவரசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் துடி துடித்து போனார். அவர் கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகள் உருக, உருக காதலித்து, பிறகு திருமணம் செய்து கொண்டு 8 மாதங்கள் குடும்பமும் நடத்தியவர் இனி இல்லை என்பதை நினைத்து திவ்யா குமுறி, குமுறி அழுதார்.
அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் அவர் தவிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரிகிறது. இளவரசன் தற்கொலை செய்த தகவல் பரவியதும் திவ்யாவிடம் கருத்து கேட்க எல்லா பத்திரிகை நிருபர்களும் முயற்சி செய்தனர். ஆனால் திவ்யா மிகவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதால், அவரால் பேச இயலாது என்று கூறி அவரது உறவினர்கள் அனுமதிக்கவில்லை.
இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று திவ்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதனால் இளவரசன் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.














0 comments