முத்தரப்பு கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா
டிரினிடாட், ஜூலை, 6:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகார் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஜோடியில் இந்திய அணி 123 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் 69 ரன்களிலும், சர்மா 46 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
அடுத்து வந்த ரெய்னா (10), கார்த்திக் (6), விஜய் (27), சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். மறுமுனையில், அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி 102 ரன்கள் எடுத்து, கடைசி ஓவரில் அவுட் ஆனார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்தது.
இதை அடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பின்னர் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை நின்ற பிறகு ஆட்டம் 39 ஓவராக குறைக்கப்பட்டது. அதே போல் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய நடுவரிசை வீரர்கள், நிதானமாக விளையாடத் தவறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே இந்தியா 102 ரன்களில் வெற்றி பெற்றது.













0 comments