குற்றால அருவியில்
தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டு வருவதால்
குளிக்க தடை
குற்றாலம்:
குற்றால அருவிகளில் கொட்டி தீர்க்கும் தண்ணீரால் தொடர்ந்து குளிக்க தடை ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது. குற்றாலத்தில் சீசன் கடந்த 31ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து சாரல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒருவார காலமாக வெயிலை காண முடியாத நிலையே காணப்பட்டது.
மலைப்பகுதியில் கனத்த மழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த தென்றல் காற்று வீசி வரும் நிலையில் அருவிகளில் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டி வருவதால் குளிப்பதற்கான தடை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 21ந் தேதி இரவு முதல் வனப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மெயின் அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப் பட்டு வருகிறது.தண்ணீர் குறைந்த பின்பு குளிக்க சாரல்மழையில் நனைந்த வண்ணம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காத்திருந்தனர். குற்றால மெயின் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கேரளா மாநிலம் ஆரியன்காவு பாலருவி நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.குற்றால அருவியில் தொடர்ந்து 4 வது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.
0 comments