முத்தரப்பு  கிரிக்கெட்: கெய்ல் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
முதல் போட்டியிலேயே இலங்கை மண்ணை கவ்வியது
முதல் போட்டியிலேயே இலங்கை மண்ணை கவ்வியது
கிங்ஸ்டன், ஜுன் 29:-
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை தொடக்க வீரர்களாக தரங்காவும், ஜெயவர்த்தனேவும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (13.1 ஓவர்) சேர்த்தனர். தரங்கா 25 ரன்னில் அவுட் ஆனார். ஜெயவர்த்தனே 52 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு மேத்யூஸ் (55 ரன்) தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. சண்டிமால் 21 ரன், சங்ககரா 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
முடிவில் இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் சுனில் நரீன் 4 விக்கெட்டும், ரவி ராம்பால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
209 ரன் இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், சார்லஸ் களம் இறங்கினர். கெய்ல் அதிரடியாக ஆட அவருக்கு சார்லஸ் பக்கபலமாக இருந்தார். கெய்ல் பந்தை வீணாக்காமல் ரன்களை எடுத்ததால் வெஸ்ட்இண்டீஸ் ஸ்கோர் சீராக சென்றது. சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஸ்கோர் 115 ரன் இருந்தபோது சார்லஸ் அவுட் ஆனார். அவர் 58 பந்தில் 29 ரன் எடுத்தார்.
அதன்பிறகு டேரன் பிராவோ ஜோடி சேர்ந்தார். கெய்ல் தொடர்ந்து அதிரடி ஆடி 89 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 21-வது ஒருநாள் சதமாகும். அவர் 109 ரன் (100 பந்து) எடுத்திருந்தபோது அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அவரது அதிரடி சதத்தால் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.
டேரன் பிராவோ (21 ரன்), பொல்லார்ட் ( ரன் எதுவும் இல்லை) அவுட் ஆனாலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 37.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 
ஆட்டநாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.
நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.













0 comments