முத்தரப்பு கிரிக்கெட் : இந்தியாவுக்கு இன்று முதல் சவால்
கிங்ஸ்டன்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது. ஜமைக்கா, கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி உற்சாகமாக உள்ளது.
அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேச போட்டியில் சதம் விளாசி பார்முக்கு திரும்பியுள்ளார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும், ஆடுகளத்தின் தன்மை பற்றி நன்கு அறிந்திருப்பதும் வெஸ்ட் இண்டீசுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். ரோச், ராம்பால், வேய்ன் பிராவோ, சம்மி வேகமும், சுனில் நரைன் சுழலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
சாம்பியன்ஸ் டிராபி லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது. அதே சமயம், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள், முத்தரப்பு சவாலுக்கு தயாராக உள்ளனர்.
ரோகித் , தவான் தொடக்க ஜோடியின் அபார ஆட்டம், இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்து வருகிறது. அடுத்து கோஹ்லி, கார்த்திக், ரெய்னா, டோனி, ஜடேஜா என்று அதிரடி ஆட்டக்காரர்கள் அணிவகுப்பதால், இந்திய பேட்டிங் வரிசை எதிரணி பந்துவீச்சாளர்களை மிரட்டுவதாக அமைந்துள்ளது. புவனேஷ்வர், உமேஷ், இஷாந்த் வேகக் கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களிலும் அமர்க்களமாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கலாம்.
அஷ்வின், ஜடேஜா சுழலும் இந்தியாவுக்கு வெகுவாக கை கொடுக்கும். பேட்டிங், பந்துவீச்சுடன் துடிப்பான பீல்டிங் இந்திய அணியின் புதிய அஸ்திரமாக உருவெடுத்துள்ளது.
இரு அணியிலுமே பல வீரர்கள் ஐபிஎல் டி20 தொடரில் இணைந்து அல்லது எதிராக விளையாடியுள்ளதால், ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் பற்றி நன்கு அறிந்துள்ளனர். அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து, வெற்றியைப் பறிக்க இரு தரப்பினரும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.













0 comments