திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய குன்னூர் நீதிபதி கைது
பெண் எஸ்ஐ புகார்
பள்ளிபாளையம்:
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்டார். பல்லடம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணி புரிந்து வருபவர் உமாமகேஸ்வரி.
இவர் பல்லடம் டிஎஸ்பி சுரேஷ்குமாரிடம் கடந்த வாரம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். வழக்கறிஞரான இவர் நாகர்கோவிலில் பயிற்சி பெற்றார்.
நான் நாகர்கோவிலில் எஸ்ஐ ஆக பணியாற்றிய போது எனக்கும் தங்கராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் பல முறை உல்லாசமாக இருந்தார்.
இந்நிலையில் வக்கீலாக இருந்த தங்கராஜ், மாஜிஸ்திரேட்டாக தேர்வு பெற்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தார். நானும் அவருக்காக நாகர்கோவிலில் இருந்து பணியை மாற்றிக் கொண்டு வந்தேன். இங்கு வந்த பிறகுதான் தங்கராஜ் எனக்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி உத்தரவிட்டார். இதனையடுத்து குன்னூர் சென்ற போலீ சார், அங்கு தங்கராஜை தேடினர். அப்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தட்டாங்குட்டையில் உள்ள உறவினர் மாதேஸ்வரன் வீட்டில் மாஜிஸ்திரேட் தங்கராஜ் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து பல்லடம் போலீசார் குமாரபாளையம் வந்து தங்கராஜை நேற்று கைது செய்து அழைத்து சென்றனர்.
பின்னர் அவரை, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) நீதிபதி ராமச்சந்திரன் முன் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், தங்கராஜை ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
போலீசார் ஆள்மாறாட்ட நாடகம்:
கைது செய்யப்பட்டு, திருப்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட, நீதிபதி தங்கராஜை புகைப்படம் எடுப்பதற்காகவும், செய்தி சேகரிப்பதற்காகவும் ஏராளமான பத்திரிகையாளர்கள் கோர்ட் வளாகத்தில் குவிந்திருந்தனர். இதையடுத்து நீதிபதி தங்கராஜை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த வேறு ஒரு நபரை, முகத்தை மறைத்தபடி போலீசார் அழைத்து வந்தனர். இதை பார்த்த புகைப்பட கலைஞர்கள் ஓடி சென்று அந்த நபரை போட்டோ எடுத்தனர். அச்சமயத்தில் பின்வாசல் வழியாக தங்கராஜை மற்ற போலீசார் காரில் அழைத்துச் சென்றனர்.













0 comments