20 June 2013

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்

 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, இங்கிலாந்து 

தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது


லண்டன்:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



ஸ்டெயின் இல்லை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் தென்ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதின. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க வேகப்புயல் ஸ்டெயின் கடைசி நேரத்தில் உடல்தகுதி பெறவில்லை. அவருக்கு பதிலாக ரோரி கிளைன்வெல்த் இடம் பெற்றார்.

இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டிம் பிரிஸ்னனின் மனைவி ஹனாவுக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கும் சூழல் நிலவியதால், அவர் மனைவியை அருகில் இருந்து கவனிக்க சென்று விட்டார். அவருக்கு பதிலாக ஸ்டீவன் பின் இடம் பிடித்தார். இதே போல் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வானுக்கு பதிலாக டிரெட்வெல் சேர்க்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்கா திணறல்

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அந்த சமயத்தில் அங்கு காணப்பட்ட மேகமூட்டமான சீதோஷ்ண நிலை, வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று அவர் கருதினார். அவரது கணிப்பு, களத்தில் அப்படியே எதிரொலித்தது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து போனார்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் இங்ராமை (0) ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஆபத்தான வீரர் அம்லாவை (1 ரன்) ஸ்டீவன் பின்னும் காலி செய்தனர்.

இதன் பின்னர் ராபின் பீட்டர்சனும் (30 ரன், 41 பந்து, 4 பவுண்டரி), பாப் டு பிளிஸ்சிஸ்சும் (26 ரன், 39 பந்து) சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். என்றாலும் இந்த கூட்டணி உடைந்ததும், மறுபடியும் தென்ஆப்பிரிக்காவின் நிலைமை கந்தலானது. சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் டிரெட்வெல்லும், தனது பங்குக்கு தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்தார்.

80 ரன்களை தொடுவதற்குள் (22.3 ஓவர்) அந்த அணி 8 விக்கெட்டுகளை தாரை வார்த்து விழிபிதுங்கி நின்றது. இதில் கேப்டன் டிவில்லியர்ஸ் டக்–அவுட் ஆனதும் அடக்கம். ஒரு நாள் போட்டி வரலாற்றில் தென்ஆப்பிரிக்க அணி 3–வது முறையாக 100 ரன்னுக்குள் அடங்கி போய் விடுமோ? என்று தான் அனைவரும் நினைத்தனர்.

மானம் காத்த ஜோடி

ஆனால் அதிர்ஷ்டவசமாக 9–வது விக்கெட்டுக்கு இணைந்த டேவிட் மில்லரும், ரோரி கிளைன்வெல்த்தும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடினர். இந்த ஜோடி அணியை 100 ரன்களை கடக்க வைத்ததுடன், ஓரளவு கவுரவமான நிலையை எட்டவும் உதவினர்.

அணியின் ஸ்கோர் 175 ரன்களாக உயர்ந்த போது, கிளைன்வெல்த்  43 ரன்களில் (61 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மில்லர்–கிளைன்வெல்த் இணை 9–வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் திரட்டியது கவனிக்கத்தக்க அம்சமாகும். 9–வது விக்கெட்டுக்கு தென்ஆப்பிரிக்க ஜோடி ஒன்று எடுத்த அதிகபட்சம் இது தான். இதற்கு முன்பு பார்னல்–ஸ்டெயின் ஜோடி, 2010–ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக 65 ரன்கள் சேர்த்ததே, இந்த வகையில் தென்ஆப்பிரிக்காவின் அதிகபட்சமாக இருந்தது.

கிளைன்வெல்த் வெளியேறிய பிறகு வந்த சோட்சோப், ஷார்ட்பிட்ச்சாக வீசப்பட்ட முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம்  கேட்ச் ஆனார். முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 38.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. டேவிட் மில்லர் 56 ரன்களுடன் (51 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். சாம்பியன்ஸ் கோப்பையில் தென்ஆப்பிரிக்காவின் 2–வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், டிரெட்வெல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 6 பேரை  கேட்ச் செய்து ஆட்டம் இழக்க வைத்தார். அலெக் ஸ்டூவர்ட், மேத் பிரையர் ஆகியோருக்கு பிறகு ஓர் இன்னிங்சில் 6 பேரை ஆட்டம் இழக்கச் செய்த 3–வது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பட்லர் பெற்றார்.

இங்கிலாந்து வெற்றி

அடுத்து 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களை சீக்கிரம் இழந்தாலும், பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். அரைசதம் விளாசிய ஜோனதன் டிராட், வெற்றிக்கான ரன்னை பவுண்டரி அடித்து எட்ட வைத்தார்.

இங்கிலாந்து அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. டிராட் 82 ரன்களுடன் (84 பந்து, 11 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் டிரெட்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

சாம்பியன்ஸ் கோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிசுற்றை எட்டுவது இது 2–வது முறையாகும். ஏற்கனவே 2004–ம் ஆண்டும் இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறது.

வருகிற 23–ந்தேதி நடைபெறும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியா அல்லது இலங்கை ஆகிய அணிகளில் ஒன்றை இங்கிலாந்து எதிர்கொள்ளும்.

சோகம் தொடருகிறது

முக்கியமான போட்டிகளில் குறிப்பாக நாக்–அவுட் சுற்றுகளில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றியை கோட்டை விட்டு விடும் என்பது நீண்டகாலமாக அந்த அணி மீது இருந்து வரும் விமர்சனம் ஆகும். உலக கோப்பை போட்டிகளில் பல முறை அத்தகைய சோகத்தை அனுபவித்துள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு, மீண்டும் ஒரு முறை அந்த கசப்பான அனுபவத்தை தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

இந்த போட்டியுடன் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விடை பெற்றார். அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஸ்கோர்  போர்டு

தென்ஆப்பிரிக்கா

இங்ராம் எல்.பி.டபிள்யூ    (பி) ஆண்டர்சன்  0

அம்லா (சி) பட்லர் (பி) பின்    1

பீட்டர்சன் எல்.பி.டபிள்யூ    (பி) ஆண்டர்சன்  30

பிளிஸ்சிஸ் (சி) பட்லர்    (பி) டிரெட்வெல்  26

டிவில்லியர்ஸ் (சி)    பட்லர் (பி)பிராட்  0

டுமினி (பி) டிரெட்வெல்    3

டேவிட்மில்லர்(நாட்–அவுட்)    56

மெக்லரன் (ரன்–அவுட்)    1

கிறிஸ் மோரிஸ் (சி) பட்லர்    (பி) டிரெட்வெல் 3

கிளைன்வெல்த் (சி) பட்லர்    (பி) பிராட் 43

சோட்சோப் (சி) பட்லர் (பி) பிராட் 0

எக்ஸ்டிரா     12

மொத்தம் (38.4 ஓவர்களில்    ஆல்–அவுட்) 175

விக்கெட் வீழ்ச்சி: 1–1, 2–4, 3–45, 4–50,5–63,6–70,7–76,8–80, 9–175

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன்    8–1–14–2

ஸ்டீவன் பின்    8–1–45–1

ஸ்டூவர்ட் பிராட்    8.4–0–50–3

டிரெட்வெல்    7–1–19–3

ஜோ ரூட்    3–0–22–0

ரவி போபரா    4–0–19–0

இங்கிலாந்து

குக் (சி) டிவில்லியர்ஸ்    (பி) மோரிஸ் 6

பெல் (சி) டிவில்லியர்ஸ்    (பி) கிளைன்வெல்த் 20

டிராட் (நாட்–அவுட்)    82

ஜோ ரூட் (பி) டுமினி    48

மோர்கன் (நாட்–அவுட்)    15

எக்ஸ்டிரா    8

மொத்தம் (37.3 ஓவர்களில்    3 விக்கெட்டுக்கு) 179

விக்கெட் வீழ்ச்சி: 1–22, 2–41, 3–146

பந்து வீச்சு விவரம்

கிறிஸ் மோரிஸ்    8–1–38–1

ராபின் பீட்டர்சன்    9.3–1–49–0

டுமினி    5–0–27–1

சோட்சோப்    5–0–26–0

கிளைன்வெல்த்    4–0–10–1

மெக்லரன்    6–0–25–0
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top