26 May 2013

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 2 (முக்கிய சம்பவங்கள்)

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 2 
(முக்கிய சம்பவங்கள்)



1991, மே 1: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையின், ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை விலக்கிக்கொண்டு ஒரு மோட்டர் படகு விரைந்து வருகின்றது. கடற்கரையோரம் நிறுத்தப்படும் அந்த படகிலிருந்து இலங்கையை சேர்ந்த சில ஆண்களும், பெண்களும் இறங்குகின்றனர். கோடியக்கரையில் செல்வாக்கு மிகுந்த நபரான சண்முகம் அவர்களை வரவேற்கின்றார்.

1991 மே 21: அந்த விதி நிறைந்த நாளில் ராஜீவ் தனது தென் மாநில பிரச்சார பயணத்திற்கு புறப்படுகின்றார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்ட ராஜீவ், அந்த நாளின் இறுதிக் கூட்டத்திற்காக, விசாகப்பட்டினத்திலிருந்து விமானம் மூலம் சென்னையை வந்தடைகின்றார். விமானநிலையத்திலிருந்து வரும் வழியில் போரூர் மற்றும் பூந்தமல்லியில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ராஜீவ், இரவு 10.10 மணிக்கு ஸ்ரீபெரும்புத்தூர் வந்தடைகின்றார்.

மேடைக்கு சில மீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ராஜீவ், மேடையை நோக்கி நடக்கின்றார். தொண்டர்களின் மரியாதையை ஏற்றிக்கொண்டே நடந்து வந்த ராஜீவை, ஒரு பெண் நிற்கச்சொல்லி கேட்கின்றார். அவரருகே நின்ற ராஜீவுக்கு அந்த பெண்ணின் மகள் அவருக்காக எழுதப்பட்ட இந்தி கவிதையை வாசிக்கின்றார்.


ராஜீவ் கவிதையை ரசித்துக்கொண்டிருந்த அதேவளையில், நடுத்தர வயதுடைய ஒரு பெண், கையில் சந்தனமாலையுடன் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு ராஜீவை நெருங்குகின்றாள். நெருங்கி வந்த அந்த பெண்ணை, பெண் காவலர் ஒருவர் தடுக்கின்றார். நிகழவிருக்கும் பயங்கரத்தை சற்றும் அறியாத ராஜீவ், அந்த பெண்ணை தடுக்க வேண்டாம் என சைகை செய்கின்றார்.



தனது இலக்கை நெருங்கிய அந்த பெண், கையில்வைத்திருந்த சந்தன மாலையை தவற விடுகின்றாள். தரையில் விழுந்த அந்த மாலையை எடுப்பதற்காக குனிகிறாள் அந்தப் பெண். பலத்த சத்தத்துடனும் பளிச்சென்ற வெளிச்சத்துடனும் குண்டு வெடிக்கின்றது. ராஜீவ் கொல்லப்படுகின்றார்.

1991 மே 24
ராஜீவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, சி.பிஐயின் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படுகின்றது. இதற்கு மறுநாள், கோடியக்கரையில் கரையேறிய அந்த குழுவினை சேர்ந்தவர்களில் சிலர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் சிவராசன், சுபா மற்றும் முருகன் என்பதை பின்னர் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது. படகில் வந்திறங்கிய பெண்களில் தணு என்ற பெண்ணே, சந்தன மாலையை தவறவிட்டவள் என்பதையும் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது.

ஜீன் 11, 1991

கொலை நடந்த 21வது நாள், சென்னையில், பத்மா என்ற பெண்ணையும் அவரின் மகன் பாக்கியநாகனையும் சி.பி.ஐ கைதுசெய்கின்றது. 
பின், நளினியும் முருகனும் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், தேடுதல் வேட்டை தொடர்கின்றது.



ஜீன் 28, 1991
சென்னையிலிருந்து பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்து ஒரு டேங்கர் லாரியை போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின் அந்த லாரி அனுப்பிவைக்கப்படுகின்றது. நாடு முழுவதும் தேடப்பட்டு வரும் இரண்டுபேர் அந்த லாரியின் சரக்கேற்றும் பகுதியில் ஒளிந்திருப்பதை அப்போது, போலீசார் கண்டுபிடிக்கவில்லை. சிவராசனும், சுபாவும் பெங்களுருக்கு தப்பிக்கின்றனர்.

ஜீலை, 1991
கோடியக்கரை சண்முகத்தை கைது செய்த சி.பி.ஐ, மே1 ஆம் தேதி, படகில் வந்தவர்களில் சிவராசன், சுபா மற்றும் மனிதவெடி குண்டுப்பெண் தணுவும் இருந்ததை உறுதிசெய்கின்றது. கொலைக்குழுவை வரவேற்ற சண்முகம், சி.பி.ஐயின் பலத்த பாதுகாப்பிலிருந்து ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தப்புகின்றார். அதற்கு மறுநாள், அவர் காவலில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் மாளிகை வாளகத்தில், மர்மமான முறையில், தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 18, 1991
இந்தியா முழுவதும் சல்லடைபோட்டு தேடப்பட்டவந்த சிவராசனும், சுபாவும் பெங்களுரு புறநகர் கொனனகுண்டாவில், ஒரு வீட்டில் தங்கியிருப்பதை கர்நாடக போலீசார் உறுதிசெய்கின்றனர்.உடனடியாக, சி.பி.ஐ சிறப்பு விசாரணைக்குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த சில மணிநேரத்தில், கொனனகுண்டா மறைவிடத்தை, கர்நாடக போலீஸ் சுற்றி வளைக்கின்றது. இதுபோன்ற கடினமான சூழல்களில் திறம்படி செயல்படக் கூடிய என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வரவழைக்கப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 19, 1991, இரவு 7மணி
சுற்றிவளைக்கப்பட்ட வீட்டிலிருந்து துப்பாக்கிகள் வெடிக்கின்றன. அடுத்த அரை மணிநேரத்திற்கு நீடித்த துப்பாக்கிக் சூடு, இரவு எட்டு மணியளவில் மீண்டும் தொடங்குகின்றது. இம்முறை 7 சுற்றுகள் மட்டுமே வெடித்த துப்பாக்கிகள் அத்துடன் மௌனிக்கின்றன.

ஆகஸ்ட் 20, 1991, காலை 6.30
48 மணிநேரம் நீடித்த நாடகம் முடிவை நெருங்கியது. கொலைக்குழுவினர் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கமாண்டோக்கள் சிவராசனையும், சுபாவையும் சடலங்களாகவே மீட்டனர். இந்திய வரலாற்றில் இதுவரை நடத்தப்படாத மிகப்பெரிய தேடுதல் வேட்டை, மூன்று மாதங்களுக்குப்பின் முடிவுற்றது.

ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் இருந்த குறைபாடுகள் குறித்து விசாரிப்பதற்காக வர்மா கமிஷனும், சதிதிட்டங்கள் குறித்து விசாரிப்பதற்காக, ஜெயின் கமிஷனும் அமைக்கப்பட்டன. இந்த இரு கமிஷன்களும் தங்கள் அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன.

ஜெயின் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ராஜீவ் படுகொலைக்கு பின்னால் உள்ள சதியை விசாப்பதற்காக MDMA என்று அழைக்கப்படும் விசாரணை அமைப்பு 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்றுவரை தனது விசாரணையை நடத்திவருவதாக கூறப்படுகின்றது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top