26 May 2013

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 3 (ராஜீவ் கொலை மர்மங்களும்,ஆராய்ச்சிகளும்)

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 3 
(ராஜீவ் கொலை மர்மங்களும்,ஆராய்ச்சிகளும்)


ராஜீவ் கொலை: மர்மங்களும்..ஆராய்ச்சிகளும்

ராஜீவ்படுகொலைக்குப் பின்னால் பல்வேறு மர்மங்கள் ஒளிந்திருப்பதாக, தொடக்கம் முதலே பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இது தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனும், டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் எழுதியுள்ள புத்தகங்கள் அந்த மர்மங்களை ஆதாரத்துடன் கேள்வி எழுப்புகின்றன.

இந்நிலையில், நளினியின் வழக்கறிஞர் துரைசாமி எழுதியுள்ள ஒரு புதிய புத்தகம், ராஜீவ்கொலை வழக்கை மீண்டும் விவாத பொருளாக மாற்றியுள்ளது. இந்த புத்தகங்கள் எழுப்பும் கேள்விகளையும், பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளையும் விரிவாக ஆராய்கின்றது புதிய தலைமுறை.

சிவராசனின் டைரி



டைரி என்பது ஒரு மனிதனின் மறுபக்கத்தை படம்பிடித்துகாட்டும் ஆவணம். அந்தவகையில், ஒரு கொலையாளின் டைரி, விசாரணையின் மையப்பொருளாக மாறுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், கொலை நடந்து, 21 ஆண்டுகள் கடந்த நிலையில், வழக்கறிஞர் துரைசாமி தற்போது எழுதியுள்ள புத்தகம், சிவராசனுடைய டைரியை, மீண்டும் விவாதப்பொருளாக மாற்றியுள்ளது. புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்த அந்த டைரியின் பக்கங்கள் எழுப்பும் சந்தேகங்கள் பல.

கொலையாளிகள் பயன்படுத்திய மறைவிடங்களை சோதனையிட்ட சி.பி.ஐ, சிவராசனின் இரண்டு டைரிகளை கைப்பற்றியது. பின்னர் அந்த டைரிகள் தடா நீதிமன்றத்தில், ஆவண சாட்சியாகவும் தாக்கல் செய்யப்பட்டன. ரகசியங்கள் பொதிந்த அந்த டைரியின் விசாரிக்கப்படாத பக்கங்களை தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டுகின்றார் வழக்கறிஞர் துரைசாமி.

கொலை நடந்த மே21 ஆம் தேதியன்று கோராபுட், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்ட ராஜீவ்காந்தி இறுதியாக சென்னை வந்தடைகின்றார். அன்றையதினம் முழுவதும், ராஜீவ்காந்தியின் கூட்டம் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் அவர் சரியாக எத்தனை மணிக்கு வந்தடைந்தார் என்பதை சிவராசன், தனது டைரியில் வரிசையாக குறித்துவைத்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றார் துரைசாமி.

1991, மே 21
கொலை நடைபெற்ற நாளன்று, மாலை 5.30 மணிக்கு, சிவராசன் உட்பட, கொலைக்குழுவை சேர்ந்த 5 பேர், சென்னை பாரிமுனையிலிருந்து ஸ்ரீபெரம்பத்தூருக்கு பேருந்தில் புறப்பட்டதாக, சி.பி.ஐ கூறுகின்றது. இரண்டு மணிநேர பயணத்திற்குப்பின், இரவு 7.30 மணிக்கு அவர்கள் ஸ்ரீபெரம்பத்தூர் சென்றடைந்தனர் என்பது சி.பி.ஐ தரப்பு வாதம். சி.பி.ஐ கூறும் இந்த கருத்தை வழக்கறிஞர் துரைசாமி முற்றிலும் மறுக்கின்றார்.

பக்கம் பக்கமாக புரண்டோடும் டைரியில் புதைந்திருக்கும் மர்மங்கள் தொடர்ந்து நீள்கின்றன. சுழன்றோடும் எழுத்துக்களினூடாக, நம் கண்கள் பயணிக்கும் போது, அதில் எழுதப்பட்டிருக்கும் சில பெயர்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. பாரேஷ் பாருலா, அரபிந்தோ ராஜ்கோலா, இவை இரண்டும், அஸ்ஸாமில் செயல்படும் உல்பா இயக்க தலைவர்களின் பெயர்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என கூறப்படும் சிவராசனின் டைரியில்,அஸ்ஸாமில் செயல்படும், உல்பா இயக்க தலைவர்களின் பெயர்கள் ஏன் எழுதப்பட்டுள்ளன….?

சிவராசனுக்கும் உல்பாவுக்கும் என்ன தொடர்பு? அல்லது புலிகளுக்கும், உல்பாவுக்கும் என்ன உறவு?இந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயலும்போது, பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மா, எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சில உளவுத்துறை அறிக்கைகள் நம் கவனத்தை ஈக்கின்றன.



1991 ஜனவரி, 23
உளவுத்துறை தனது உயர்அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்புகின்றது. அந்த அறிக்கை, அஸ்ஸாமில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தியதற்காகவும், இயக்கத்திற்கு தடைவிதித்ததற்காகவும் ராஜீவ்காந்தியை கொலை செய்ய உல்பா இயக்கம் திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றது. இதற்கு பின் சில நாட்கள் கழித்து, இந்தியாவின் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், இடைமறிக்கப்பட்ட நேரடியோ செய்தி ஒன்றை உளவுத்துறை அனுப்புகின்றது.

1991, பிப்ரவரி, 15 
அதில், ராஜீவ்காந்தியை கொல்வதற்காக, உல்பா இயக்கம் 30 தற்கொலை படைகளை உருவாக்கியிருப்பதாக, அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவிக்கின்றது. உளவுத்துறையின் இந்த அறிக்கைகள், ராஜீவின் உயிருக்கு, உல்பா இயக்கமும் குறிவைத்திருந்ததை உறுதிசெய்கின்றன. மறுபுறம், சிவராசனின் டைரியில் உல்பா தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டள்ளன. இவற்றைக்கொண்டு பார்க்கும்போது, ராஜீவ் என்ற பொது எதிரியை வீழ்த்த, உல்பாவும், விடுதலைப்புலிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனென்றால், ராஜீவின் பயணத்திட்டப்படி அவர், மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரம்பத்தூர் பொதுக்கூட்டத்தில் கொல்லப்படாமலிருந்தால், 24ஆம் தேதி, அசாம் மாநிலம், குவஹாத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்.

சிவராசனின் டைரி, உளவுத்துறையின் அறிக்கை ஆகியவை, உல்பாவையும், விடுதலைப்புலிகளையும் சந்தேகிக்க வைக்கும் அதேவேலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, சிரோமனி அக்காளிதல் கட்சியின் தலைவர் மகந்த் சேவா தாஸ் சிங், ஜெயின் கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலத்தை படிக்கும்போது நம் சந்தேகப்பார்வை மேலும் விரிவடைகின்றது.

அந்த வாக்குமூலத்தில், 1990 ஆம் ஆண்டின் இறுதியில், பஞ்சாப் பிரிவினைவாத இயக்கமான காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஒருவரை, தான் லண்டனில் சந்தித்ததாக மகந்த சேவா சிங் தாஸ் கூறுகின்றார். அந்த சந்திப்பின்போது, எல்.டி.டி.ஈ, ஜம்முகாஷ்மீர் விடுதலை முன்னனி உட்பட பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகளும் அவருடன் இருந்ததாக தாஸ் கூறுகின்றார்.

அந்த சந்திப்பில், ராஜீவ்காந்தி கொல்லப்படபோவதாகவும், ஆனால் அவர் டெல்லியில் கொல்லப்பட மாட்டார் எனவும் காலிஸ்தான் தலைவர் தன்னிடம் கூறியதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை தனது வாக்குமூலத்தில் மகந்த் சேவா தாஸ் சிங் கூறியுள்ளார்.ஆகவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்குமூலம், ராஜீவ் படுகொலைதொடர்பாக, உல்பா மற்றும் விடுலைப்புலிகளை தாண்டி, மேலும் பல இயக்கங்களின் மீது சந்தேகத்தை எழச்செய்கின்றது.

இவை அனைத்தும் வெறும் யூகங்களாவும், கற்பனைகளாகவும் கூட இருக்கலாம், ஆனால், விசாரணை அமைப்பை பொறுத்தவரை, சிறுசந்தேகங்களுக்கும் இடமளிக்காமல் குற்றத்தை நிருபிக்க வேண்டியது அதன் கடைமை என கூறுகின்றார் வழக்கறிஞர் துரைசாமி. அந்தவகையில், ராஜீவ் படுகொலை வழக்கில், விடுலைப்புலிகள் என்ற ஒற்றை இலக்கை தாண்டி, சி.பி.ஐ தனது விசாரணை வளையத்தை விரிவுபடுத்தவில்லை என குற்றம்சாட்டுகின்றார் துரைசாமி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top