26 May 2013

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 4 (ராஜீவின் கொலையில் கே.பியின் பங்கு)

ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 4 
(ராஜீவின் கொலையில் கே.பியின் பங்கு)


ராஜீவின் கொலையில் கே.பியின் பங்கு...


சிவராசனின் டைரியும், மகந்த் சேவா தாஸ் சிங்கின் வாக்குமூலமும், ராஜீவ்படுகொலைக்கு பின்னால் ஒரு கூட்டுசதி இருப்பதை உணர்த்துகின்றன. அதேவேலையில், சிக்கலான வலைபின்னலை கொண்டு துள்ளியமாக நடத்தப்பட்ட இந்த படுகொலையில், கே.பி என்ற நிழல் மனிதன் மற்றும் சில அயல்நாட்டு உளவு நிறுவனங்களின் ரகசிய காய்நகர்த்தல்களை, பத்திரிக்கையாளர் ராஜீவ்சர்மாவின் புத்தகம் வெறிச்சம் போட்டு காண்பிக்கின்றது.

 1990. ஜீலை 12, ரேடியோ உரையாடல்
கோலாலம்பூரில் தங்கியிருக்கும் கே.பி என்ற குமார பத்மநாதனுக்கும் இலங்கையின் வடபகுதியில், மறைவிடத்திலிருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நடைபெறும் ரேடியோ உரையாடலை, இந்திய உளவுத்துறை இடைமறிக்கின்றது.

1990, ஜீலை 19, 
இடைமறிக்கப்பட்ட தகவல்கள் குறித்து உளவுத்துறையின் இணை இயக்குனர், கூடுதல் இயக்குனருக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்த கடிதத்தில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவுடன், கே.பி தொடர்பு ஏற்படத்தியிருப்பதாக கூறுகின்றார். இலங்கையின் திரிகோணமலை மீது அமெரிக்காவுக்கு இருக்கும் விருப்பத்தை பயன்படுத்தி, புலிகள் தங்களுடைய ஆயுதத்தேவையை பூர்த்திசெய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றார். மேலும் அந்த கடிதத்தில், புலிகளின் தேவை என்ன என்பது தங்களுக்கு தெரியும் என்று சி.ஐ.ஏ கூறியுள்ளதாகவும், அந்த உதவி இருதரப்பிற்கும் பயன்படும் வகையில் செய்யப்பட வேண்டும் என்றும், சி.ஐ.ஏ, புலிகளிடம் கூறியுள்ளதாகவும் கூறுகின்றார்.

1990, செப்டம்பர் 4
இதன்பின் ஒரு மாதம் கழித்து புலிகளின் ரேடியோபேச்சுக்களை உளவுத்துறை இடைமறிக்கின்றது. இம்முறை, தரையிலிருந்து விண்ணுக்கு தாவும் ஏவுகணைகளை தான் எதிர்பார்ப்பதாக பிரபாகரன், கேபியிடம் தெரிவிக்கின்றார். இந்த செய்திகள் மூலம், இந்தியாவில் ஒரு மிகப்பெரிய சதிச்செயலலை நடத்த, சி.ஐ.ஏ முயன்றுவருவதை உளவுத்துறை உணர்ந்திருக்க வேண்டும்.

1991 ஜனவரி 16, இரவு 7 மணி
வளைகுடா போர் துவங்குகின்றது. OPERATION DESERT STORM என்று பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையின் மூலம், ஈராக்கின் முக்கிய இலக்குகளை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குகின்றன.

பிப்ரவரி 7, 1991
ஈராக்போர் பற்றி ராஜீவ் ஒரு அறிக்கையை வெளியிடுகின்றார். அதில் ஒரு பிராந்தியத்தின் பாதுகாப்பை நிலைநாட்ட, மற்றொரு பிராந்திய படைகள் முயன்றால் அது அந்த பிராந்தியத்தன் பாதுகாப்புக்கு மேலும் அச்சுறத்தலை ஏற்படுத்தும் என கூறுகின்றார்… அதுவே தற்போது அரேபிய பிராந்தியத்தில் நிகழ்வதாகவும் ராஜீவ் கூறகின்றார். ஒட்டுமொத்தத்தில் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை ராஜீவ் கண்டிக்கின்றார்…. இதன் பின்னர் ராஜீவ்காந்தி கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஈராக் போரில் ஈடுபட்ட அமெரிக்க போர் விமானங்கள், மும்பையில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள வழங்ககப்பட்ட அனுமதியை இந்தியா ரத்து செய்கின்றது.

1991, மார்ச் 13, புதுடெல்லி
இதனிடையே, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தலைவர் யாசர் அராபத்தின் தூதுவர் ராஜீவ்காந்தியை சந்திக்கின்றார். அச்சந்திப்பில் ராஜீவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரை எச்சரிக்கை செய்கின்றார். ஐரோப்பா மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த ரகசிய தகவல், யாசர் அராபத்துக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.


அராபத்தின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜெயின் ஏற்கனவே, நாடுகளின் ஸ்திரத்தன்மையை குழைத்தது தொடர்பாகவும், கொலைச்சதியில் ஈடுபட்டது தொடர்பாகவும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ மீது, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அராபத்தின் எச்சரிக்கை இந்த வகையில் ஆராயப்பட்டிருக்க வேண்டும் என கூறுகின்றார். மேலும், இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் முலமாக, சி.ஐ.ஏ வேலை செய்திருக்க வேண்டிய சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய உளவு நிறுவனம் விசாரணை செய்திருக்க வேண்டும்  எனவும் கூறுகின்றார்.
இதனிடையே, பி.சி.சி.ஐ என்ற சர்வதே வங்கியின் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக, அமெரிக்க செனட்டர் ஜான் கெரியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகின்றது. அந்த குழுவின் அறிக்கை, சி.ஐ.ஏ தன்னுடைய வேலைகளுக்கு பி.சி.சி.ஐ வங்கியை பயன்படுத்திக்கொண்டதாக கூறுகின்றது. அந்த பி.சி.சி.ஐ வங்கியில் கே.பி கணக்கு வைத்திருப்பதை பின்னர் சி.பி.ஐ கண்டுபிடிக்கின்றது.


பி.சி.சி.ஐ வங்கியை, அரசியல் சாமியார் என்று அழைக்கப்படும் சந்திராசாமி, ஆயுதவியாபாரியான, அட்னன் கசோக்கியின் மூலம் பயன்படுத்தி வந்துள்ளதாக ஜெயின் கமிஷன் கூறுகின்றது. மேலும், அட்னன் கசோக்கி, சி.ஐ.ஏவுடன் உறவு வைத்திருந்ததை உறுதிப்படுத்த முடிவதாகவும் நீதிபதி ஜெயின் கூறுகின்றார்.


மிகவும் கவனிக்கதக்கவகையில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன், 1990 மற்றும் 91க்கு இடைப்பட்ட காலத்தில், அட்னன் கசோக்கியின் பி.சி.சி.ஐ வங்கி கணக்கிற்கும், கே.பியின் வங்கி கணக்கிற்கும் இடையே பணப்பறிமாற்றம் நடைபெற்றுள்ளதை கெர்ரி குழு அறிக்கை உறுதிசெய்கின்றது.

கே.பியின் பி.சி.சி.ஐ வங்கி கணக்கை சி.பி.ஐ சோதனை செய்தபோது அதில் 858 ரூபாய் மட்டுமே மீதம் இருந்தது. 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த வங்கி கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை, சி.பி.ஐ கண்டுபிடித்தது.

ஒரு அரசியல் சாமியார், ஒரு ஆயுத வியாபாரி ,இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு அயல்நாட்டு சக்தி இந்த முக்கோணச்சதியின் பின்னனியில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் ஏராளம்.இதை உணர்ந்ததன் காரணமாகத்தான், நீதிபதி ஜெயின் தனது இறுதி அறிக்கையில், ராஜீவ்கொலையில் வெளிநாட்டு சதி இருப்பதை முழுவதுமாக மறுக்க முடியாது என கூறுகின்றார். அதை தாண்டி மிக முக்கியமாக, கே.பி என்ற குமாரா பத்மநாதன் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றார்.

கடந்தகாலத்தின் எதிரியான இலங்கை அரசிடம், அறிவிக்கப்படாத அரசு விருந்தினராக, தற்போது தஞ்சமடைந்துள்ளார் கே.பி. வெகு நேர்த்தியாக நடத்தப்பட்ட ராஜீவ் படுகொலையில், சிவராசனின் டைரி எழுப்பும் கேள்விகள், சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் போன்ற இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர கே.பி பேசியாக வேண்டும்.இவற்றை அறிந்திருந்தும், இந்தியாவின், நட்புநாடான இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கே.பியை, MDMA இதுவரை முறைப்படி விசாரித்ததா? என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top