10 ஆண்டுகளில், தமிழக மக்கள் தொகை 97 லட்சம் அதிகரிப்பு
சென்னை : தமிழகத்தின் மக்கள் தொகை, 7.21 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில், தமிழக மக்கள் தொகை, 97 லட்சம் அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம், 9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.

ஆண்கள் அதிகம்: தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 2011ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி, 7 கோடியே, 21 லட்சத்து 30. இக்கணக்கெடுப்பு, 2011 மார்ச், 1ம் தேதி அதிகாலை வரையில் நிலவிய மக்கள் தொகையின் அடிப்படையில், சேகரிக்கப்பட்டது.மொத்த மக்கள் தொகையில், 3 கோடியே, 61 லட்சத்து, 37 ஆயிரத்து, 975 பேர் ஆண்கள்; 3 கோடியே, 60 லட்சத்து, 9 ஆயிரத்து, 55 பேர் பெண்கள்.
மொத்த மக்கள் தொகையில், பெண்களை விட, 1 லட்சத்து, 28 ஆயிரத்து, 920 ஆண்கள் அதிகமாக உள்ளனர். 2001ம் ஆண்டிலிருந்து, 2011ம் ஆண்டு வரையிலான, 10 ஆண்டுகளில், தமிழகத்தின் மக்கள் தொகை, 97 லட்சம் அதிகரித்துள்ளது.
சென்னை முதலிடம்: கிராமப் புறங்களில் 3.72 கோடி பேரும், நகர்ப் புறங்களில், 3.49 கோடி பேரும் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில், 23 லட்சம் பேரும், நகர்ப் பகுதிகளில், 74 லட்சம் பேரும், கடந்த, 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளனர். சென்னை மாவட்டம், 46.5 லட்சம் மக்கள் தொகையுடன்,
மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. காஞ்சிபுரம், 39.99 லட்சம் பேருடன், இரண்டாம் இடத்தையும், வேலூர், 39.3 லட்சம் பேருடன், மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், 5.6 லட்சம் பேருடன், கடைசி இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி, கடந்த, 10 ஆண்டுகளில், 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப் பகுதிகள், 6.6 சதவீத வளர்ச்சியும், நகர்ப்புறங்கள், 27 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளன. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 39 சதவீதம், திருவள்ளூர் மாவட்டத்தில், 35.3 சதவீதம், திருப்பூரில், 29.1 சதவீதம் பேரும் அதிகரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், மக்கள் தொகை வளர்ச்சி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை வளர்ச்சி, மைனஸ், 3.5 சதவீதமாக உள்ளது.சதுர கி.மீட்டரில் 555 பேர் தமிழகத்தில், ஒரு சதுர கி.மீட்டர் பரப்பில், சராசரியாக, 555 பேர் வசிக்கின்றனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஒரு சதுர கி.மீட்டரில், 26,553 பேர் வசிக்கின்றனர். அடுத்ததாக, கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,111 பேரும், திருவள்ளூரில், 1,098 பேரும் வசிக்கின்றனர். மிகக் குறைந்த அளவாக, நீலகிரி மாவட்டத்தில், ஒரு சதுர கி.மீட்டர் பரப்பில், 287 பேர் வசிக்கின்றனர். சிவகங்கையில், 316 பேரும், பெரம்பலூரில், 322 பேரும் வசிக்கின்றனர். இவ்வாறு, கிருஷ்ணா ராவ் கூறினார்.
பெண்களே அதிகம்:ஆண் - பெண் பாலின விகிதம் குறித்து, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம்:தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்கள், 996 என உள்ளது. இந்தவிகிதம் கிராமப் புறங்களில், 993 எனவும், நகர்ப்புறங்களில், 1,000 எனவும் உயர்ந்துள்ளது. கோவை, சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை,
நாகபட்டினம், நீலகிரி, தஞ்சை ஆகிய, 16 மாவட்டங்களில், ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் உள்ளனர். தஞ்சையில், 1,035 பேரும், நாகபட்டினம் மாவட்டத்தில், 1,025 பெண்களும் உள்ளனர். பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில்,தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 946 பெண்களே உள்ளனர். அடுத்து, சேலத்தில், 954 பெண்களும், கிருஷ்ணகிரியில், 958 பெண்களும் உள்ளனர்.
0 comments