தமிழகம் முழுவதும் லிட்டர் 10 ரூபாய்க்கு
"அம்மா மினரல் வாட்டர்"
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு செப்டம்பர் 15ம் தேதி
விற்பனை தொடக்கம்
ஏழை-எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, லிட்டர் 10 ரூபாய் என்ற குறைந்த விலையில், பாதுகாப்பான குடிநீரை வழங்கிட, அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தமிழகம் முழுவதும் "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையங்களை அமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிதிக் கொள்கை ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுற்று, பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறிக் கொண்டே செல்வதன் விளைவாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் செய்வதறியாது விழி பிதுங்கி, இதனை எதிர்கொள்ள வழி தெரியாத சூழ்நிலையில், விலைவாசி என்னும் கொடூரத்திலிருந்து மக்களை காக்கும் வகையில், தமிழக மக்களை வாழவைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை தமது தலைமையிலான அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் "மினரல் வாட்டர்" குடிநீர் தயாரிக்கும் வகையில், "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் - "மினரல் வாட்டர்" தயாரிப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் - இந்த நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் திறன் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் - ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசுப் போக்குவரத்து கழக நிறுவனங்களினால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்த "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு விற்பனையும் அன்றைய தினமே தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இதனைத் தொடர்ந்து மேலும் 9 இடங்களில் "அம்மா மினரல் வாட்டர்" உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
0 comments