ராமேசுவரம் : தடையை மீறி ஊர்வலம் அண்ணாதுரை எம்.எல்.ஏ.உள்பட 200 பேர் மீது வழக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே யூனியன் அங்கீகார தேர்தல் நடைபெற்றபோது, ஒரு யூனியனுக்கு ஆதரவாக ராமேசுவரத்தில் சி.ஐ.டி.யூ. அமைப்பினர் வாக்கு சேகரித்தனர்.
இதற்கு மற்றொரு யூனியன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் தலையிட்டனர். இந்த சம்பவத்தின்போது, போலீசாருடன் சி.ஐ.டி.யூ. அமைப்பினர் வாக்குவாதம் செய்தததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கூறி சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்தும், வழக்கை வாபஸ்பெற வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
ராமேசுவரம் என்.எஸ்.கே. வீதியில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை தலைமையில் திரண்ட கட்சியினர், மேலத்தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அவர்களை தடுத்த போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். ஆனால், தடையை மீறி ஊர்வலமாகச் சென்று, அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் விசாரணை நடத்தி அண்ணாதுரை எம்.எல்.ஏ. உள்பட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.













0 comments