சென்னையில் வாடகைக்கு குடியிருப்போர்
பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது
சென்னை, டிச. 1:
சென்னையில் சமூக விரோத குற்ற செயல்கள் நடை பெறுவதை தடுக்க வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் விவரங்களை போலீஸ் நிலையங்களில் வழங்க வேண்டும் என கமிஷனர் ஜார்ஜ் அறிவித்து இருந்தார்.
அதற்கான விண்ணப்பங்கள் போலீஸ் நிலையங்களிலும், ஆன்லைனில் டவுன்லோடு செய்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று முதல் 60 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் விண்ணப்படிவங்கள் பெற அதிக அளவில் பொதுமக்கள் வரவில்லை. இருந்தாலும் ஒரு சிலர் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
விண்ணப்ப படிவத்தின் மேல் பகுதியில் வீட்டு உரிமையாளரின் விவரங்களும், அதன் கீழ் வாடகை தாரர்களின் விவரங்களும் இடம் பெற்றுள்ளது.
விண்ணப்பத்தில் குடியிருப்போரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர், முன்பு குடியிருந்த இடம், நிரந்தர முகவரி போன்றவை குறிப்பிட வேண்டும்.
வாடகைக்கு குடியிருப் போரின் போட்டோ ஒட்ட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் வீட்டு உரிமையாளரின் கையொப்பம் இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை நகல் மற்றும் துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தால் அதன் நகல் போன்றவையும் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை போலீஸ் நிலையத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவற்றை நேரில் வழங்க வேண்டியதில்லை. தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ அனுப்பலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 comments