25 November 2013

ஊட்டி மலை ரெயில் பாதையில் இன்று மீண்டும் மண் சரிவு

ஊட்டி மலை ரெயில் பாதையில் இன்று மீண்டும் மண் சரிவு


குன்னூர், நவ. 25:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி மலை ரெயில் பாதையில் கல்லாறு–அடர்லி ரெயில் நிலையம் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறாங்கற்களும் உருண்டு விழுந்தன. இதனால் நேற்று (24–ந் தேதி) முதல் நாளை (26–ந்தேதி) வரை ஊட்டி மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் கிடக்கும் பாறைகள் மற்றும் மண்சரிவை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மழைபெய்யத் தொடங்கியது.

நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கனமழை காரணமாக ஊட்டி மலைரெயில் பாதையில் காட்டேரி, கல்லார் பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. அவற்றை அகற்றும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் பாறாங்கற்கள் இன்று மாலைக்குள் அகற்றப்படும் எனத்தெரிகிறது. அதன் பின்னர் மலைரெயில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. வெள்ளோட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நாளை(செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல் மலை ரெயில் இயக்கப்படும்.

ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. இன்று காலை வெகுநேரமாகியும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.

தொடர்மழை காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் வாட்டி யெடுக்கிறது. இதனால் முதியவர்கள் மற்றும் சிறுவர்–சிறுமிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பேரிடர் மீட்பு படையினரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் இடர்பாடு ஏற்பட்டாலும் இந்த இடத்துக்கு ஒரு சில நிமிடங்களில் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top