19 October 2013

ஏற்காடு தேர்தலில் ஓட்டு போட பணம் வாங்கினால் சிறை

ஏற்காடு தேர்தலில் ஓட்டு போட பணம் வாங்கினால் சிறை


சேலம் :

              ‘‘ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பது மட்டுமல்ல, வாங்குவதும் குற்றம் தான். வாக்களிக்க பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது,‘‘ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். ஏற்காடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த பெருமாள் இறந்ததை தொடர்ந்து டிசம்பர் 4ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற கட்சிகள் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நேற்று சேலத்தில் ஆய்வு செய்தார்.

 அரசுத்துறை உயர் அதிகாரிகள், காவல்துறையினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் பிரவீண்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏற்காடு இடைத்தேர்தலுக்காக 120இடங்களில் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தொகுதி முழுவதும் 24 மணிநேர பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

 தேவைப்பட்டால் சோதனைச்சாவடிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்தல் நடத்தை விதிகளை செயல்படுத்துவதில் குழப்பம் உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். முன்பு நடந்த இடைத்தேர்தல்களில் மாவட்டம் முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே விதிமுறைகள் அமலாக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சில விதிமுறைகள் மாவட்டம் முழுமைக்கும் பொருந்தும்.

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பது மட்டுமல்ல. வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும். ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்காளிப்பதற்கு, வாக்காளர் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால், கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் வந்தால் முதலில் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். பின்பு சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதே போல் வாகனச் சோதனையின் போது ரூ.15ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் விசாரணை நடத்தப்படும். இதில் சந்தேகம் எழுந்தால் பணத்தை பறிமுதல் செய்ய வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்புகை சீட்டுக்கு வாய்ப்பில்லை: இந்த தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வழங்குவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் ஒரு கண்ணாடி ஸ்கிரீனில் பார்த்து, வாக்களித்ததை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீண்குமார் தெரிவித்தார்.

கடைசி பட்டன் உண்டு
‘‘ஏற்காடு தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளராக உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அராரோ நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர், ஏற்காட்டுக்கு வந்து பணிகளை பார்வையிட உள்ளார். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கான 49ஓ முறை ஏற்காடு தேர்தலில் நடைமுறைக்கு வரும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இடம் பெறும் வேட்பாளருக்கு அடுத்து இதற்கான பட்டன் பொருத்தப்படும். இங்கு எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது உறுதியான பிறகே, பட்டனை இணைப்பதற்கான பணிகள் துவங்கும். தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து 18004257050 என்ற இலவச எண்ணில் புகார் தெரிவிக்கலாம்‘‘ என்றும் பிரவீண்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் மீதான புகார் ஆணையத்துக்கு பரிந்துரை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில், மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு நடத்தியது  குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து வரும் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top